தியான பாடல் வரிகள்


அடைக்கலப் பாறையான இயேசுவே

அரணும் கோட்டையும் ஆன இயேசுவே

நீரே எனது வலிமை நீரே எனது பெருமை

நீரே எனது வாழ்வு இயேசய்யா - 2

1. தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே - 2

பிறப்பிலும் வாழ்விலும் நீயே எனக்கு

ஆதாரம் நீயல்லவோ - எந்தன் - 2

2. போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் - 2

உயரமான இடத்திலே என்னை நிறுத்தி

மாண்புறச் செய்கின்றீரே - என்னை - 2


அன்பான தந்தாய் - 2 அடியேனின் ஆராதனை - 2

1. உமது பெயர் உலகெங்கும் வியப்பானது - 2

உம் மகிமை வான்மேலே ஒளிர்கின்றது - 2

சிறுவரின் வாயும் உம்மை புகழ்ந்தேற்றச் செய்தீர் - 2

சீறிடும் பகைவரை வீழ்த்தவே செய்தீரே ஆ...

2. விண்வெளியில் உம் படைப்பைக் காணும்போது - 2

மண்புழுவாம் மனிதன் நான் எம்மாத்திரம் - 2

வான்தூதரை விட தாழ்ந்தென்னைப் படைத்தீர் - 2

மாண்பாலே மனிதனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தீரே ஆ...


அன்பு நிறைந்த ஆயனாய் இறைவன் என்னை வழிநடத்த

என்றும் வாழ்வில் இன்பமே குறைகள் எனக்கு இல்லையே

1. பசும்புல் நிறைந்த பூமியில் பசியை ஆற்ற செய்கின்றார்

அமைதி நிறை நீர்நிலைகளுக்கு - 2 என்னை அழைத்துச் செல்கின்றார்

எனக்குப் புத்துயிர் அளிக்கின்றார்

2. எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றார்

எனது தலையில் ஆவியின் - 2 நறுமணத் தைலம் பூசுகின்றார்

என் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குதம்மா


ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறையில்லை - 2

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கின்றார் ஆண்டவர் என் ஆயன்

அருவிக்குக் கூட்டிச் செல்கின்றார் ஆண்டவர் என் ஆயன்

எந்தன் களைப்பை ஆற்றுகின்றார் ஆண்டவர் என் ஆயன்

எனக்கு புத்துயிர் ஊட்டுகின்றார் ஆண்டவர் என் ஆயன்

2. நேரிய வழியில் எனை நடத்திச் செல்கின்றார் ஆண்டவர் என் ஆயன்

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் ஆண்டவர் என் ஆயன்

நடக்க நேர்ந்தாலும் பயமில்லை ஆண்டவர் என் ஆயன்

ஏனெனில் என்னோடு இருக்கின்றார் ஆண்டவர் என் ஆயன்


ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் - இனி

எனக்கு குறைகள் ஒன்றும் இல்லையே

தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி

தலைவன் பாதையில் செல்லும் என் வழி

ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆ....

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கிறார்

இனிய நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறார் - 2

துணையாகி வழியாகி உடன் நடக்கிறார்

உயிராகி என்னைக் காக்கிறார் எல்லாம் எனக்கு ஆயன் அவரே

2. இருளின் பாதையில் நான் நடக்க நேரினும்

தீமைகள் எதற்குமே அச்சமில்லையே - 2

அவர் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல் - 2

அவரே என் அருகிருப்பதால் எல்லாம் எனக்கு ஆயன் அவரே


ஆண்டவர் எவ்வளவு நல்லவர் அவரை அணுகி வாருங்கள்

ஆண்டவர் எவ்வளவு இனியவர் அவரை சுவைத்துப் பாருங்கள்

1. பாவமெதுவும் செய்தவரல்லர் வாயில் வஞ்சகம் வந்ததில்லை

பழித்தவரை பழித்ததில்லை பாடுகளில் மிரட்டவில்லை

2. சிலுவைதனில் தம்முடலால் இயேசு நம் பாவங்களை சுமந்தாரே

அவருடைய காயங்களால் நாமெல்லாம் சுகமானோம்

3. ஆடுகள் போல் வழிதவறி அலைந்து திரிந்தோம் நாமெல்லாம் மீட்டுக் கொண்டார்

4. பாவிகள் நம்மை நேசிக்கின்றார் - நம்

பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கின்றார்

தந்தையாக அணைக்கின்றார் புதுவாழ்வு தருகின்றார்


ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

மாண்புயர் வான்மண்டலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

1. எக்காளத் தொனி முழங்க அவரை....

வீணையுடன் யாழ் இசைத்து அவரை....

2. முரசொலித்து நடனம் செய்து அவரை....

நரம்பிசைத்து குழல் ஊதி அவரை....

3. நாத மிகு தாளத்துடன் அவரை....

கைத்தாள ஒளி முழங்க அவரை....

4. உயிருள்ள தெல்லாமே அவரை....

ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரை....


ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது

மதில்போல் சூழ்ந்திருப்பார் துன்பங்கள் நெருங்காது

கலங்காதே மனமே கலங்காதே மனமே

அன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமே

1. உன்னைக் காப்பவர் அயர்வதில்லை உன் கால் இடற விடுவதில்லை

உன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லை

உன்னோடு உயிராய் இணைந்திருப்பார் - 2

பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதே

புயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால் தீமை செய்யாது திகையாதே

கண்ணான தேவன் எந்நாளும் காப்பார்

கவலையோ கலக்கமோ இனி வேண்டாம்

2. வானத்துப் பறவையைக் காக்கின்றவர் வறுமையில் உன்னை விடுவாரோ

வயல்வெளி மலரை மகிழ்விப்பவர் நோயினில் விடுதலை தருவாரே - 2

உலகம் ஆயிரம் பேசினாலும் சோர்ந்து வீழ்ந்து போகாதே

தீங்கு செய்வோர் சூழ்ந்து கொண்டால் வாடி வதங்கிப் போகாதே

இஸ்ராயேல் இறைவன் மாறாத தேவன்

இன்றும் என்றும் உடனிருப்பார்


ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - 2

1. ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

அவர் புகழை நானும் பாடிடுவேன் - 2

என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் - 2

எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக - 2

2. ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி

ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் - 2

ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - 2 என்று

சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்

ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று


ஆண்டவரைப் பாடுவது நன்று உன்னதரைப் புகழ்வது நன்று

உமக்கு நன்றி உரைப்பது நன்று

உம்மை நினைந்து மகிழ்வது நன்று - 2

1. காலையிலே உம் பேரன்பையும் இரவினிலே வாக்குப் பிறழாமையும்

வீணையோடும் இசைக் கருவியோடும் எடுத்துரைப்பது நன்று

வியத்தகு உம் செயலால் என்னை மகிழ்விக்கின்றீர் - 2

வலிமை மிகும் உம் செயல்களை மகிழ்ந்து பாடிடுவேன்

2. தீமை செய்வோர் அனைவரையும் உம் கரத்தால் சிதறடித்தீர்

புது எண்ணெய் என் மீது நிதம் பொழிந்து வலிமை தந்தீர்

ஆண்டவர் இல்லத்திலே நடப்படும் மரங்களைப் போல்

செழித்திடுவேன் கனி தருவேன் பசுமையாய் என்றும் இருப்பேன்


ஆண்டவரைப் புகழ்வது நல்லது

அவர் பெயரைப் பாடுவது நல்லது நல்லது

ஆண்டவரைப் புகழ்வது நல்லது

1. ஆண்டவரைப் புகழ்வது நல்லது

உன்னதமானவரே உம் திருப்பெயருக்குப் புகழ்பாடுவது நல்லது

காலையில் உம் இரக்கத்தையும்

இரவெல்லாம் உம் பிரமாணிக்கத்தையும் எடுத்துரைப்பது நல்லது

2. பத்து நரம்பு வீணையிலும் சுரமண்டலத்திலும்

யாழிலும் பண் இசைத்து உம்மைப் புகழ்வது நல்லது

ஏனெனில் ஆண்டவரே உம் செயல்களால் எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறீர்

உம் திருக்கரப் படைப்புக்களைக் குறித்து நான் அக்களிக்கிறேன்


ஆண்டவரே இரக்கமாயிரும்

ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம் இரக்கமாயிரும் - 2

1. இறைவா உம் இரக்கத்திற்கேற்ப என் மீது இரக்கம் வையும்

உம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என் குற்றங்களைப் போக்கிவிடும்

நான் செய்த குற்றத்தை என்னிடமிருந்து

முற்றிலும் கழுவிப் போக்கிவிடும்

என் பாவத்தைக் கழுவி என்னைத் தூய்மைப்படுத்தும் - 2

2. தூயதோர் உள்ளத்தை இறைவா நீர் என்னைகத்தே உருவாக்கும்

உறுதி தரும் ஆவியை என்னுள் மலரச் செய்யும்

உம் திருமுன் இருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்

உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும்


ஆண்டவரே உம்மையே புகழ்ந்து பாடுவேன்

என் தேவனே உம்மையே புகழ்ந்து பாடுவேன்

மாசற்ற வழியில் நான் நடக்க

என்னுள்ளம் வாருமே - 2 - என் ஆண்டவரே

1. வாழ்நாட்கள் புகையெனவே மறைகின்றதே

என்னிதயம் புல்லைப் போல தீய்ந்து போகுதே - 2

என் உணவையும் நான் உண்ண மறந்தேன் - 2

என் மூச்சின் பேரொளியாக என் எலும்பின் சதையுமாக

என்னோடு நீயும் கலப்பாய் இனி - 2

2. பாலைவனப் பறவை போல அலைந்து திரிந்தேன்

பாழ்நிலத்தின் மானைப் போல கதறித் தவிக்கிறேன் - 2

நீர் எழுந்தருளி இரக்கம் காட்டுமே - 2

என்னிதய துடிப்பாக என் வழியில் ஒளியுமாக

என்னோடு நீயும் கலப்பாய் - இனி - 2 என் தேவனே....


என் இனிய இயேசுவே நீர் என்னில் இருப்பதனால்

நான் அஞ்சாமல் நடந்திடுவேன்

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே

என்னைக் காக்கும் இனிய மேய்ப்பனே - 2

உன் அன்பைப் பாடுகிறேன் - 2

நிறைகள் நான் கண்டேன் குறைகள் இனியில்லையே

வசந்தம் நான் கண்டேன் வாழ்வில் பயமில்லையே

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்தீர்

வாழ்வில் வசந்தம் மலர்ந்திடக் கண்டேன்

அமைதியின் நீர்நிலை புத்துயிர் அளித்திட

என்னை அழைத்தீர் நீதியின் வழியினிலே

சாவின் இருளினிலே பள்ளத்தாக்கின் நடுவினிலே - 2

நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன் - 2

நீர் என்னில் இருப்பதனால்

2. எதிரிகள் காண விருந்தொன்றைச் செய்தீர்

வளங்கள் வாழ்வில் நிறைந்திடக் கண்டேன்

தலையில் நறுமணத் தைலம் பூசினீர்

என் பாத்திரம் நிரம்பி வழியக் கண்டேன்

உந்தன் பேரன்பிலே அருளும் நலத்தினிலே - 2 நான் என்றும்...


ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே

உமக்கே நான் அன்பு செய்கின்றேன் - 2

அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்

அவரே என் கேடயம் வலிமையும் துணையும் - 2

1. என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க

என் அன்பு தேவன் அடைக்கலமானார் - 2

நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்

நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்

2. வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே

வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே - 2

எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க

எந்நாளும் என் மீட்பர் புகழ்தனைப் பெறுக


ஆண்டவரே என் புகலிடம் ஆண்டவரே என் அடைக்கலம்

உன்னதமானவரே நீரே என் பாதுகாப்பு

1. என்னையே சார்ந்திருந்தால் உன்னை விடுவிப்பேன்

துன்ப வேளையிலே நான் உன்னை தப்புவிப்பேன்

2. தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னை நெருங்காது

செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார்


ஆண்டவரே என் ஆண்டவரே நீர் என்னைக் கைவிடமாட்டீர்

துன்ப துயரங்கள் எனைத் தொடர்ந்தாலும்

துணைகள் இன்றியே நான் துவண்டாலும் நீர் என்னை கைவிடமாட்டீர்

ஆண்டவரே என் ஆண்டவரே நீர் என்னை கைவிடமாட்டீர் - 2

1. இன்னலுற்ற வேளையிலும் இதயம் உடைந்த பொழுதினில்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

இடையன் இல்லா ஆட்டைபோல் இலக்கின்றி அலைந்தாலும்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

இரக்கம் மறந்தும்மை நான் உதறிச் சென்றாலும்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

இறவா இறைவன் உன் இதயநிழலில் வாழுவேன்

இதமாய் உன் கரத்தை இறுகப் பற்றிக் கொள்ளுவேன் - 2

ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே என் ஆண்டவரே

2. தோல்வி தொடர்ந்த வேளையில் சோர்ந்து நொந்த பொழுதினில்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

உலகம் பழிக்கும் நேரத்தில் உறவும் இகழும் காலத்தில்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

உயிரை தந்த உம்மை நான் மறந்து போனாலும்

கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்

குறையா உன் ஆற்றல் கண்டு வியந்து பாடுவேன்

நிறைவாய் உன் அன்பில் நிலைத்து என்றும் மகிழுவேன் - 2


ஆண்டவரே என்னை என்றும் காத்தருளும்

உம்மிடம் அடைக்கலம் நான் புகுந்தேன்

என் இதயம் அகமகிழும் களிகூரும்

என்றென்றும் கவலையின்றி இளைப்பாறும் - 2

1. நீரே என் ஆண்டவர் என்றுரைத்தேன்

உம்மையன்றி எனக்கு வேறு நன்மை இல்லை - 2

ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து - 2

அவர் தாமே எனது மீட்பின் கிண்ணம் - 2

2. மகிழ்ச்சியூட்டும் இடத்தில் எனக்கு பங்கு கிடைத்தது

என் உரிமைப்பேறு எனக்கு நேர்த்தியாயிற்று - 2

அறிவுரைத்த ஆண்டவரை வாழ்த்திடுவேன் - 2

இரவில் கூட என்னிதயம் பாடிடுமே - 2


ஆண்டவரே என்னை அறிந்திருந்தீர்

அமர்வதை எழுவதைத் தெரிந்திருந்தீர்

வாழ்க்கை முழுவதும் அறிந்தவர் நீர்

என் நினைவுகள் அனைத்தும் கடந்தவர் நீர் - 2

1. நான் நடப்பதும் படுப்பதும் செல்லும் வழிகளும் நீர்

அறிந்திருந்தென்னை சூழ்ந்திருந்தீர் - 2

வானகம் பறந்தாலும் நீர் இருப்பீர்

பாதாளம் பதுங்கினும் உம் கரம் இருக்கும் - 2

கடல்களின் கடையெல்லை விடியலின் அருள்வேளை இறைவா....

2. நான் இருளின் சிறகினில் மறைந்திட விரும்பினும் நீர்

இருளில் ஓளியாய்த் திகழ்கின்றீர் - 2

வாழ்வின் பயணத்தில் ஒளி தீபமே

இனிதே தொடர்கின்றீர் நீர் என்றுமே - 2 - கடல்களின்....


ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு

யாருக்கு நான் அஞ்ச வேண்டும் யாருக்கு நான் நடுங்க வேண்டும்

1. ஆண்டவரிடம் நான் வேண்டுவதும் விரும்புவதும் ஒன்றே

ஆண்டவருடைய இல்லத்தில் நான்

வாழ்நாள் முழுவதும் குடியிருக்க வேண்டும்

2. ஆண்டவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேன்

அவரது அன்பில் மூழ்கிவிட்டேன்

பகைவரை மன்னித்து வாழ்ந்திடுவேன்

பரமனின் அரசில் அமர்ந்து மகிழ்ந்திடுவேன்


ஆண்டவரே தலைமுறை தலைமுறையாக

நீரே எங்களுக்குப் புகலிடம் - 2

1. மலைகள் தோன்று முன்பே பூமியும் உலகுமுண்டாகு முன்பே

ஊழி ஊழிக்காலமாக - 2 இறைவா நீர் இருக்கின்றீர்

2. வைகறை கனவினைப் போல வாடிட வளர்ந்திடும் பூண்டினைப் போல்

மூச்சுபோல் முடிந்து விட்டோம் - 2 இறைவா எங்களைக் காத்திடுவீர்

132. ஆண்டவரின் திருச்சந்திதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2

1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர் மங்கள கீதங்கள் முழங்கிடுவீர்

அவரே தேவன் என்றறிவீர் அவரே நம்மைப் படைத்தாரே

2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம் நாமே அவரது பெருமக்களாம்

துதிப் புகழோடு நுழைந்திடுவோம் தூய அவரது வாசல்களில்

3. தேவனின் திருப்பெயர் தோத்தரிப்பீர் தேவனின் நன்மைகள் சாற்றிடுவீர்

தேவனின் கிருபை உண்மையுமே தலைமுறை தலைமுறை நீடிக்குமே


ஆண்டவரை துதித்தே ஏத்துங்கள்

1. மண்ணில் இடம் பெறும் இறை ஆலயத்தில்

விண்ணில் நிலைகொள்ளும் இறைவனின் இல்லத்தில்

2. கண்டு வியக்கின்ற இறைவனின் செயல்களுக்காய்

எண்ணம் கடந்திட்ட இறைவனின் பெருமைக்காய்

3. எக்காளத் தொனியோடு

மத்தள நாதமும் முழங்கிடவே

4. யாழோடும் தீங்குழலோடும்

மெல்லிசைக் கருவிகள் மீட்டியே


ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்ஏனெனில் அவர் நல்லவர்

என்றென்றும் உள்ளது அவர் இரக்கம் - 2

1. என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் என்று

இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக

என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் என்று

ஆண்டவர்க்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக

2. ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்

எவன் எனக்கு என்ன செய்ய முடியும்

எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்

என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுவார்

3. துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்

அவர் என் மன்றாட்டைக் கேட்டு எனக்கு விடுதலையளித்தார்

ஆண்டவர் என் வலிமையும் கேடயமுமாய் உள்ளார்

அவர் எனக்கு மீட்பரானார்

4. ஆண்டவரது வலக்கரம் என்னை நிலை நிறுத்தியது

ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது

இறந்தொழியேன் உயிர் வாழ்வேன்

ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்

5. வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே மூலைக்கல் ஆயிற்று

ஆண்டவர் செயலிது நம் கண்ணுக்கு வியப்பாகும்

ஆண்டவர் குறித்த நாள் இதுவே

அக்களிப்போம் இன்று அகமகிழ்வோம்


ஆடும் திரைகடலே உன்னைஆடிட சொல்வது யார்

ஓடும் ஆறுகளே நீங்கள் ஓதும் பெயரது யார்

ஆழமும் அகலமுமே இல்லா ஆண்டவன் பெயராமே

அவர்தம் ஆற்றலும் பெரிதாமே

1. சுழலும் காற்றுகளே உங்கள் பேசும் மொழி யாதோ

ஆக்கவும் அழிக்கவுமே வல்ல ஆவியின் செயல்தாமே

அதுவும் ஆண்டவர் இயல்பாமே

2. ஆடும் பறவைகளே உங்கள் புகழின் நாயகர் யார்

கானக் குயிலினமே உங்கள் கானத் தலைவர் யார்

அன்பிலே இணைந்திடவே அழைக்கும் ஆண்டவன் குரலாவோம்

அவர்தம் அமைதியின் தூதராவோம்

3. இடிமின்னல் ஓசைகளே உங்கள் முழக்கத்தின் பொருள் என்ன

அதிர்ந்திடும் பூமிகளே நீங்கள் அறிவிக்கும் செய்தி என்ன

புதியதோர் வானகமும் புதிய பூமியும் வந்திடுமே

இறைவன் ஆட்சியும் மலர்ந்திடுமே


ஆவலுடன் நான் ஆண்டவர்க்காக காத்திருந்தேன்

அவரும் என்னை கனிவாக கண்ணோக்கினார் - 2

1. என் குரலுக்கு அவர் செவிகொடுத்தார்

எழுந்திட எனக்கவர் கைகொடுத்தார்

பாறையில் கால்களை ஊன்றச் செய்தார்

பாதையில் துணை வரும் காவலானார்

2. நாளும் இறைபுகழ் இசைத்திடவே நாவில் வைத்தார் புதுப்பாடல்

கண்டு கலங்கிய அனைவருமே கடவுளை நம்பி மகிழ்வுற்றார்

3. உம்மைத் தேடும் அனைவரையும் அன்பில் வேரூன்றி நிற்கச் செய்யும்

விடுதலை வழங்கும் துணை நீரே விரைவாய் இறைவா வருவீரே


இறைவா உம் இல்லத்தில் தங்கி வாழ்வோர் யார்

இறைவா உம் திருமலையில் குடியிருப்போர் யார் - 2

1. மாசற்ற வாழ்க்கை நடத்துபவன்

நீதி நியாயத்தில் நிலை நிற்பவன்

இதயத்தில் நேரியவை தியானிப்பவன் - 2

2. நாவால் எப்பழிச் சொல்லும் கூறாதவன்

அயலானுக்குத் தீமை செய்யாதவன்

பிறரைப் பழித்து உரைக்காதவன் - 2

3. தீயோரை இழிவாகக் கருதுபவன்

ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்

தனக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாதவன் - 2


இறைவா என் இறைவா நீரே என் ஒளியும் மீட்பும்

யாரைக் கண்டும் பயப்படேன் - இனி - 2

1. தீயவர் என்னை எதிர்க்கையில் அவரே இடறிவிழுவார்

எனக்கெதிராய் என்ன நேர்ந்தாலும் என் உள்ளம் அஞ்சாது - 2

நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் - 2

யாரைக் கண்டும் பயப்படேன் - இனி - 2

2. துன்பம் வரும் நாளில் என்னைக் கூடாரத்தில் மறைப்பார்

எதிரிகள் நடுவில் என்னை பாதுகாப்பாய் வாழச் செய்வார் - 2

நான் வாழ்வோரின் நாட்டில் நலன்களைக் காண்பேன் - 2

யாரை கண்டும் பயப்படேன் - இனி - 2


இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார்

அவரைக் கொண்டு நான் வாழ

எவரைக் கண்டும் பயமில்லை - 2

1. வாழ்வில் இறைவன் துணையானார் வாழும் எனக்கு உயிரானார்

தீயோர் என்னை வதைத்தாலும் தீமை அணுக விடமாட்டார் - 2

2. தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் தீராப் பகையைக் கொண்டாலும்

தேவன் அவரைத் திடமாக தேடும் எனக்குக் குறையேது - 2

3. ஒன்றே இறைவா வேண்டுகிறேன் ஒன்றே அடியேன் தேடுகிறேன்

தேவன் உமது திருமுன்னே நாளும் வாழ அருள்வாயே - 2


இறைவனே என்னைக் காக்கின்றார்

இனியொரு குறையும் எனக்கு இல்லை

நிறைவழி நோக்கி நடத்திடுவார்

நிம்மதியோடு நான் வாழ்வேன் - 2

1. பகலின் வெம்மையில் பயமில்லை

இருளின் நிலவிலும் தீமையில்லை - 2

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்

உன் கால் இடற விடுவதில்லை

உன்னதர் என்றும் அயர்வதில்லை - 2

2. இன்றும் என்றும் காப்பவராம்

பயணத்தில் துணையும் அவர் கரமாம் - 2

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்

தீமையைக் கண்டு நான் அஞ்சேன்

நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2

3. உன்னதம் அமைதியில் மலரட்டுமே

உன் எழில் நீதியில் ஒளிரட்டுமே - 2

நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்

நன்மைகள் எங்கும் நிலவட்டுமே

இறைவனின் நிழலில் வாழட்டுமே - 2


இயேசு எனக்கு அடைக்கலமும் பலமுமாயிருக்கிறார் - 2

1. கடவுள் நம் அடைக்கலமும் பலமுமாயிக்கிறார்

நெருக்கடி நேரத்தில் நமக்கு உறுதுணையென நன்கு காட்டியுள்ளார்

ஆகவே வையகமே புரண்டாலும் நாம் அசைய மாட்டோம்

மலைகள் கடல் நடுவிலே விழுந்தாலும் அச்சமில்லை

2. கடல் அலைகள் கொந்தளித்து எழுந்தாலும்

அவற்றில் கொந்தளிப்பால் மலைகள் தடுமாறினாலும்

வான்படைகளின் ஆண்டவர் நம்மோடிருக்கிறார்

யாக்கோபின் இறைவன் நமக்கு அரணாய் உள்ளார்


இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா

உம்மை நான் நம்பியுள்ளேன் - 2

1. தம் சிறகுகளால் உன்னை மூடிக் காப்பார்

அவருடைய இறக்கைகளுக்கடியில் நீ அடைக்கலம் புகுவாய்

தவறாத அவருடைய வார்த்தை உனக்கு

கேடயமும் கவசமும் போல் இருக்கும்

2. தீமை உன்னை அணுகாது துன்பம் உறைவிடத்தை நெருங்காது

ஏனெனில் நீ செல்லும் இடங்களில் எல்லாம்

உன்னைக் குறித்துக் கட்டளையிட்டார்

3. அவன் என்னையே சார்ந்திருப்பதால் அவனை விடுவிப்பேன்

என் பெயரை அறிந்ததால் அவனைக் காப்பாற்றுவேன்

என்னை நோக்கிக் கூப்பிடுவான் அவன் ஜெபத்தைக் கேட்பேன்

துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்

அவனைத் தப்புவித்துப் பெருமைப்படுத்துவேன் - 2


இஸ்ராயேலின் ஆண்டவரே உமது கரம் என்மீது

இருப்பதனால் தீமைகள் யாவும் அணுகாது காத்தருளும் ஆண்டவரே

1. பொன்னாலும் வெள்ளிநகையாலும் அன்று யாபேசை அலங்கரித்தீர்

தேனோடு மாவும் எண்ணெயும் கலந்து உணவாய் தினம் கொடுத்தீர் - 2

வேற்றினத்தார் நடுவினிலே அவரை உயர்த்தி வைத்தீர் - 2

2. மாந்தரின் நடுவில் சிறப்புடன் வாழ்ந்திட என்றும் துணைபுரிந்தீர்

யாபேசை போல் நானும் வாழ்ந்திட தினமும் தயைபுரிவீர்

வேதனை சோதனை அனைத்தையும் வென்று

வாழ்ந்திட அருள் புரிவீர் - 2


உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்

உம்மை ஏத்துவோம் இறைவா - 2

1. இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில் - 2

இறைவனின் செயல்களுக்காய் இறைவனின் மாட்சிமைக்காய் - 2

2. எக்காளத் தொனியுடனே நம் இறைவனைப் போற்றுவோம்

மத்தளத்துடனே யாம் நம் இறைவனை ஏத்துவோம் - 2

3. யாழோடும் வீணையோடும் புல்லாங்குழலோடும் - 2

நம் இறைவனைப் போற்றுவோம்


உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா

உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - 2

அன்பு தேவன் நீ அருகிருக்கையில்

ஆறுதலை அடைந்திடுவேனே உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே

1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம்

அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம்

நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுக்கலாம்

தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம்

இறைவா நீ என்னைக் கைவிடாய்

துணையாய் நீ என்னுள் உறைந்திடாய்

ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன்

2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம்

உரிமை காக்க உழைப்பதனால் உயிரை சிதைக்கலாம்

பொதுநலனை பேணுவதால் பெயரை இழக்கலாம்

வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம்

இறைவா நீ என்னைக் கைவிடாய்

துணையாய் நீ என்னுள் உறைந்திடாய் ஆறுதலாய்...


உலகெல்லாம் புது உயிர் பெறவே

உமது தூய ஆவியை அனுப்புவீர் - 2

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாய்

ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர் - 2

ஆண்டவரே உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை - உம்

படைப்புகளால் உயர்ந்துள்ளது வையகம்

2. இறைவன் தம் மாட்சிமை விளங்குக

படைப்புகளை குறித்து அவர் மகிழுக மகிழுக - 2

ஆண்டவரே என் ஏழ்மைப் புகழுரை இனியதாய் ஆகுக

இறைவனில் நாம் நிறைவாக மகிழுக


உமது அருளையும் நீதியையும்

புகழ்ந்து பாடுவேன் ஆண்டவரே

உமக்கு கீதம் இசைத்திடுவேன் - 2

1. மாசற்ற வழியினிலே கருத்தாய் நடந்திடுவேன் - 2

தூய இதயத்துடன் உம் இல்லத்தில் வாழ்ந்திடுவேன் - 2

என்றும் நன்றி இதய நன்றி

எங்கள் இறைவா உமக்கு நன்றி - 2

2. நம்பிக்கைக்குரியவரை என்னோடு வாழச் செய்வேன் - 2

நேரிய மனத்தோர்க்குப் பணிவிடை புரிந்திடுவேன் - 2

என்றும் நன்றி இதய நன்றி

எங்கள் இறைவா உமக்கு நன்றி - 2


உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை

அரவணைத்திடு இறைவா - 2

அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்

தணலிலும் மனம் குளிரும் - 2 - உந்தன்

கண்களில் இமைபோல் எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா - 2

1. பாவங்கள் சுமையாய் இருந்தும் - உன்

மன்னிப்பில் பனிபோல் கரையும் - 2

கருணையின் மழையில் நனைந்தால் - உன்

ஆலயம் புனிதம் அருளும் - 2

2. வலையினில் விழுகின்ற பறவை - அன்று

இழந்தது அழகிய சிறகை - 2

வானதன் அருள்மழை பொழிந்தே - நீ

வளர்த்திடு அன்பதன் உறவை - 2


உன் தேவன் உன்னோடு இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே

ஊரெல்லாம் உன்னை ஒதுக்கினாலும் உன் தேவன் விலகமாட்டார்

உன் துக்கங்கள் எல்லாம் மாறும் சந்தோஷம் வாழ்வில் கூடும்

துயரங்கள் எல்லாம் மறையும் நெஞ்சினில் நிம்மதி நிறையும்

1. பாலைநிலத்தில் மன்னாவைப் பொழிந்து

ஆண்டவர் உனக்கு நன்மை செய்வார்

அவரின் சமூகம் முன்பாக செல்லும் தீமைகள் உன்னை அணுகாது

இமயம் போல் சூழ்ந்திடும் துயரங்களை

பனிபோல் மறைந்திட செய்திடுவார்

உலகம் முடியும் வரை உயிருள்ள தேவன் உடனிருப்பார்

2. துணையாக வந்து தோள் மீது சுமந்து

தினந்தோறும் உன்னை பாதுகாப்பார்

காரிருள் சூழ்ந்து தடுமாறும் நேரம் கரிசனையோடு ஒளியாவார்

தனிமையில் தவிக்கும் போதினிலே நம்பிக்கையூட்டி நலம் தருவார்'

வாழ்விக்கும் நல்லாயனாய் வல்லமையோடு நடத்திடுவார்


உன் திருயாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு

என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்

இணைத்திட வேண்டும் இசையரசே

1. யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த

ஏழையின் இதயம் துயில் கலையும் - 2

யாழிசை கேட்டு தனை மறந்து - 2 - உந்தன்

ஏழிசையோடு இணைந்திடுமே - 2

2. விண்ணக சோலையில் மலரெனவே - திகழ்

எண்ணில்லா தாரகை உனக்குண்டு - 2

உன்னருள் பேரொளி நடுவினிலே - 2 - நான்

என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் - 2


உன்னத தேவனவர் - நம்மை

படைத்தவர் ஆள்பவர் ஆண்டவர் அவரே

1. காலையும் மாலையும் கடவுளின் மேன்மை பாடுதல் நல்லதுவே

கனிவுடன் பாடலில் வீணையும் யாழும் மீட்டிட பாடுதல் நல்லதுவே

2. ஆண்டவர் மாபெரும் செயல்கள் அனைத்தும் அறிவிலி அறிவதில்லை

பாவிகள் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும்

பாவங்கள் அவர்களை விடுவதில்லை

3. மகிழ்வுறும் செய்தியை என் மனம் குளிர இறைவன் எனக்களித்தார்

மாமரம் கேதுரு போலவே வளர்ந்து

நீதியில் வாழ்ந்திடச் செய்கின்றார்


என் ஆதாரம் நீயாகியே உன் பேரன்பில் எனைத் தேற்றுமே

கற்பாறை போல் துணையாகியே என் கரம் பற்றி வழிநடத்துமே

உனை நம்பியே உயிர் வாழ்கிறேன்

இறை உன்னில் சரணாகிறேன் - 2

1. துயரங்கள் சூழத் தளர்ந்திடும் வேளை

வருத்தங்கள் நீக்கி வலிமையைத் தந்தாய்

உடைந்திட்ட கலமாய் வதைபட்ட போதும்

உன் முக ஒளியால் ஆறுதல் ஈந்தாய்

எப்போதும் பேரச்சம் சூழ்ந்தாலுமே

என்றென்றும் நம்பிக்கை உன் மீதிலே

போற்றுவேன் நான் போற்றுவேன் போற்றியே தினம் வாழுவேன்

என் நினைவெல்லாம் அதுதானய்யா - 2

2. மலையெனப் பகைவர் எழுந்து வந்தாலும்

மறைப்பினும் வைத்துக் காத்திடுகின்றீர்

நேரிய மனத்தோர் நன்மைகள் அடைந்திட

காவலாய் இருப்பீர் கருணையில் அணைப்பீர்

இறுமாப்பில் நடப்போர்க்கு பதில் கொடுக்கின்றீர்

இறைவா உம் அடியோர்க்கு பலம் தருகின்றீர் போற்றுவேன்...


என் ஆற்றலின் ஆண்டவரை நான் எந்நாளும் போற்றிடுவேன் - நல்

அருள்மொழி கேட்க காலமெல்லாம் அவர் காலடி அமர்ந்திடுவேன் - 2

1. ஆண்டவர் எனது அரணாவார் அவரே எனக்கென்றும் துணையாவார் - 2

வலிமையும் வாழ்வும் வழங்கும் நல்தேவன்

என்னுடன் இருக்கின்றார் என்றும் இருக்கின்றார்

2. ஆண்டவர் எனது மீட்பராவார் அவரே எனக்கென்றும் ஒளியாவார் - 2

வாழ்வாய் வழியாய் விளங்கும் நல்தேவன்

சீர்வழி நடத்திடுவார் அவர் வழி தொடர்ந்திடுவேன்


என் ஆயன் என் நேச ஆண்டவர் இனி எனக்கெந்த குறையுமில்லை

மனம் களைத்திடும் போதவர் அருகிருந்து

என்னுள் புதுஉயிர் ஊட்டுகின்றார் - 2

1. அன்புள்ள அவரின் இல்லத்திலே

ஆயுள் முழுதும் வாழ்ந்திருப்பேன் - 2

2. தீமைகள் எதற்கும் அச்சம் இல்லை

ஆண்டவர் என்னோ டிருப்பதனால் - 2

3. நேரிய வழியில் என்னை நடத்தி - தம்

திருப்பெயரை மகிமை செய்தார் - 2

4. அருளும் கருணையும் என்னைத் தொடரும்

ஆறுதலாய் அவர் துணை இருக்கும் - 2


என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது

என் வாழ்விலே குறைகள் என்பது ஏது - 2

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே

எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2

என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம்

ஆகா என்றென்றும் இன்பமல்லவா - 2

2. என்னோடவர் நடந்திடும் போதினிலே

எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே - 2

எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி

ஆகா எங்கெங்கும் ஒளியல்லவா - 2

3. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்

எல்லோருக்கும் நண்பனாய் ஆக்கியதால் - 2

என்னுள்ளமே ஆகா என் தேவனை

ஆகா எந்நாளும் புகழ்ந்திடுமே - 2


என் விளக்கு சுடர் விட்டு எரியச் செய்கின்றீர்

என் வாழ்வை அகல்விளக்காய் இறைவா மாற்றினீர்

1. புனிதம் மிகுந்த இறைவன் பெயரை நாளும் புகழ்ந்து ஏத்துவேன்

புகழ்ச்சிப் பலியைப் பாக்களாலே நானும் இசைத்துப் பாடுவேன்

அரணும் மீட்பும் எனக்கு நீரே சரணமே உன் திருப்பாதமே

2. எனக்கு உமது துணையிருக்க எதிரிப் படையைத் தாக்குவேன்

எனக்கு உமது வலுவிருக்க எதிரிக் கோட்டையைக் தாண்டிடுவேன்

எனக்குக் கேடயம் நீரே இருக்க எதிரிக் கணையைத் தடுத்திடுவேன்

தாங்கும் வலிமை தாண்டும் வலிமை தடுக்கும் வலிமை நீர் தந்த வளமை

3. எனக்கு உமது அருள் கொடுத்து மானைப் போல ஓடச் செய்தீர்

எனக்கு உமது சக்தி அளிக்க வெண்கல வில்லினை வளைத்திடுவேன்

எனக்கு உமது அன்பைப் பொழிந்து

என் வாழ்வை விளக்காய் ஏற்றி வைத்தீர்

ஓடும் வலிமை ஒடுக்கும் வலிமை ஒளிரும் வலிமை நீர் தந்த வளமை


என்னுயிரே ஆண்டவரைப் போற்றிப் பாடிடு ஆ...

என்னுள்ளமே அவர் பெயரை ஏற்றிப் பாடிடு ஆ...

என் உயிருள்ள வரையில் நான் பாடுவேன்

எந்தக் காலமும் நேரமும் உன் புகழ் பாடியே என்றென்றும் மகிழ்வேன்

1. ஆண்டவர் நல்லவர் ஆ.... சினங் கொள்ளாதிருப்பவர் ஆ....

நம் பாவங்களுக்கேற்ப நடத்தமாட்டார்

நம் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார் - 2

தமக்கஞ்சுவோர்க்கு காட்டும் அன்பு உயர்ந்ததுவே

பதி மண்ணினின்று விண்ணுலகம் உயர்ந்ததுவே

அவர் தம் சொல் கேட்டு நடப்போர் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்

காற்றே கடலே நதியே அலையே இறைவன் புகழைப் பாடு

மலையே மலரே முகிலே மழையே தேவன் புகழைப் பாடு - 2

2. பொறுமையும் அன்பும் ஆ.... கொண்டவர் ஆண்டவர் ஆ....

அவர் நீதி நம் மீது இருக்கின்றதே

அவர் வாக்கு நம் வாழ்வில் நிலைக்கின்றதே - 2

அவர் ஒடுக்கப்பட்டோருக்கு வாழ்வளிப்பார்

தம் செயல்களை அனைவரும் காண வைத்தார்

அவர் தம் சொல் கேட்டு நடப்போர் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்


கண்ணின் மணிபோல கடவுள் காக்கையில் எனக்குக் குறையேது - 2

அரணும் கோட்டையும் ஆனவரே - 2

அன்பின் தேவனாய் இருப்பவரே

1. இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்

காலடிக்கும் அது விளக்காகும் - 2

வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே - 2

உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே - 2

2. எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்

எதுவும் என்னை அணுகாது - 2

செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க தூதரை அனுப்பிடுவார் - 2

கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் - 2


கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை - 2

ஏங்கியே நாடி வருகின்றது

1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2

இறைவா உன்னை என்று நான் காண்பேன் - 2

கண்ணீரே எந்தன் உணவானது

2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2

அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க - 2

என் உள்ளம் பாகாய் வடிகின்றது


கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்

உள்ளத்தாகம் உந்தன் மீது

கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் - மான்கள்...

1. காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2

உயிரைத் தந்திடும் கருவினிலே

அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2

குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்

கதையின் நாயகன் நான் இன்று

2. பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2

காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2

சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால்

அழகிய மணிமாலை நானாவேன்


கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே

அனுதின மேய்ச்சலுடன் அன்புடன் நடத்துகின்றார் - 2

1. அவர் என் ஆத்துமாவை ஞானத்தில் சேர்த்து

நீதியின் பாதைகளில் அவர் என்னை நடத்துகின்றார் - 2

2. மரணத்தின் பள்ளத்திலும் பயத்திலும் நடந்தாலும்

தேவன் நம்மோடிருப்பார் நன்மைகள் புரிந்திடுவார் - 2

3. எண்ணெயால் என் தலையை அன்புடன் அபிஷேகம் செய்து

திருச்சபை முன்பாக திருநிலைப்படுத்துகின்றார் - 2


இயேசு சரணம் இயேசு சரணம்.... - 5

காலையில் உன் வதனம் வந்தேன் என் அடைக்கலமே

தரிசனம் அருள்வாயே இயேசய்யா - 2

உலகில் வாழ் உயிர்க்கெல்லாம் ஊற்றாகி உருவாகி

தினம் தினம் எனைக் காக்கும் இயேசய்யா - 2

1. வேற்றிடம் வாழும் ஆயிரம் நாட்களினும்

உன் கோயில் முற்றம் தங்கும் ஒரு நாளே மேலானது இயேசய்யா

இயேசய்யா..... இயேசய்யா..... - 2

2. உள்ளமும் உடலும் உம்மைப் போற்றும்

மகிழ்வுடன் ஏங்கும் திருநாளே சுவையானது இயேசய்யா

இயேசய்யா..... இயேசய்யா...... - 2


சீயோனில் இறைவா உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே

அங்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் தகுதியே என்றும் தகுதியே

1. மண்ணுலகைத் தேடி வந்தீர் அதற்கு நிறைய மழை பொழிந்தீர்

ஆறுகள் நிரம்பச் செய்தீர் தானியங்கள் விளையச் செய்தீர் - 2

அடைசால்கள் எல்லாம் தண்ணீர் ஓடச் செய்தீர்

மண்ணைப் பரம்பிடித்து மழையில் மிருதுவாக்கினீர்

2. முளைத்து வரும் விதையை ஆசீர்வதித்துக் காக்கின்றீர்

ஆண்டு முழுவதையும் கருணையாலே நிரப்புகின்றீர் - 2

நீர் செல்லும் இடத்தில் செழுமை சிந்துதே

பாலை மேய்ச்சல் நிலம் கொழுமை கொண்டு விளங்குதே


தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு - 2

1. ஆண்டவரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்

எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்

உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும்

எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்

2. என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்

கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்

ஏனெனில் நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்

ஏனெனில் என் இறைவா நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கின்றேன்

3. ஆண்டவரே என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை

பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்

தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு

உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கின்றேன்

4. இறைவா நானும் வீணை கொண்டு உமது

சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்

இஸ்ராயேலின் பரிசுத்தரே உமக்கு யாழ் கொண்டு புகழ்பாடுவேன்

நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்

நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்


தூபம் போல் என் ஜெபம் உம்மை நோக்கி எழும்பாதோ

வானோக்கி எழும்பும் என் கரங்கள் பலியாகாதோ - 2

1. ஆண்டவரே உம்மை நோக்கிக் கூவுகின்றேன் அறியீரோ

எனக்குதவ விரைவீரே என் குரலைக் கேட்பீரே

2. நாவினுக்கு ஒரு காவல் ஏற்படுத்திக் கொடுப்பீரே

உதடுகளை விழிப்போடு காத்திடவே செய்வீரே

3. தீமையின்மேல் எனதுள்ளம் சேராமல் தடுப்பீரே

கொடுஞ் செயல்கள் அணுகாமல் நீர் என்னைக் காப்பீரே

4. ஏனென்றால் உம்மை நோக்கி இறைவா நான் வாழ்கின்றேன்

என் கண்கள் உம்மை நோக்க நான் அழிய விடுவீரோ


பாடுங்கள் ஆண்டவர்க்கு புதியதோர் பாடல் பாடுங்கள்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 4

1. ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

மாண்புயர் வான் மண்டலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

2. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

3. முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

நரம்பிசைத்து குழலூதி அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

4. நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

கைத்தாள ஒலி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

5. அவருடைய செயல்களுக்காய் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

அவருடைய மாட்சிமைக்காய் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்


பாருள்ளோர் எல்லோருமே பாடுவீர் பரமனை - 2

1. உவகை நிறைந்த உள்ளத்தினால்

உன்னத இறைவன் தாள் பணிவீர்

திவ்வியமாம் அவர் சந்நிதியில்

தீங்குரல் எழுப்பிப் பாடிடுவீர்

2. ஆண்டவர் அவரே நம் இறைவன்

அவரே நம்மைப் படைத்தாரே

நாம் அவர் மந்தையின் ஆடுகளாம்

நாம் என்றும் அவரின் பிள்ளைகளாம்

3. என்றென்றும் நல்லவர் ஆண்டவரே

என்றென்றும் வாழ்வது அவரன்பே

எந்நாளும் வாழ்ந்திட நல்லிரக்கம்

எப்போதும் கொண்டது அவர் வார்த்தை

4. தந்தைக்கும் மகனுக்கு ஆவிக்குமே

தணியாத புகழும் மகிமையுமே

எந்நாளும் பெருக வாழ்ந்திடுவீர்

இசையோடு பரவிப் போற்றிடுவீர்


நம்பினேன் ஆண்டவரை நம்பினேன்

அவர் எந்தன் கூக்குரலைக் கேட்டருளினார்

1. அழிவுதரும் குழியினின்று என்னைக் காத்திட்டார்

பாவத்தின் பிடியினின்று என்னை மீட்டிட்டார்

பாறையில் கால்களை ஊன்றச் செய்திட்டார்

பாசத்தோடு ஆண்டவர் என்னை நடத்திட்டார்

2. புதியதொரு புகழ்பாடல் நான் பாடுவேன்

புனித நல்ல இறைவனிலே நம்பிக்கை வைப்பேன்

வியப்புமிக்க செயல்கள் பல எனக்கு அருளினார்

விருப்பமுடன் அவர் புகழை நான் பாடுவேன்

3. உமதிரக்கம் உமதருள் என்றென்றுமே

உம்மைத் தேடுவோர் அருகினிலே அமைந்துள்ளதே

இதோ நான் வருகின்றேன் உமதண்டை - உம்

திருவுளம் நிறைவேற்றி மகிழ்ந்திருப்பேன்


நம்பினேன் ஆண்டவரே உம்மையே

சீயோன் மலை என்று நம்பினேன்

1. எருசலேம் நகருக்கு மலைகள் உண்டு

எதிர்வரும் பகைவர்கள் பலியாவார்

நல்லாரின் நாட்டில் பொல்லாங்கு மாறவும்

என்பார்ந்த ஆண்டவர் அரணாவார் - 2

2. நேரிய இதயம் நேர்கொண்ட பண்பை

சேர்த்திடும் போது சோர்வில்லை நமக்கு

கோணல் வழிநடப்போர் நிலைகுலைந்து போவார்

கானல் நீராய் கண்மறைந்து போவார்


இயேசுவே இயேசுவே நீ எந்தன் பாறை

என் அரணான இயேசுவே இயேசுவே இயேசுவே

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே

நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே

அணையாத தீபமே இயேசுவே இயேசுவே- 2

1. ஒளி கொண்டுதேடினால் இருள் நில்லுமோ

உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ - 2

தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம்

ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது

போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2

2. இரவுக்கும் எல்லை ஒர் விடியல் அன்றோ

முடிவாக வெல்வதும் நன்மையன்றோ - 2

தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் - 2

என்றென்றும் உன் ஆசி உண்டு - வரும்

நல்வாழ்வைக் கண்முன்னே கொண்டு இயேசுவே இயேசுவே - 2


நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து - 2

நெஞ்சம் நிறை படைப்புக்கள்

இறைவனின் தஞ்சம் கொண்டு வாழும் பெருமை எண்ணியே

1. அலைகடல் வான்முகில் மலையழகே

ஆண்டவன் புகழைப் பாடுங்களே

அலைந்திடும் மனதை நிலையாய் நிறுத்தி

மன்னவன் பெருமை கூறுங்களே

2. ஒளியைப் போர்வையாய் கூடாரமாய் - வான்

வெளியை விரித்து விளங்குகின்றீர் - 2

மேங்கள் நீர் வரும் தேரோ - ஓடும்

வெள்ளங்கள் உம் உறைவிடமோ - 2

உமது ஆவியை அனுப்பினால் உலகம் புத்துயிர் பெறுமே - 2


நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு

தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு

வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார்

எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசைப் பாடிடு

1. நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும்

கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும்

கடலையே பிரித்துக் கடந்திட உதவினார்

கலகம் புரிந்தோரை கலங்கிடச் செய்தார்

நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

2. அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே

ஊற்றழகும் உயிரழகும் இறைவனின் மாட்சியே

வாழ்வெனும் பாதையில் வீழும் வேளையில்

தாங்கிடும் தாயாய் தனைத் தந்தார்

நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு


நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக வாழ்த்துவாயாக

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக - என்

அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக

அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே

2. அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கின்றார்

உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்

உன் உயிரை அழிவினின்று மீட்கின்றார்

அருளையும்இரக்கத்தையும் உனக்கு முடியாகச் சூட்டுகின்றார்


நெஞ்சார ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன்

நீதிமான்கள் அவையினிலே அவர் புகழ் பாடிடுவேன்

1. ஆண்டவர் செயல்கள் மகத்தானவை

இன்பம் அவற்றில் கொள்வோர் உய்த்துணர்வார்

மாண்புமிக்க அவர் தம் செயல் யாவும்

என்றும் அவர் தம் நீதி நிலைக்கும்

2. வியத்தகு செயல்கள் நினைவினிலே

என்றும் விளங்கிட அவரே செய்தார்

தயவுடன் அன்பும் உள்ளவரே - அவர்

தமக்கஞ்சும் மனிதர்க்கு உணவளித்தார்


நெஞ்சமே நீ விழித்தெழு - 2 வீணையே நீ விழித்தெழு - 2

யாழே நீயும் விழித்தெழு ஆண்டவரைப் பாடுவோம்

1. ஆண்டவரில் எனதான்மா அடைக்கலமாகும்

அவரது சிறகின் நிழலினிலே என்றுமே வாழும் - எனவே

2. வானமட்டும் உயர்ந்தது தான் அவரது நல்லிரக்கம்

மேகமட்டும் உயர்ந்தது தான் அவரது சொல்லுறுதி - எனவே


நெஞ்சே விழித்தெழு வீணையே விழித்தெழு

நீதியின் இறைவனை நாதத்தின் தலைவனை

புகழ்ந்து நான் இசைத்திட பொழுதுமே விடிந்திட

1. வான்வரை உயர்ந்தது வல்லமை நிறைந்தது இறைவனின் பேரிரக்கம்

மேகங்கள் வரையில் மேன்மையாய் நிற்கும் மேலவன் சொல்வன்மை

விண்ணகம் அவர் அரியணையே மண்ணகம் அவர் கால்மனையே - 2

2. விடுதலை தேடிடும் அடிமைகள் எவர்க்கும் வலக்கரம் நீட்டிடுவார்

எதிரிகள் வலையில் விழுந்து விடாமல் என்றுமே காத்திடுவார்

மனிதர் உதவி வீழ்ந்தாலே கடவுள் துணையில் வெல்வேனே - 2


மகிழ்ச்சியினால் பாடுவாய் ஏனெனில் ஆண்டவர் உன் நடுவிலே

மேன்மையோடு விளங்குகின்றார் - 2

1. ஆண்டவர் தாமே என் மீட்பரானார்

அவர் மேல் நம்பிக்கை வைக்கின்றேன்

ஆண்டவரே என் வலிமையானார் அவரையே நான் இன்று பாடிடுவேன்

ஏனெனில் ஆண்டவர் எனக்கு இன்றும் மீட்பராய் விளங்குகின்றார்

2. ஆண்டவரை என்றும் போற்றிடுங்கள்

அவர் பெயரை என்றும் புகழ்ந்திடுங்கள்

ஆண்டவர் அவர் என சாற்றிடுங்கள் அவருக்கு நன்றி கூறிடுங்கள்

ஏனெனில் வியத்தகு செயல்களையும் செய்துன்னை மீட்டவராம்


என் இறைவா என்னரசே

உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்

மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே - 2 கலைமான்கள்

1. அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது

தகைவிலான் குஞ்சுக்கு கூடும் கிடைத்தது - 2

ஆனால் இறைவா என்னரசே - 2

எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்தது

எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்துள்ளது

2. வறண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும்

ஏங்கும் நெஞ்சுக்கு வார்த்தையும் கிடைக்கும் - 2

ஆனால் இறைவா என்னுயிரே - 2

நீயின்றி எனக்கு வாழ்வெங்கு கிடைக்கும்

நீயின்றி எனக்கு வாழ்வு எங்கு கிடைக்கும்


மாநிலத்தோரே நீங்கள் அனைவரும்

மாண்புமிகு இறைவன் முன் ஆர்ப்பரியுங்கள் - அவர்

மாண்புகழை எங்கணுமே விளங்கச் செய்யுங்கள்

1. உம் செயல்கள் எத்தனையோ வியப்புக்குரியவை

உம் வல்லமை தனைக் கண்டு பகைவர் பணிகின்றார்

உம்மை வணங்கி மாநிலமே புகழ்ந்து பாடட்டும்

உமது பெயரின் புகழ் தனையே எங்கும் கூறட்டும்

2. மக்களெல்லாம் அவர் புகழை வாழ்த்திக் கூறுங்கள்

மகத்தான அவர் புகழை எடுத்துச் சொல்லுங்கள்

தக்க விதமே நம்மை வாழ வைக்கும் இறைவனவர்

தடுமாறவே விட்டதில்லை நமது கால்களை


மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தை எடுத்து

ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்

1. மிக மிகத் துன்புறுகிறேன் என்று சொன்ன போதும் கூட

நான் ஆண்டவரை நம்பினேன்

எந்த மனிதனும் நம்பிக்கைக் குரியவனல்ல

என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்

2. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்

நான் என்ன கைம்மாறு செய்வேன்

மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையிலே எடுத்து

ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்


மூவுலகணிகளின் ஆண்டவரே

உமது உறைவிடம் எத்துணை இனிமையானது - 2

1. இறைவா உமது இல்லம் நாடி எனது ஆன்மா ஏங்குகின்றது - 2

இறைவனின் புகழை என் உள்ளமும் உடலும்

என்றுமே பாடி மகிழ்கின்றது

2. பறவை வாழக் கூடு உண்டு இறைவன் பீடம் எனக்கு உண்டு - 2

இறைவனின் வீட்டில் இன்னிசை பாடி

என்றுமே வாழ்வோர் பேறுபெற்றோர்

3. ஓராயிரம் நாள் வேறிடத்தில் வாழ்வதை நானும் விரும்பவில்லை - 2

ஒரு நாள் உமது ஆலயத்தில்

வாழ்வது அனைத்திலும் உயர்ந்ததன்றோ


யாக்கோபின் இறைவனைப் புகழ்ந்திடுங்கள்

நம் மீட்பின் கருவி அவர்

யாழினால் அவரது புகழ் பாடுங்கள் - எங்கும்

அவரின் பெயர் விளங்க - 2

1. நீதியும் நேர்மையும் என்றும் அவரது விருப்பமாமே

வானமும் வையமும் அவர் அருளால் நிறைந்துள்ளது

பூவுலகெல்லாமே குடிமாந்தர் அனைவருமே இறைவனின் கைவண்ணமே - 2

2. இயேசுவின் திருப்பெயர் என்றும் மகிழ்வு தருகின்றது

இறைவனின் இரக்கம் எங்கும் அரணாய் இருக்கின்றது.

அவரில் நம்பிக்கை கொள்வோர் யாவருமே வெற்றி பெறுகின்றனர் - 2


லாலாலலா லாலாலலா லாலால லாலாலா

நல்ல ஆயன் ஆண்டவர் நாளும் என்னை ஆள்பவர்

ஆடுகளை வாழ வைக்க உயிர் கொடுக்கும் ஆயராம்

தவறும் ஆட்டைத் தேடுவார் தோளில் சுமந்து பாடுவார் ஃ ஆடுவார் - 2

ஏது குறை எந்தன் வாழ்விலே ஓ ஏது பயம் எந்தன் நெஞ்சிலே - 2

பெயர் சொல்லி அழைக்கின்றவர் - என்னை

1. கடல் கடந்து செல்லும் போதும் தீ நடுவே நடக்கும் போதும்

கரம் பிடித்து வழிநடத்தும் ஆயன் நல்லவர்

இருள் நிறைந்த பாதையிலே இடறி விழும் பொழுதினிலே

திடமளித்து தோள் கொடுக்கும் ஆயன் வல்லவர்

எந்தன் மீட்பும் ஒளியுமாகி காக்கும் கோட்டை அரணுமாகி

மந்தைக்காக உயிர் கொடுப்பவர் - 2

நீர்நிலை அருகிலே நித்தமும் நடத்துவார்

நீதியின் வழியிலே அமைதியில் நடத்துவார்

கோலும் உமது நெடுங்கழியும் காலந்தோறும் காத்திடும்

தீமை கண்டு எதற்கும் அஞ்சிடேன்

ஆண்டவரே என் ஆயர் ஏது குறை எந்தன் வாழ்விலே - 2

2. பகல் வெளிச்சம் தாக்கிடாமல் இரவின் நிலா தீண்டிடாமல்

காத்துக் கொள்ளும் அன்பின் ஆயன் என்றும் வல்லவர்

நண்பர் கூட்டம் வெறுக்கும் போதும்

பகைவர் கூட்டம் சிரிக்கும் போதும்

அன்பர் இயேசு என்னை என்றும் நடத்திச் செல்லுவார்

என் தலையில் எண்ணைய் பூசி வாழ்வின் கிண்ணம் நிரம்பச் செய்து

எனது பெயரை நிலைநிறுத்துவார் - 2

காரிருள் சூழலாம் கதவுகள் மூடலாம்

பழிகளால் வாடலாம் விழிகளும் மூடலாம்

அந்த நேரம் வந்து என்னை சொந்தமாக்கி கொண்டிடும்

இந்த அன்பு என்றும் போதுமே- 2

ஆண்டவரின் இல்லத்திலே ஆயுளெல்லாம் வாழ்ந்திருப்பேன் - 2


வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள் - 2

நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்

மீட்பரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்

அல்லேலூயா ஆமென் ஆகா அல்லேலூயா ஆமென் - 2

1. நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்

புகழ்ப்பாடலுடன் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம் - 2

ஏனெனில் ஆண்டவரே - 2 மாண்புமிகு இறைவன்

தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர் - 2 அல்லேலூயா....

2. தாள்பணிந்து அவரைத் தொழுதிடுவோம்

முழந்தாளிடுவோம் நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் - 2

அவரே நம் கடவுள் - 2 நாமோ அவர் மக்கள்

ஆடுகள் நம்மைக் காத்திடும் இறைவனவர் - 2 அல்லேலூயா...


வான் படைகளின் ஆண்டவரே

உமது இல்லம் எத்துணை அருமையாய் உள்ளது

1. என் ஆன்மா ஆண்டவருடைய ஆலய முற்றங்களை

விரும்பித் தேடி சோர்ந்து போகின்றது

என் உள்ளமும் உடலும்

உயிருள்ள இறைவனை நினைத்து களிகூர்கின்றன

2. அடைக்கலான் குருவிக்கு வீடும் தகைவிலான் குருவிக்குத்

தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கிடைத்தது

சேனைகளின் ஆண்டவரே என் அரசே என் இறைவா

உம் பீடங்களுள்ள இடத்திலே கிடைத்தது

3. உமது ஆலய முற்றங்களில் ஒரு நாள் இருப்பது

வேறிடத்தில்ஆயிரம் நாள் வாழ்வதைவிட உண்மையிலேயே மேலானது

பாவிகளின் கூடாரங்களில் தங்குவதை விட

என் இறைவனது இல்லத்தின் வாயிலில் நிற்பதே மேலானது


ஜீவனை விட உம் கிருபை மேலானது

என் ஜீவனை விட உம் கிருபை மேலானது

எங்கள் உயிரான இயேசுவே

பாலைவனம் சோலையாகும் பஞ்சமெல்லாம் நீங்கிப் போகும்

பரமன் இயேசு பார்வையினாலே

நெஞ்சமெல்லாம் இனிமையாகும்

நினைத்ததெல்லாம் நிறைவேறும் s

நம் இயேசு வார்த்தையினாலே - 2

நம் தேவன் நல்லவரே நம் தேவன் வல்லவரே

1. ஆண்டவரை மனதில் வைத்து

அனைத்தையும் நாம் செய்யும் போது

பாதைகளை அவர் செம்மையாக்குவார் - 2

அவரை நோக்கிப் பார்த்தவர்கள் அவமானம் அடைவதில்லை - 2

ஆயிரமாய் ஆசீர் பெறுவார் ஆனந்தம் அடைந்திடுவார்

2. திராட்சைச் செடியின் கிளை போல

இயேசுவோடு இணைந்திருப்போம்

பலன் தருவோம் நலன்கள் பெறுவோம் - 2

என்ன குறை இருந்தாலும் அவரோடு நாம் இருந்தால் - 2

எல்லாமே நிறைவாகுமே நம் வாழ்வெல்லாம் மகிழ்வாகுமே


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *