கதை: கடினமாய் உழைக்கும் கல்லுடைக்கும் தொழிலாளி


ஒரு ஊரில் கடினமாய் உழைக்கும் ஓர் கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டின் முன் சென்று கொண்டிருந்தான். வீட்டின் உள்ளே பார்த்தவன் அங்கு அந்த வியாபாரியின் வசதிகளைக் கண்டு பிரமித்தான். நானும் இவனைப்போல் ஒரு வியாபாரியாய் இருந்தால் எத்தனை பெரியவனாய் இருப்பேன் என்று நினைத்தான். உடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாய் மாறிவிட்டான்.

இன்னொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அதிகாரிக்கு பணக்காரர்கள் முதல் எல்லாரும் பயப்படுவதைக் கண்டதும், நானும் அதிகாரம் கொண்ட ஒரு அரச அதிகாரியாய் இருந்தால் அதுதான் பெரிது என்று நினைத்தான். உடனே அரசாங்க அதிகாரியாக மாறிவிட்டான்.

வெளியில் அதிகாரி நடந்து கொண்டிருக்கும் போது, சூரியனின் தகிப்பு தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்தது. நான் சூரியனாய் இருக்கக்கூடாதா என்று நினைத்தான். சூரியனாகவே மாறிவிட்டான்.

சூரியன் பூமி மேல் பிரகாசிக்க முடியாதவாறு கருமேகங்கள் சூழ்ந்ததைக் கண்டான். உடனே மேகத்தால் சூரியனை வெல்ல முடிகிறதே. நான் மேகமாக மாற வேண்டும் என்று நினைத்தான். உடனே மேகமாய் மாறிவிட்டான்.

அந்த மேகத்தை வழிநடத்தும் காற்றைக் கண்டதும், காற்றுத்தானே பலம் வாய்ந்தது. நான் காற்றாக மாற வேண்டும் என்று நினைத்தான். காற்றாக மாறினான்.

காற்று பயணிக்கும்போது எதிர்ப்படும் மலையை காற்றால் அசைக்க முடியவில்லை. மலைதான் மிகவும் பலம் வாய்ந்தது எனவே மலையாக மாற வேண்டும் என்று நினைத்தான். அதன்படியே மலையாகவும் மாறிவிட்டான்.

ஒரு நாள் கீழ்ப்பகுதியில் கொஞ்சம் உடைந்து கீழே விழுந்தது. குனிந்து என்னவென்று பார்த்தான் அங்கு ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி கல்லை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்டதும், மலையை விடப் பலசாலி கல்லுடைக்கும் தொழிலாளிதான். எனவே நான் அவனாக மாற வேண்டும் என்று நினைத்தான். பழையபடி கல்லுடைக்கும் தொழிலாளியாகவே மாறிவிட்டான்

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *