Showing posts with label Tamil Stories. Show all posts
Showing posts with label Tamil Stories. Show all posts

கதை: உழைத்து பெற்றதை மனம் இழக்க நினைக்காது


உழைப்பின் அருமை 

ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பிவைத்தார் அவர் மகனோ எந்த வேலையும் செய்ய வில்லை ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல் 6 மாதம் கடந்தவுடன் ஒரு தங்க நாணயத்தை கூலியாக கொடுத்து அனுப்பினார்

அந்த நாணயத்தை தனது அப்பாவிடம் மகன் கொண்டு வந்து கொடுத்தான் அதனை வாங்கிய அப்பா அதனை தூக்கி தூர எறிந்தார் அதை கண்ட மகனோ ஒன்றும் கண்டு கொள்ளாமல் தனது படுக்கை அறைக்கு சென்று விட்டான்

மீண்டும் இன்னொரு தெரிந்த நண்பரிடம் 3 மாதத்திற்கு வேலைக்கு அனுப்பினார் அங்கும் இப்படித்தான் எந்த வேலையும் செய்யாமல் 3 மாதம் கடத்தினான் ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் 2 தங்க நாணயங்கள் கொடுத்து அனுப்பினார் அதையும் அப்பாவிடமே கொண்டு வந்து கொடுத்தான் முன்பு போலவே அந்த 2 நாணயங்களையும் தூக்கி தூர எறிந்தார் அப்போதும் கண்டு கொள்ளாமல் மாடிக்கு சென்று விட்டான்

சிறிது காலம் கழித்து அறிமுகம் இல்லாத ஒருவர் இடத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார் அங்கு 3 மாதம் வேலை செய்து விட்டு 1/2 தங்க நாணயத்தை ஊதியமாக கொண்டு வந்து கொடுத்தான் முன்புபோலவே அதையும் தூர தூக்கி எறிந்தார் ஆனால் இம் முறை அவனுக்கு மிக பெரிய அளவில் கோபம் வந்தது விட்டது


இது என்ன தெரியுமா?? எனது வேர்வை?? எனது உழைப்பு ???3 மாதம் தூங்கமால் உழைத்து இருக்கிறேன் அதற்க்கான கூலி !!!!இவளது அலச்சியமாக தூக்கி எறிந்து விட்டாய்நீ எல்லாம் ஒரு மனிதனா???
ஈசி சேரில் படுத்து கிடக்கும் உனக்கு உழைப்பின் வலிமை தெரிய விலைதெரிந்தால் இதை எறிந்து இருப்பாயா என்று கோபமாக கத்தினான்.

அபொழுது அப்பா சொன்னார் இதைத்தான் உன்னிடம் நான் எதிர்பார்த்தேன் முன்பு நீ உழைக்காமல் கொண்டு வந்து கொடுத்த தங்க நாணயத்தை நான் தூர எறிந்த பொழுது உனக்கு கோபம் வரவில்லை காரணம் அப்போது உனக்கு உழைப்பின் அருமை தெரிய வில்லை இப்போது நீ உழைத்து கொண்டு வந்த இந்த தங்க நாணயத்தை நான் எறிந்த பொழுது உனக்கு இவளது கோபம் வருகிறது காரணம் நீ கஷ்ட்ட பட்டு உழைத்து பெற்று வந்ததால் உழைப்பின் வலிமை உனக்கு தெரிகிறது இதைத்தான் நான் உன்னிடம் எதிர் பார்த்தேன் என்று சொல்லி மகனையும் அந்த 1/2 பவுன் தங்க நாணயத்தையும் மாறி மாறி முத்தம் இட்டார்

உழைக்காமல் எது கிடைத்தாலும் நிலைக்காது அதனின் அருமை தெரியாது
உழைத்து பெற்ற பொருளை ஒருபோதும் மனம் இழக்க நினைக்காது தகப்பனாக இருந்தாலும் மனம் தட்டி கேட்க்க தயங்காது

கதை: மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள்


எது மகிழ்ச்சி?

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.

அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.

பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.

சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான்.நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.

அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.

இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.

இரண்டு வாசகங்களுமே சிறுவன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது. 


நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள். 
எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.

கதை: பண்ணையார் எலிப்பொறி வாங்கி வந்தார்


எலி

ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது...
ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் எஜமானனும்,
எஜமானியும்,
 ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது...


உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது...

"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார்.

எனக்கு பயமாக இருக்கிறது என்றது.."

இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.."

உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.

நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.."

உடனே அது ..
பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று..
அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.

வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு,
"நான் எலிப் பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்..." என்றது.

மனம் நொந்த எலி... அடுத்தாக...
பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது...

ஆடும் அதேபதிலைச் சொல்லியது.

அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை...

"எலிப்பொறியை பார்த்து,
என்னையும் பயப்படச் சொல்கிறாயா?"
என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு...
எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு...

பண்ணையாரும்,
அவர் மனைவியும், தூங்கப் போயினர்...

ஒரு அரை மணி நேரத்தில்,,
*"டமால் "* என்றொரு சத்தம்.

எலிதான் மாட்டிக் கொண்டு விட்டது என்று என்னிய  பண்ணையார் மனைவி ஓடிவந்து..
எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

ஆனால்...
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும்..
பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி...

"பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.."
சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது.."
என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை.

கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது.
கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்...

அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்...

வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட 
ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.....

விருந்தாக ஆடும் உயிரை விட்டது..

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

"எலி தப்பித்து விட்டது. அப்பாடா..."

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் 
"என்ன..? என்றாவது கேளுங்கள்.

ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

அடுத்த முறை... நம்முடையதாகவும் இருக்கலாம்..

கதை: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?


மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.
.
மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.
.
மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.
.
மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க.

கணவன்: சரி, வெட்டிக்காதே.
.
மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.
.
மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது?

கணவன்: சரி, வெட்டிக்காதே.
.
மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.
.
மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு.

கணவன்: சரி வெட்டிக்காதே.
.
மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.
.
மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு.

கணவன்: சரி, வெட்டிக்காதே.
.
மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.
.
மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை.

கணவன்: சரி, வெட்டிக்காதே.
.
மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.
.
மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.
.
மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.
.
மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு?

கணவன்: சரி, வெட்டிக்காதே.

இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம்.

கதை: இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே


ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. 

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. 

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . 

குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்
வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .இது கொத்துனா உடனே மரணந்தான். 

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது 

" என்று குட்டிக் குரங்கின் காது படவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , 

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,  

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. 

"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே". 
 
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய் விட்டது.

கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். 

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டு விட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. 

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. 
 
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது. 

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .

குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

படித்ததில் பிடித்தது.

கதை: மிகச் சிறந்த பொய்க்கு பரிசு


மிகச் சிறந்த பொய்க்கு பரிசு!

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.

அந்த ஏழை சொன்னான், “அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்.”

அரசனுக்கு கோபம் வந்து விட்டது.

“யாரிடம் புளுகுகிறாய்.? நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?” என்று உரத்தக் குரலில் சுத்தினான்.

உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.

கோபத்திலும், அவசரத்திலும் தாம் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்த அரசன், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ள முடியாது!” என்று அவசரமாக மறுத்தான்.

ஏழை விவசாயி சொன்னான்,

“சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது. உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா. எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, கடனை அடையுங்கள்.”

கையைப் பிசைந்த அரசன், அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான். மன்னனாக இருந்தாலும் அவனும் மனிதன்தான் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் உள்ளது.

ஒரு மன்னனுக்கு சொர்க்கம், நரகம் குறித்த பெருத்த சந்தேகம் வந்தது. அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.

இந்நிலையில், காட்டில் வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரு சாமியாரைப் பார்த்தான் மன்னன். இவரிடம் கேட்கலாம் என்று முனிவர் தவம் கலைய காத்திருந்தான். கண் விழித்தார் முனிவர்.

“யார் நீ” என்று கேட்டார்.

“நான் மன்னன்…”

“சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?”

“நான் ஒரு நாட்டுக்கே மன்னன் என்கிறேன். என்னைப்பார்த்து சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் என்கிறீரே?”

“எனக்கு உன்னைப் பார்த்தால் திருடனைப்போல் தெரிகிறது” என்றார் முனிவர்,

மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. “முனிவராயிற்றே என்று பொறுமையாக காத்திருந்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தால் என்னையே திருடன் என்கிறீரா.? உம்மை என்ன செய்கிறேன் பார்” என்று வாளை உருவினான் மன்னன்.

முனிவர் சிரித்துக்கொண்டே, “இதுதான் நரகத்துக்குச் செல்லும் வழி!” என்றார்.

மன்னனுக்கு சட்டென்று ஞானம் தோன்றியது. கேள்வி கேட்காமலே தாம் வந்த நோக்கத்தை ஞானதிருஷ்டியால் அறிந்து, பதில் சொல்லிய மகாமுனியாக காட்சி தந்தார் முனிவர்.

வாளை கீழே போட்ட மன்னன், “சுவாமி என்னை மன்னிக்க வேண்டும்!” என்று பணிந்தான்.

“இதுதான் சொர்க்கத்துக்குச் செல்லும் வழி!” என்றார் ஞானி.

சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான் மன்னன்.

உயர்பதவியில் இருக்கும்போது, எதையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துப் பேசுவதே சிறப்பானது.

கதை: தையல்காரர் நாளாந்தம்


ஒரு ஊரில் ஒரு வயதான தையல்காரர் வாழ்ந்து வந்தார். தையல் வேலைப்பாட்டில் அவர் வித்தகராக இருந்ததால் அதிக வாடிக்கையாளர்கள் அவரை நாடி வந்தனர், அதனால் நல்ல காசும் சம்பாதித்து விட்டார்.

ஒரு நாள் ஒரு ஏழை யாசகன் அவரிடம் வந்து சொன்னார்:
உங்கள் தொழில் திறமையால் நிறைய பணம் சம்பாதிக்கிறீர்கள். ஏன் நீங்கள் ஊரிலுள்ள ஏழைகளுக்கு உதவக்கூடாது? 

ஊரிலுள்ள இறைச்சிக்கடைக்காரரை பாருங்கள்! பெரிய பணம் இல்லை, ஆனாலும் நாளாந்தம் ஏழைகளுக்கு இலவசமாக இறைச்சி வழங்குகிறார். 

ஊரிலுள்ள காய்கறிக்கடைக்காரரை பாருங்கள்! பெரிய பணம் இல்லை, இருந்தாலும் ஏழைகளுக்கு முடியுமான அளவு கொடுத்துதவுகிறார். 

ஊரிலுள்ள பால்காரனைக்கூட பாருங்கள்! பெரிய பணம் இல்லை, இருந்தும் ஒரு தொகை பாலை இல்லாதவர்களுக்கு தர்மம் செய்கிறார். 

உங்களுக்கு என்ன குறை? எதுவும் கொடுப்பதாக தெரியவில்லையே! என்றார். எதுவும் பேசாமல் புன்னகைத்து விட்டு அமைதியாக அவர் வேலையை தொடர்ந்தார். 

கடுப்பாகிய ஏழை யாசகன், இடத்தை காலி செய்தான். ஊரின் மூலை முடுக்கெல்லாம் சென்று 'குறித்த தையல்காரர் நல்ல பணக்காரர். ஆனால் கஞ்சன், எதுவும் கொடாதவன் என்று பரப்பிவிட்டார். ஊர் மக்களும் அவரை தப்பாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர். 

காலங்கள் உருண்டோடின. வயதான தையல்காரர் நோய்வாய்ப்பட்டார். ஊரவர்கள் யாரும் நோய் விசாரிக்கக்கூட வராத நிலையில் மரணித்துவிட்டார். 

அவர் மரணத்தோடு இறைச்சிக்கடைக்காரர், காய்கறிக் கடைக்காரர், மற்றும் பால்காரர் எல்லோரும்  தானமாக வழங்குவதையும் நிறுத்திவிட்டனர். 

இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட போது, எங்களுக்கு தையல்காரர் நாளாந்தம் பணம் தருவார். ஏழை எளியவர்களுக்கு எங்களிடம் உள்ள  அத்தியாவசிய பொருள்களை கொடுக்கும்  படி சொல்லுவார்' என்று பதில் அளித்தனர். 

👉🏻 சிலர் உன்னை தப்புக்கணக்கு போடுவார்கள்.

👉🏻 சிலர் உன்னை பனிக்கட்டியை விட பரிசுத்தமாக பார்ப்பார்கள்.

👉🏻 அவர்களால் உனக்கு தீமை நடக்கவும் போவதில்லை.

👉🏻 இவர்களால் நன்மை நடக்கவும் போவதில்லை. 

👉🏻 உன்னைப் பற்றி நீயும் உன் இறைவனும் தெரிந்தது வைத்துள்ளதே உனக்கு முக்கியம்.  

👉🏻 மேலோட்டமாக பார்த்து, யாருக்கும் தீர்ப்பு வழங்க முற்படாதே!  

👉🏻 நீ விட்டுச் செல்லும் சுவடுகளை நீ மறைத்தாலும் காலம் காட்டிக் கொடுக்கும்

ஆசிரியர் கண்டிக்காதவனை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்


ஒரு உண்மை சம்பவம்.

ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது. சிகரெட் பிடிக்கப் பழகினான். பிறகு ஒரு திரைப்பட நடிகருக்கு ரசிகர் ஆனான். பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான். 

தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான். அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.

ஜாதி, மத, இன இயக்கத்தில் இணைந்தான் அந்தத் இயக்கத் தலைவனை ஆட்சியில் அமர்த்த அரசியல் செய்தான்.

அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால். பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான். இறுதியில் கொ**காரனாகவும் ஆனான்...

கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து, இறுதியாக... தூ*கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூ*கிற்கான நாளும் குறிக்கப்பட்டது.

தூ*கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது. பெற்றோரை சந்திக்க விரும்பினான் பெற்றோரும் வந்தனர்.

கதறினர் போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூ*குக்கு அனுப்பி விட்டதாக பெற்றோர் அழுது புலம்பினர்.

மகன் அமைதியாகச் சொன்னான். அவர்கள் காரணமில்லை... நீங்கள்தான் காரணம், நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது. ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.

வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும். அடித்து மிரட்டி. போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.

அதிலிருந்து ஆரம்பித்த என் வீழ்ச்சிதான் தூ*கு மேடை வரை வந்திருக்கிறது! என்னை காப்பாற்ற ஜாதியோ, மதமோ, இனமோ அதன் தலைவனோ, அரசியலோ அந்த நடிகனோ இல்லை கடவுளாலும் முடியாது சட்டம் தன் கடமையை செய்கிறது.

“எனது தூ*குக்கு நீங்கள்தான் காரணம்" என அழுதபபடியே சொன்னான். ஆசிரியர் கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும். இதை பெற்றோர் உணரவேண்டும்.

பரிவும், பாசமும் பிள்ளைகளின் பண்பையும், வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாற்றிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்.

கதை: ஏமாற்றுவதற்கு "அல்வா" கொடுப்பது


ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது,கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிவந்திருக்கிறான்,அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்,......

அடுத்த நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க "பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா,ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு" என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா.

அதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை,........

முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை,இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான்,



அடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை..... ஏன் என்றால,
அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை,

அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால்....
அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு "அல்வா" கொடுப்பது என்ற பெயரும் வந்தது

அல்வா பிறந்த கதை ... இதுதான்....

கதை: அமைதியை ஓவியமா வரைபவர்களுக்கு பரிசு


குட்டிக்கதை :

நாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒருமுறை 'அமைதி'ன்னா என்ன? அப்படிங்கற தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு. இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.

மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.

ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடி வாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.

மற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.

ஆனா ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட்டுமா இடியோட மழை வேறே கொட்டிட்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்த்தப்ப நீர் வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.

''இந்த ஓவியத்தை வரைந்தது யார்?'' சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டார்.

மன்னர், ''இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை, கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?'' ன்னாரு.

அதுக்கு ஓவியர் ''மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல....

இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்க விடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!.

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!

''சபாஷ்... அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்'' ன்னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.

கதை: வீரத்தின் உச்சம் அமைதி


ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.

ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.

அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.

அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார்.

அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.

மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.

இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.

அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார்.

அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.

புரியவில்லை” என்றார் அரசர்.

எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.

அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்......

கதை: தகுதியுள்ளவன் வென்றால் நாட்டுக்குப் பாதுகாப்பு


நேர்மை

ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக ராஜா பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதில் ஜெயிப்பவன் தளபதியாவான்.

அது மட்டுமின்றி ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும்.

இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால்

நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரன் திடீரென்று நுழைந்தான். அவனிடம் ரகசியமான குரலில், "தம்பி... நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய்.

எனவே போட்டியே இல்லாமல் நீதான் ஜெயிப்பாய்" என்றான். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

சமையல்காரன் மீண்டும் சொன்னான். "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால் காலையில் எழுந்திருக்கவே முடியாது.

ராஜா சோம்பேறியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி. இதற்குப் பிரதிபலனாக, நீ பரிசாகப் பெறும் தங்கத்தை எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?" என்றான்.

சமையல்காரன் சொல்லி முடித்தவுடனேயே அவன் அவசரமாய்ச் சொன்னான், "ஐயா!! இது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய பதவி.

தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே, எனக்குத் தகுதி இருந்தால் நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி வேண்டாம். அதே நேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என் உணவில் மருந்தைக் கலந்து விடமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்" என்றான்.
சமையல்காரன் புன்னகைத்தபடி,

"கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்.நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் சமையல்காரனின் உதவியாளன், மற்றுமுள்ள போட்டியாளனிடம் அதே பேரத்தைத் தொடங்கியிருந்தான். ஆனால் அங்கே நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக் கொண்டான். போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும் கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தான்.

உதவி சமையல் காரனும், "காரியத்தை சிறப்பாக முடிப்பேன். நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி" என்றான். இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள்.
பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில் எழுந்து போட்டிக்குக் கிளம்பினான். அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட யாருமே வந்திருக்கவில்லை.

மன்னர் திடீரென அந்த இடத்தில் பிரவேசித்து, "புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள் என்று சொல்லித் தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார்.

அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல் தேர்வான அதிர்ச்சி. மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி.

தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

மன்னர் அவனை அணைத்துக் கொண்டார். "மகனே! நடப்பதெல்லாம் கனவு போலத்
தோன்றுகிறதா ? உங்களுக்கான இறுதிப்
 போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது.
காசைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப் பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள்.

தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில் அவனைப் போன்றவர்கள் இருந்தால் நாட்டையே கூட விற்றுவிடுவார்கள்.
எனவே, அவன் அதிகாலையிலேயே விரட்டப்பட்டான். அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்" என்றார்.

கண்ணாடி முன் நின்று பார்த்தால்... உன் பிம்பம் சொல்லும், உன் நேர்மையின் அளவை.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி


ஒரு குட்டிக்கதை!

ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத் திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய
உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’ என்று நினைத்தான் அவன்.

தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.

அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறோம்,” என்றான்.

“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.

இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று
சொல்வது வழக்கம்.

“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். 

இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று
நினைத்தான்.

ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான்.

சங்கோசை எங்கும் கேட்டது.

அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

 இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.

கதை: நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்


ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் திடீரென வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், “திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்” என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் “இல்லை, நல்லதும் நடக்கும்” என்றும் வாதாடிக் கொண்டிருந்னர்.

அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் குரு, என்ன பிரச்சினை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார்.

“ஒரு போர் வீரன், தன்னுடைய உயர் அதிகாரியின் மனைவியை காதலித்தான். அது உயர் அதிகாரிக்கு தெரியவர... மரண தண்டனைக்கு பயந்தவனாய் அந்த அதிகாரியின் உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான்.

பின்னர், இருவரும் சந்தோ‌ஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். சிறிது காலம் நிலைத்த சந்தோ‌ஷம் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. ஒரு நாள் போர் வீரனை உதறிவிட்டு அந்த பெண் ஓடிவிட்டாள்.

மனமுடைந்த வீரன், அருகில் இருந்த ஊரில் பிச்சையெடுக்க ஆரம்பித்தான். தனது வாழ்நாளில் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக, சில நல்ல காரியங்களை செய்ய முடிவெடுத்தான்.

அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதும், அதனால் பல பேர் மரணமடைவதும் இவனுக்கு தெரியவந்தது. அதனால் அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான்.

முப்பது ஆண்டுகள் உருண்டு ஓடியது. சுரங்கப்பாதையும் அகலமானது. வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டான். அதாவது உயர் அதிகாரியின் மனைவியை கவர்ந்து வந்தான் அல்லவா...? அவனது மகனின் கண்களில் அகப்பட்டான்.

தந்தைக்கு துரோகம் செய்தவனை பழிதீர்க்கும் கோபம் அவனது கண்களில் கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே சரணடைந்தான், போர் வீரன். உன்னுடைய கோபம் நியாயமானதுதான். ஆனால் இந்த சுரங்கத்தை வெட்டி முடித்ததும் என்னை கொன்றுவிடு’’ என்று உருக்கமாக கோரிக்கை வைத்தான்.

அதன்படி... எஞ்சியிருக்கும் சுரங்க வேலைகளை வேகமாக செய்ய ஆரம்பித்தான். எத்தனை காலம் தான் பழிவாங்கும் கோபம் இருக்கும். அதனால் கோபம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

போர் வீரனுடன் சேர்ந்து அவனும் சுரங்க வேலைகளை துரிதப்படுத்தினான். கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர். போர் வீரன் கத்தியுடன் சரணடைந்தான்.

தன்னை கொன்றுவிடும்படி கேட்டுக்கொண்டான். அப்போது அதிகாரியின் மகன் கோபத்தினால் சிவந்த கண்கள், கண்ணீரால் சிவக்க ஆரம்பித்தது. “என் அன்னையை ஏமாற்றிய போர் வீரனுக்கும், மற்ற உயிர்களை காப்பாற்ற நினைக்கும் உனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

இடைப்பட்ட நாட்களில் நிறையவே மாறிவிட்டாய். இப்போது நான் உன்னை கொன்றால் பழியும் பாவமும் என் தோள்களில் விழுந்துவிடும். அதை என்னால் சுமக்க முடியாது. ஆகவே மற்றவர்களுக்கு நல்ல காரியங்களை செய்து உன்னுடைய பாவங்களை போக்கிக்கொள்’’ என்று கூறிவிட்டு கிளம்பினான்.

இறுதியில் ஜென் குரு சீடர்களிடம் “திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதே நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்” என்பதை இந்த கதை தெளிவாக விளக்குகிறது அல்லவா..? என்றார்.

கவியரசு கண்ணதாசனின் குட்டிக்கதை: நாக்குகள்


எமதர்மன் , சித்ரகுப்தனிடம் , " இனிமேல் சாகின்றவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக்கொண்டு வந்துவிடு !" என்று சொன்னான் . அதுபோல் சித்ரகுப்தனும் நாக்குகளை மட்டும் அறுத்துக்கொண்டு வந்தான் .
அறுத்த பின்னாலும் ,சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில மரத்துப் போயும் ,சில இருகூறாகப் பிளந்து போயும் இருந்தன . "இவையெல்லாம் யாருடையவை?" என்று எமன் கேட்டான் .
"பிரபு ! இரட்டையாகக் கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுடையது; துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடயது" என்றான் சித்ரகுப்தன் .
"ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள் .....?" என்று எமன் கேட்க ,.
"அவர்களுக்கு வோட்டுப் போட்ட மக்களுடையது !" என்று அமைதியாகச் சொன்னான் சித்ரகுப்தன் .
- கவியரசு கண்ணதாசனின் குட்டிக்கதைகளிலிருந்து


எமதர்மன் , சித்ரகுப்தனிடம் , " இனிமேல் சாகின்றவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக்கொண்டு வந்துவிடு !" என்று சொன்னான் . அதுபோல் சித்ரகுப்தனும் நாக்குகளை மட்டும் அறுத்துக்கொண்டு வந்தான் .
அறுத்த பின்னாலும் ,சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில மரத்துப் போயும் ,சில இருகூறாகப் பிளந்து போயும் இருந்தன . "இவையெல்லாம் யாருடையவை?" என்று எமன் கேட்டான் .
"பிரபு ! இரட்டையாகக் கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுடையது; துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடயது" என்றான் சித்ரகுப்தன் .
"ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள் .....?" என்று எமன் கேட்க ,.
"அவர்களுக்கு வோட்டுப் போட்ட மக்களுடையது !" என்று அமைதியாகச் சொன்னான் சித்ரகுப்தன் .
- கவியரசு கண்ணதாசனின் குட்டிக்கதைகளிலிருந்து

கதை: அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது


முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.

_அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று,  மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.

_*இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின்  எண்ணம்.

_அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிக அன்பு  கொண்டவர்களாக விளங்கினர்.

நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.

_ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன்  மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.

_*தந்தையைப் பிரிய அவனுக்கு  மனமே வரவில்லை.*_ 
_*எனினும் அரச தண்டனைக்குப்  பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு  முதுகில்  சுமந்து சென்றான்.

 _மலைப்பகுதியை  அடைந்த போது அவனுடைய மனம் மிகவும்  வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி    வீட்டிற்கு வந்து விட்டான்._

_*வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு  உணவளித்து வந்தான்.

_சாம்பல் கயிறு._

ஒரு நாள்  அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.

சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை  கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.

போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு  கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு  உருவாக்க முடியவில்லை.

அரசனின்  போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம்  தெரிவித்தான்.

போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால்  சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.

மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம்  காண்பித்து பரிசினைப் பெற்றான்.

அடி எது? நுனி எது?

ஒரு மாதம் கழித்து அரசன்  இரண்டாவது போட்டியை அறிவித்தான்.

அரசன் ஒரு மரக்கொம்பைக்  கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.

கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.

மரக்கொம்பை  வீட்டுக்கு எடுத்து வந்த மகன்  தந்தையிடம் காண்பித்து அரசனின்  கேள்வியைக் கேட்டான்.

தந்தை மரக்கொம்பை தண்ணீரில்  போட்டால், அது லேசாக மூழ்கும் பகுதி அடி, மிதக்கும் பகுதி நுனி என்றார்.

_மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப்  பெற்றான்.

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.

_அரசன்  மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான். 
அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்  ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.

வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.

அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து  தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.

தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச்  சென்று  தேனீக்கூடு  ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை   தயார் செய்” என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை  தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம்  தந்தான்.

_அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை  அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள்  அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.

இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன்  “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.

அனுபவம் தந்த பதில்கள்.
அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை  என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.

_இளைஞனின்  பதில் அரசனை நெகிழச் செய்தது._

_*சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின்  அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன்  உணர்ந்து கொண்டான்.

_உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு  கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.
அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.

_அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.

வயதான பெரியவர்கள்
வீட்டில் நம்முடன் இருப்பதே நமக்கு இறைவன்கொடுத்த அருள் என்று உணர்வோம்.

கதை: ராஜ ரகசியத்தை திருடிவிட்டான்


ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன். 
எந்த தவறை செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். 
மாட்டிக் கொள்ள மாட்டான்.

அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை.

அதனால் ஊரில் பெரிய மனிதராக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது.

'இவ்வளவு தைரியமாக உலவி வருகிறாயே! உனக்கு பயமாக இல்லையா?' என்று எல்லோரும் கேட்பார்கள்.

'நான் தவறு செய்வதை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள். பிறகு தண்டியுங்கள்', என்பான் திருடன்.அந்த நாட்டு அரசனும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தான்.

அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். அவரிடம் திருடனை பற்றியும், அரசனின் அமைதியை பற்றியும் மக்கள் முறையிட்டனர்.

ஒலை ஒன்றை எடுத்தார் சாது. அதில் ஏதோ எழுதினார். அதை அரசனிடம் கொடுத்தனுப்பினார்.

அன்று மாலை, திருடனை விருந்திற்கு அழைத்தார் அரசர். விருந்திற்கு சென்ற திருடன் வீடு திரும்பவில்லை. அன்று இரவே திருடன் தூக்கிலிடப்பட்டான்.

அவனுடைய ஆதரவாளர்கள் நேராக அரசனிடம் சென்றனர். திருடனை தூக்கிலிட்டதற்கான காரணத்தை கேட்டனர். அரசர் அமைதியாக பதிலளித்தார்.

'மக்களே உங்கள் நண்பரை நேற்று விருந்திற்கு அழைத்தேன். 
அப்போது அவன் ராஜ ரகசியத்தை திருடிவிட்டான். 
அதனால் அவன் தூக்கிலிடப்பட்டான்', என்றார் அரசர்.

'அப்படி என்ன பொல்லாத ரகசியம்?' என்று கேட்டார்கள் ஆதரவாளர்கள்.

'அது ராஜ ரகசியம். அதை தெரிந்து கொண்டவர்கள் யாரும் உயிருடன் இருக்க முடியாது.

நீங்கள் யாராவது தெரிந்து கொள்ள வேண்டுமா?', என்று கேட்டார் அரசர்.
அவ்வளவுதான். அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசி பேசினார்.

'அரசே! அதென்ன ராஜ ரகசியம்? என்னிடமாவது சொல்லுங்கள்', என்று கேட்டார் அரசி.

சாது தனக்கு அனுப்பிய ஓலைச் சுவடியை காண்பித்தார் அரசர். அதில் பின்வரும் வரிகள் எழுதப்பட்டிருந்தது.

"நியாயத்தை கடைபிடித்து, சட்டத்தின் விதிகளையும் மேற்கோள் காட்டி பிறகு தண்டிக்க வேண்டும் என்பது நியாயத்தின் மீதும், தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

அநியாயக்காரர்களுக்கு பொருந்தாது. 

அநியாயக்காரர்களுக்கு முதலில் தண்டனையை கொடுங்கள். 

பிறகு அதை நியாயப்படுத்தும் விதிகளை தேடுங்கள். 

தண்ணீரில் வாழும் மீன்களுக்கு தண்டனையை தண்ணீரிலேயே தேடுவது புத்திசாலித்தனமல்ல." என்று எழுதியிருந்தது.....

கதை: கடவுளிடம் கேட்டால் பல மடங்கு தருவார்


ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். 
நேரம் போய்க்கொண்டே இருந்தது. 
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? 
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...

நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...

மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...

இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். 

குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...

இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்....

கதை: உள்ளம் நிறைவு அடையாமல் உள்ளவர்களே ஏழை


உண்மையான ஏழை யார் ?.... 

அரசன் ஒருவன் பெரிய படை திரட்டி பக்கத்து நாட்டை வெல்வதற்கு பனி படர்ந்த மலைகளின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் உடலில் உடை ஏதும் இல்லாமல் இருந்த துறவி ஒருவரைப் பார்த்தான். ஆளைக் கொல்லும் இந்த குளிரில் ஆடை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று விலை உயர்ந்த தன் போர்வையை கழற்றி அவரிடம் தந்தான்.

ஆனால் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து, இந்தக் குளிரைத் தாங்க இறைவன் எனக்கு போதுமான உடைகளைத் தந்து இருக்கிறான். என்னால் ஆடை இல்லாமல் இந்த குளிரைத் தாங்க முடியும். யாராவது ஏழைக்கு இந்தப் போர்வையை தாருங்கள் என்றார்.

அவர் உடலில் எந்த ஆடையும் இல்லை. சொந்தமாக எந்த பொருளும் இல்லை. இவரை விட ஏழையை எங்கே தேடித் கண்டுபிடிப்பது என்று நினைத்து, அவன் ஐயா! உங்களை விட ஏழையை நான் எங்கே கண்டுபிடிக்க முடியும்? என்று கேட்டான். 

அரசே  நீ எங்கே செல்கிறாய்? என்றார் அவர். 

பக்கத்து நாட்டை வென்று என் நாட்டுடன் சேர்த்துக் கொள்வதற்காக படையெடுத்துச் செல்கிறேன் என்றான். 

சிரித்த துறவி ஒரு நாட்டிற்கு அரசனாக இருந்தும் நீ நிறைவு அடையவில்லை. உன் உயிரையும் பல ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து பக்கத்து நாட்டை உன் நாட்டுடன் சேர்க்க முயற்சி செய்கிறாய். என்னை விடப் பெரிய ஏழை நீ தான். இந்தப் போர்வையை நீயே வைத்துக்கொள். உனக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது என்றார் அவர். 

தலைகவிழ்ந்த அரசன் அவரை வணங்கினான். "ஐயா என் கண்களைத் திறந்துவிட்டீர். 'உள்ளம் நிறைவு அடையாத நிலையில் உள்ளவர்களே ஏழை' என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். இனி எந்த நாட்டின் மீதும் படையெடுக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டுத் தன் படைகளுடன் நாடு திரும்பினான்.

கதை: பசி அல்லது தேவை இருக்க வேண்டும்


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். 

அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். 

அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. 

உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துக் கொண்டது. உடனே மனம் உடைந்துப் போனான்.

அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.

மன்னர் சிரித்து விட்டு "எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. 

மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். 

அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.

அதற்கு அரசர் நடந்ததைக் கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. 

எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. 

எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். 

மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "என்ன அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.

உடனே இளவரசர் மறித்து "சரி... எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். 

அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!

ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளைக் கேட்க தொடங்கினார்.

அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே.

என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவு தான்" என்றான்.

உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்றுக் கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.

ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். 

அப்போது தான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

Contact Form

Name

Email *

Message *