தென்கச்சி கோ.சுவாமிநாதன் இந்த நாள் இனிய நாள்
ஆம்! நம் சிறு வயது காலத்தில் காலை நேரத்தில் சன்டிவியின் "இந்த நாள் இனிய நாள்" நிகழ்ச்சியின் வாயிலாக நம் வீட்டுற்கு வந்து தினமும் ஐந்து நிமிடம் பேசிவிட்டு செல்பவர் இவர். இவரை அறியாதவர்கள் நம்மில் யாரும் இருக்க வாய்ப்பில்லை!
காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பல்லவ படை தென்திசை நோக்கி படையெடுத்து வந்து கொள்ளிடக்கரையோரம் தங்குகிறது. அந்த இடத்தை காஞ்சியின் நினைவாக தென்காஞ்சி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். காலங்கள் ஓட தென்காஞ்சி மருவி தென்கச்சி ஆகிறது. (பல்லவர்கள் பயன்படுத்திய வாளும் கேடயங்களும் இன்னும் அந்த ஊரில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது).
1942-ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தின் இப்படியானதொரு வரலாற்று பின்னனி கொண்ட ஊரிலே, சிறப்பான செல்வ செழிப்புமிக்க குடும்பத்தினிலே சுவாமிமலை இறைவனின் பெயரை கொண்ட கோ.சுவாமிநாத படையாட்சி பிறக்கிறார்.
பெரும்நிலகிழாரான அவரது தந்தை மகன் படித்தால் விவசாயம் பார்க்க மாட்டான் என்றெண்ணி படிப்பை பள்ளியோடு நிறுத்த, மகனின் பிடிவாதம் காரணமாக படித்தாலும் விவசாய படிப்பாக படியென கூறி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் B.Sc Agri பட்டபடிப்பில் சேர்த்துவிட்டார்.
பட்ட படிப்பை முடித்துவிட்டு 1967-ம் ஆண்டு திருநெல்வேலியில் அரசு அலுவலராக விவசாய துறையில் வேலை செய்தார். பிறகு குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு திரும்பியவர் அங்கே பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று ஊர் தலைவராக 1977 வரை பனியாற்றினார்.
அந்த தருணத்தில் அகில இந்திய வானொளியில் விவசாய துறை சார்ந்த நிகழ்ச்சி நடத்த ஆட்கள் தேவை என்ற செய்தியை கேட்டு இவர் விண்ணப்பிக்க மீண்டும் அரசு வேலை கிடைத்தது. ஏழாண்டுகள் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் "வயலும் வீடும்" நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய இவர் பணிமாறுதல் பெற்று 1984-ல் சென்னை அகில இந்திய வானொளி நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.
சிறப்பாக நிகழ்ச்சிகளை வழங்கிய இவர் 1988-ம் ஆண்டில் #இன்று_ஒரு_தகவல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வானொளி வீட்டுக்கு வீடு குடிகொண்டு உச்சத்தில் இருந்த அக்காலகட்டத்தில் இவர் தொகுத்து வழங்கிய இந்த ஐந்து நிமிட நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஒருசேர ஒலித்தது. நாளேடுகள் அனைத்தும் பாராட்டி எழுத, முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி என கொண்டாட, நிகழ்ச்சி பிரபலமானது.
நிகழ்ச்சி பற்றிய பாராட்டு கடிதங்கள் குவிவது போலவே நிகழ்ச்சிக்கான விளம்பரங்களும் பெரியளவில் குவிய தொடங்கின. விளம்பரங்களால் ஐந்து நிமிட நிகழ்ச்சி மூன்றரை நிமிடங்களுக்கு சுருங்கியது. இந்த வெறும் ஒன்றரை நிமிட விளம்பரத்தால் மட்டுமே ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானமாக கிடைத்தது அகில இந்திய ரோடியோவுக்கு. அதன் பயனாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணிமாறுதல் என்ற நடைமுறையில் இருந்து இவர் மட்டும் விலக்கு பெற்றார்.
தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளாக தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் தனது பெயரையோ அடையாளத்தையோ ஒருமுறை கூட வெளிபடுத்திக் கொண்டதில்லை. கடிதம் எழுதும் பலரும் நிகழ்ச்சி நடத்துபவருக்கு எழுபது என்பது வயதானவரோ என்ற அடிப்படையிலேயே கேள்வி கேட்டு எழுதுவார்களாம்.
தென்கச்சியாருக்கு பாடமெடுத்த எழுவது வயதை கடந்த ஆசிரியர் ஒருவரே
"ஐயா உங்களது ஆசிர்வாதம் கிடைக்குமா?" எனகேட்டு கடிதமெழுத... முகவரியை பார்த்துவிட்டு
"ஐயா நான் உங்களிடம் பாடம் படித்த மாணவன், உங்களை விட சிறியவன்" என இவர் பதில் கடிதம் எழுத...,
அதற்கு ஆசிரியரிடமிருந்து இப்படியானதொரு கடிதம் பதிலாக வந்ததாம். "படிக்கும் வயதில் உன் காது என் கைபிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கும். ஆனால் இன்றோ வானொளி மூலமாக என் போன்ற லட்சக்கணக்கானோரின் காதுகள் உன் குரல் வசம் சிக்கிக் கொண்டுள்ளன" என்பதாக!
சென்னை வானொலி நிலையத்தில் பல பதவி உயர்வுகளை பெற்று துனை இயக்குனர் என்ற நிலையிலிருந்த இவர் 2002-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தினம் ஒரு தகவலை சொல்வது கூட சாத்தியம் ஆனால் தினம் ஒரு நகைச்சுவை கதைகளை எப்படி இவர் எடுத்துக்காட்டாக சொல்கிறார் என்ற வியப்பு அவர் பணி ஓய்வு பெறும் நாள் வரை பலருக்கும் இருந்தது.
ஓய்வு பெற்ற பிறகு இவரை சன்டிவி தனது "வணக்கம் தமிழகம்" நிகழ்ச்சியில் இடம்பெறும் #இந்தநாள்_இனியநாள் நிகழ்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டது. அதில் பணிபுரிந்த காலத்தில் நிறைய பட்டிமன்றங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், கல்லூரி விழாக்கள், ஈழதமிழர் கூட்டங்கள் பலவற்றிலும் பங்குபெற்றார்.
#இலக்கணம் என்ற தமிழ் திரைபடத்திலும் நடித்துள்ளார் இவர்!
தமிழக அரசு இவரை "#கலைமாமணி" விருது வழங்கி கௌரவபடுத்தியுள்ளது. காஞ்சிமடம் இவருக்கு "பல்கலைமாமணி" "நடமாடும் தகவல் களஞ்சியம்" விருதுகளையும், பாரதியார் பல்கலைகழகம் இவரது ஊடகதமிழை பாராட்டி "பாரதியார் விருது, பாரதிதாசன் விருது" வழங்கி உள்ளது.
மேலும் இவர் அன்பின் வலிமை, தீயோர், மற்றும் அறிவுச்செல்வம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
நல்ல நல்ல தகவல்களையும், நகைச்சுவை கதைகளையும் கூறி வியக்க வைத்த நீங்க, நாலு வரிகளில் ஒரு சோக கதை சொல்ல முடியுமா என ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் இவரிடம் கேட்க?
அதற்கு இவர் வரிகள் கூட வேண்டாம் ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம் "ஈழ தமிழர்கள்" என்று கூறி பதிலளித்தார். அந்தளவுக்கு ஈழத்தமிழர் விஷயத்தில் அக்கரை கொண்டவர்.
சிறந்த சிந்தனையாளராகவும், சிறப்பான கதைசொல்லியாகவும் அறியப்பட்ட இவர் 2009ம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
இப்போது எத்தனையோ RJ, VJ-க்கள் இருந்தாலும் இவரளவுக்கு அழியா புகழ் கொண்டவர் என்று இங்கே எவரும் இல்லை என்றே கூறலாம்!
இவர் ஆற்றிய சொற்பொழிவுகள், வழங்கிய தகவல்கள், கூறிய கதைகள் பலவும் இணையத்தில் குவிந்துக் கிடக்கின்றன. யூடியுப் போன்றவற்றின் மூலமாக பார்த்தும் கேட்டும் பயன்பெறுங்கள்!
தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்ந்த ஐயா.தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களை சக தமிழராக போற்றி புகழ்ந்து கொண்டாடுவோம்!
Ultimate Guides on Earn Money Online:
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.