தவக்கால பாடல் வரிகள்


ஆண்டவர் புனித நகரத்தில்

நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம்

குருத்து மடல்களை ஏந்தி நின்று

உன்னதங்களிலே ஓசான்னா

என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்

வருவதைக் கேட்ட மக்களெல்லாம்

அவரை எதிர்கொண்டழைத்தனரே

குருத்து மடல்களை ஏந்தி நின்று

உன்னதங்களிலே ஓசான்னா

என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்


ஆயிரக் கணக்கான வருடங்களாய் - எம்

ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்

இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம்

இயேசு இரட்சகரே எழுந்தருளும்

ஓசான்னா தாவீதின் புதல்வா

ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

2. மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா

முனி சூசை கரங்களில் வளர்ந்தவரே

மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்

மன்னவரே எழுந்தருள்வீரே

3. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா

அருள் தபோதனரால் புகழப்பட்டீர்

ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்

ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர்

4. தாவீது அரசரின் புத்திரரே - ஓர்

தெய்வீக முடியோடு வந்தவரே

தருமர் எனப் புகழ் அடைந்தவரே - எம்

தேவனே தேவனே எழுவீரே

5. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்

கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்

கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக்

கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர்

6. புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்

புத்தியில் புகுந்தீனீர் அருள்மொழிகள்

பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா

பவனியோடு வார்Pர் படைத்தவரே

7. மரித்தவர்கள் அநேகர் உயிர்பெற்றார் - ஒரு

மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்

மரிமதலேன் சகோதரன் பெற்றார் - எம்

மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே

8. குருடர்கள் பலர் உயிர் பெற்றார் - முடம்

கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்

குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்

கடவுளே எம்மோடே வாரும் நீர்

9. யூதேயா நாட்டினில் புகழ் பெற்றீர் - எம்

யூதர் ராஜரென்று முடிபெற்றீர்

எருசலேம் நகர்தனில் களிப்புற்றீர் - எம்

இயேசு அரசரே அரசாள்வீர்

10. பாவிகளைத் தேடி வந்தவரே - எம்

பாவங்கள் பொறுக்க வல்லவரே

பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்

பராபரனே உட்செல்வீரே

11. கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்

குழந்தைகள் துணியே பஞ்சணையாய்

கிளைகளே உமது ஜெய கொடியாய் - எம்

கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே

12. உலகமே உமது அரிய வேலை - எம்

உயிருமே உமது மா புதுமை

உலகத்தை ஆண்டு வருபவரே - எம்

உலகரசே உள்ளே புகுவீரே


எபிரேயர்களின் சிறுவர் குழாம்

ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்

உன்னதங்களிலே ஓசான்னா

என்று முழங்கி ஆர்ப்பரித்து

ஆண்டவரை எதிர் கொண்டனரே

1. மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன

பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்

அவர் தம் உடைமையே

ஏனென்றால் கடல்களின் மீது பூவுகை

நிலை நிறுத்தியவர் அவரே

ஆறுகளின் மீது அதை நிலைநாட்டியவர் அவரே

2. ஆண்டவரது மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?

அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?

மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன்

பயனற்றதில் மனத்தைச் செலுத்தாதவன்

தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்

3. இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்

இவனே தன்னைக் காக்கும்

ஆண்டவரின் மீட்பு அடைவான்

இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே

யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே

4. வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்

பழங்காலக் கதவுகளே உயர்ந்து நில்லுங்கள்

மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ

வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்

போரில் வல்லவரான ஆண்டவரே இவர்


கிறிஸ்து அரசே இரட்சகரே

மகிமை வணக்கம் புகழ் உமக்கே

எழிலார் சிறுவர் திரள் உமக்கே

அன்புடன் பாடினார் ஓசான்னா

1. இஸ்ரயேலின் அரசர் நீர்

தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்

ஆசிபெற்ற அரசே நீர்

ஆண்டவர் பெயரால் வருகின்றீர்

2. வானோர் அணிகள் அத்தனையும்

உன்னதங்களிலே உமைப் புகழ

அழிவுறும் மனிதரும் படைப்புக்களும்

யாவும் ஒன்றாய் புகழ்ந்திடுமே

3. எபிரேயர்களின் மக்கள் திரள்

குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்

ஜெபமும் கீதமும் காணிக்கையும்

கொண்டு யாம் இதோ வருகின்றோம்

4. பாடுகள் படுமுன் உமக்கவர் தம்

வாழ்த்துக் கடனை செலுத்தினாரே

ஆட்சி செலுத்திடும் உமக்கின்றே

யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்

5. அவர் தம் பக்தியை ஏற்றீரே

நலமார் அரசே அருளரசே

நல்லன எல்லாம் ஏற்கும் நீர்

எங்கள் பக்தியும் ஏற்பீரே


தாவீதின் மகனுக்கு ஓசன்னா

ஆண்டவர் பெயரால் வருகிறவர்

ஆசி நிரம்பப் பெற்றவரே

இஸ்ராயேலின் பேரரசே

உன்னதங்களிலே ஓசன்னா


என் இறைவா என் இறைவா

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்

1. எங்கள் முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை வைத்தார்கள்

நம்பிக்கை வைத்ததால் அவர்களுக்கு விடுதலை அளித்தீர்

உம்மை நோக்கி கூவினார்கள் ஈடேற்றம் அடைந்தார்கள்

உம்மீது நம்பிக்கை வைத்தார்கள் ஏமாற்றம் அடையவில்லை

2. ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்

அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்

இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

நீரோவெனில் என்னைக் கருப்பையிலிருந்து வரச் செய்தீர்

தாயின் மடியிலேயே எனக்கு உறுதியான பாதுகாப்பாயிருந்தீர்

3. நானோவெனில் மனிதனேயல்ல புழுவுக்கு ஒப்பானேன்

மனிதரின் நிந்தனைக்கும் இகழ்ச்சிக்கும் ஆளானேன்

என்னைப் பார்ப்போர் எல்லோரும்

என்னை ஏளனம் செய்கின்றனர்

உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்.


கிறிஸ்து தம்மை தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு

அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.

ஆதலால் தான் கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாய் உயர்த்தி

எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.


அன்பும் நட்பும் எங்குள்ளதோ

அங்கே இறைவன் இருக்கின்றார்

1. கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்

ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே

அவரில் அக்களித்திடுவோம் - யாம்

அவரில் மகிழ்ச்சி கொள்வோமே

2. ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்

அவருக்கன்பு செய்திடுவோம்

நேரிய உள்ளத் துடனேயாம்

ஒருவரை ஒருவர் நேசிப்போம்

3. எனவே ஒன்றாய் நாமெல்லாம்

வந்து கூடும் போதினிலே

மனதில் வேற்றுமை கொள்ளாமல்

விழிப்பாய் இருந்து கொள்வோமே

4. தீய சச்சரவுகள் ஒழிந்திடுக

பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக

நமது மத்தியில் நம் இறைவன்

கிறிஸ்து நாதர் இருந்திடுக

5. முக்தி அடைந்தோர் கூட்டத்தில்

நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்

மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்

மகிமை வதனம் காண்போமே

6. முடிவில்லாமல் என்றென்றும்

நித்திய காலம் அனைத்திற்கும்

அளவில்லாத மாண்புடைய

பேரானந்தம் இதுவேயாம்


ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது

அதற்கு இயேசு: நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே

இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது:

"ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"

அதற்கு இயேசு:

"நான் உன் பாரதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்

"நான் செய்வது இன்னதென்று உனக்கு

இப்போது தெரியாது பின்னரே விளங்கும்"

"ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"

அதற்கு இயேசு:

"நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்


நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம்

கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதன்றோ!

1. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்

நான் என்ன கைம்மாறு செய்வேன்!

மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து

ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்

2. ஆண்டவர் தம் அடியாரின் மரணம்

அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது

ஆண்டவரே நான் உம் அடியேன் உம் அடியாரின் மகன்

என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்

3. புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்

ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன்

ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும்

அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்


பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை

பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம்

பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த

தேவ இரத்த இரகசியத்தை எந்தன் நாவே பாடுவர்யே

1. அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று

நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து

அரிய தேவ வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்

உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

2. இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்

அவரமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்

அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்கு

தம்மைத் தாமே திவ்விய உணவாய் தம் கையாலே அருளினாரே

3. ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்

அதனைச் சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்

மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்

நேர்மையுள்ளம் உறுதி கொள்ள மெய்விசுவாசம் ஒன்றே போதும்


பாதங்களை கழுவினார் - இயேசு - 2

இயேசு பாதங்களைக் கழுவினார்

பன்னிரு சீடரைப் பந்தியிலமர்த்தி

தன்னிரு கைகளில் தண்ணீர் கொண்டு

1. தான் என்ற குணத்தால் தனதென்ற மனத்தால்

தலைக்கணம் மீறிட இடமளிக்காமல் - 2

வாக்கிலும் செயலிலும் தாழ்ச்சியைக் கொண்டு - 2

நோக்கிலும் வாழ்விலும் உயர்வோம் என்று(ணர்த்த) - 2

2. பணிவிடை பெறவே வரவில்லை நானும்

பணிவிடை புரியவே உம்மிடை வந்தேன் - 2

என்றவர் சொன்ன வார்த்தையின் படியே - 2

இன்றவர் தான் ஒரு ஊழியர் போல


புதியதோர் கட்டளை உங்களுக்குத் தருகின்றேன்

உங்களுக்கு நான் அன்பு செய்தது போலவே

நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்

என்றுரைக்கின்றார் எம் பெருமான் இயேசு


ஆணி கொண்ட உன் காயங்களை

அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2

பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2

ஆயனே என்னை மன்னியும் - 2

1. வலது கரத்தின் காயமே - 2

அழகு நிறைந்த இரத்தினமே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே - 2

கடவுளின் திரு அன்புருவே அன்புடன்...

3. வலது பாதக் காயமே - 2

பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன்...

4. இடது பாதக் காயமே - 2

திடம் மிகத் தரும் தேனமுதே அன்புடன்...

5. திருவிலாவின் காயமே - 2

அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன்...


தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

1. ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்

நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்

உம்முடைய நீதியின்பழ என்னை விடுவித்தருளும்

உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே

வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும்.

2. என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்க நான் ஆளானேன்

என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்

எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்

வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்

இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்

உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

3. ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்

நீரே என் கடவுள் என்றேன் என் கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே

என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும்

நீர் என்னை விடுவித்தருளும்

4. கனிந்த உம்திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்

உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்

ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே மனத்திடன் கொள்ளுங்கள்

உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்


எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு தெய்தேன் சொல்

எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய்

1. எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே

அதனாலே உன் மீட்பருக்குச்

சிலுவை மரத்தை நீ தந்தாய்? - எனது சனமே

2. நாற்பது ஆண்டுகள் நான் உன்னை

பாலைநிலத்தில் வழிநடத்தி

உனக்கு மன்னா உணவூட்டி

வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்

அதனாலோ உன் மீட்பருக்கு

சிலுவை மரத்தை நீ தந்தாய் - எனது சனமே

3. நான் உனக்காக எகிப்தியரை

அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை

வதைத்து ஒழித்தேன் நீ என்னைக்

கசையால் வதைத்துக் கையளித்தாய் - எனது சனமே

4. பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி

எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்

நீயோ என்னைத் தலைமையாம்

குருக்களிடத்தில் கையளித்தாய்! - எனது சனமே

5. நானே உனக்கு முன்பாக

கடலைத் திறந்து வழி செய்தேன்

நீயோ எனது விலாவை ஓர்

ஈட்டியினாலே திறந்தாய்! - எனது சனமே

6. மேகத்தூணில் வழிகாட்டி

உனக்கு முன்னே நான் சென்றேன்

நீயோ பிலாத்தின் நீதிமன்றம்

என்னை இழுத்துச் சென்றாயே! - எனது சனமே

7. பாலைவனத்தில் மன்னாவால்

நானே உன்னை உண்பித்தேன்

நீயோ என்னைக் கன்னத்தில்

அடித்துக் கசையால் வதைத்தாயே! - எனது சனமே

8. இனிய நீரைப் பாறையினின்று

உனக்குக் குடிக்கத் தந்தாயே!

நீயோ கசக்கும் காடியை

எனக்குக் குடிக்கத் தந்தாயே! - எனது சனமே

9. கானான் அரசரை உனக்காக

நானே அடித்து நொறுக்கினேன்

நீயோ நாணல் தடி கொண்டு

எந்தன் சிரசில் அடித்தாயே! - எனது சனமே

10. அரசர்க்குரிய செங்கோலை

உனக்குத் தந்தது நானன்றோ

நீயோ எந்தன் சிரசிற்கு

முள்ளின் முடியைத் தந்தாயே! - எனது சனமே

11. உன்னை மிகுந்த வன்மையுடன்

சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்

நீயோ என்னை சிலுவை எனும்

தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்! - எனது சனமே


நம்பிக்கை தரும் சிலுவையே

நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய்

உன்னைப் போன்று தழை

பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ?

இனிய சுமையை இனிய ஆணியால்

இனிது தாங்கும் மரமே நீ

2. மாட்சி மிக்க போரின் வெற்றி

விருதை நாவே பாடுவாய்

உலக மீட்பர் பலியதாகி

வென்ற விதத்தைக் கூறியே

சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து

ஜெயத்தின் கீதம் ஓதுவாய் (நம்பிக்கை)

3. தீமையான கனியைத் தின்று

சாவிலே விழுந்த நம்

ஆதித் தந்தைக்குற்ற தீங்கை

கண்டு நொந்த சிருஷ்டிகர்

மரத்தால் வந்த தீங்கை நீக்க

மரத்தை அன்றே குறித்தனர் (இனிய)

4. வஞ்சகன் செய் சூழ்ச்சி பலவும்

சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்

பகைவன் செய்த கேட்டினின்று

நன்மை விளையச் செய்யவும்

வேண்டுமென்று நமது மீட்பின்

ஒழுங்கில் குறித்து இருந்தது (நம்பிக்கை)

5. எனவே புனித கால நிறைவில்

தேவபிதா தம் மைந்தனை

விண்ணில் நின்று அனுப்பலானார்

அன்னை கன்னி வயிற்றிலே

ஊன் எடுத்து வெளிவந்தாரே

மண்ணகத்தைப் படைத்தவர் (இனிய)

6. இடுக்கமான முன்னட்டியிலே

கிடந்து குழந்தை அழுகிறார்

தேவ உடலைத் துகிலில் பொதிந்து

சுற்றி வைத்து கன்னித்தாய்

இறைவன் அவர்தம் கையும் காலும்

கச்சையாலே பிணைக்கின்றார் (நம்பிக்கை)

7. முப்பதாண்டு முடிந்த பின்னர்

உடலின் காலம் நிறைவுற

மீட்பர் தாமாய் மனமுவந்து

பாடுபடவே கையளித்தார்

சிலுவை மரத்தில் பலியாகிடவே

செம்மறி உயர்த்தப் படலானார் (இனிய)

8. கசந்த காடி அருந்திச் சோர்ந்து

முட்கள் ஈட்டி ஆணிகள்

மென்மை உடலை துளைத்ததாலே

செந்நீர் பெருகிப் பாயவே

விண்ணும் மண்ணும் கடலும் உலகும்

அதனால் தூய்மை ஆயின (நம்பிக்கை)

9. வளர்ந்த மரமே உன்கிளை தாழ்த்தி

விரைத்த உடலைத் தளர்த்துவாய்

இயற்கை உனக்கு ஈந்த வைரம்

இளகி மென்மை ஆகி நீ

உயர்ந்த வானின் அரசர் உடலின்

உயர்ந்த தணித்துத் தாங்குவாய் (இனிய)

10. மரமே நீயே உலகின் விலையைத்

தாங்கத் தகுதியாகிய கிளை

திருச்செம்மறியின் குருதி உன்மேல்

பாய்ந்து, தோய்த்ததாதலால்

புயலில் தவிக்கும் உலகிற்கெல்லாம்

புகலிடம் நீ, படகும் நீ (நம்பிக்கை)

11. பரம திருத்துவ இறைவனுக்கு

முடிவில்லாத மங்களம்

பிதாவும் சுதனும் தூய ஆவியும்

சரிசமப் புகழ் பெறுகவே

அவர்தம் அன்பின் அருளினாலே

நம்மைக் காத்து மீட்கின்றார் - ஆமென்.


மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்

மறவாதே மறவாதே மனிதனே

1. பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்

பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

2. மரணம் வருவதை மனிதன் அறிவானோ

தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

3. இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்

அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்


மைந்தனார் சிலுவை மீது மாதுயருடன் வருந்த

நொந்தழுதாள் தாய் மரி

2. திருமகன் அறையுண்ட

சிலுவை அடியில் நின்ற

தேவதாய் நொந்தழுதாள்

3. வேதனை கடலமிழ்ந்த

மாதா ஆத்துமம் வதைய

வாள் பாய்ந் தூடுருவிற்று

4. நேய மகனை இழந்த

தாய் அனுபவித்த துயர்

தானுரைக்க நாவுண்டோ?

5. அருமையாய் ஈன்ற சுதன்

அவஸ்தையை கண்டிளகி

உருகிப் புலம்பினாள்

6. இரட்சகர் திருத்தாயார்

இக்கொடிய வாதைப்பட

யார் கண்டழாதிருப்பார்

7. திருமகன் துயரத்தால்

உருகும் தாயை கண்டுள்ளம்

கரையாதார் யாருண்டு?

8. அன்புள்ள தம் திருமகன்

துன்ப துயர் அவஸ்தையில்

தன் ஜீவன் தரக் கண்டாள்

9. பட்சவூரணி மாதாவே

பரிதபித்தே உம்மோடு

பாவி நான் அழச் செய்யும்

10. ஆதி இயேசுவை நேசித்தே

யான் அவருக்கினியனாய்

அன்பால் என்னுள்ளம் சுடும்

11. தேவ தாயே தயை செய்து

பாவி என்னிருதயத்தில்

இயேசு காயம் பதியும்

12. சிலுவை அடியில் நின்று

தேவதாயே உம்மோடு நான்

புலம்ப ஆசிக்கின்றேன்

13. கன்னியர் அரசே தாயே

என் கண்ணீரை உம்முடைய

கண்ணீரோ டேற்றருளும்

14. அன்பாம் அக்கினி மூட்டி

அடியோரைத் தீர்வை நாளில்

ஆதரிப்பீர் கன்னியே

15. மண் உடல் உயிர் பிரிந்தால்

வான் மோட்சத் தாத்துமம் சேர்ந்து

வாழவுஞ் செய்தருளும்


எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக

பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்

பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை

மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்

எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்

தாங்கிய அன்னை துயருற்றாள்

5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்

வருத்தினார் தன்னை உம்மோடு

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்

விலையாய் மாதின் சிறு துணியில்

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ

சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு

மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்

ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்

10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த

மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

11. பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத்

தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி

இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு

13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை

உயிரற்ற உடலின் மடிசுமந்து

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்

அடங்கிய கல்லறை உமதன்று


நிந்தையும் கொடிய வேதனையும்

நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை

சிந்தையில் கொண்டு தியானிக்கவே

தினம் அருள் புரிவீர் ஆண்டவரே

சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு

1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்

இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்

மாசற்ற செம்மறி ஆனவர்க்கு

மரண தண்டனையாம் விதித்து நின்றோம்

அவரோ மௌனம் காத்துநின்றார்

அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் (சிலுவையிலே)

2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை

பரமனின் திருவுளம் நிறைவுறவே

ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்

ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி

எனைப்பின் செல்பவன் தனை மறுத்து

சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் (சிலுவையிலே)

3. சிலுவையின் பாரம் அழுத்தியதால்

திருமகன் தரையில் விழலானார்

வலுவற்ற அடியோர் எழுந்திடவே

வல்லப தேவா வரமருள்வீர்

எமைப் பலப்படுத்தும் அவராலே

எல்லாம் செய்திடக் கூடுமன்றோ (சிலுவையிலே)

4. உதிரம் வியர்வைத் தூசியினால்

உருவிழந்திருந்த தன் மகனை

எதிர்கொண்டு வந்த அன்னை மனம்

இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்

அந்நிய காலம் வரையெங்கள்

அடைக்கலமாய் நீ இருந்திடம்மா (சிலுவையிலே)

5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல

உதவிய சீமோன் போல் யாமும்

எம் அயலார்க்குத் தயங்காமல்

என்றுமே உதவிடச் செய்தருள்வீர்

நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்

வரம் தர வேண்டுகின்றோம் (சிலுவையிலே)

6. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்

துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்

இகமென்ன சொல்லும் என நினைந்து

இழந்திடலாமோ விசுவாசம்

இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்

எய்துவர் அழியாப் பேரின்பம் (சிலுவையிலே)

7. மீண்டும் மீண்டும் பாவத்திலே

விழுந்திடும் பாவியை மீட்டிடவோ

ஈடிணையில்லா இறைமகனார்

இவ்விதம் புழுதியில் விழலானார்

நமை நிதம் இறைவன் மன்னிப்பதால்

நாமும் பிறரை மன்னிப்போம் (சிலுவையிலே)

8. எங்கணும் நன்மை செய்தவர்க்கு

ஏனிந்தக் கோலம் என வருந்திப்

பொங்கிடும் கடல்போல் அழுதரற்றிப்

புண்ணிய மாதரும் புலம்பினரே

அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்

ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர் (சிலுவையிலே)

9. அளவற்ற களைப்போ பெருந்துயரோ

அடியற்ற மரம்போல் விழலானார்

உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே

உயர்பரன் அடிமை போல் விழலானார்

தயையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்

தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான் (சிலுவையிலே)

10. உடையினை சேவகர் பிடித்திழுத்து

உரித்திடும் வேளை காயமெல்லாம்

மடைதிறந்தோடும் வெள்ளமென

மறுபடி உதிரம் சொரிந்ததையோ

அந்நியரும் வழிப்போக்கரும் நாம்

அடக்குவோம் தீய ஆசைகளை (சிலுவையிலே)

11. கழுமரம் என்ற சிலுவையிலே

களங்கமில்லாத இறைமகனை

விழுமிய நலம் பல புரிந்தவரை

வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்

ஒரு கணமேனும் இயேசுவேயாம்

உமைப் பிரியாமல் வாழச் செய்வீர் (சிலுவையிலே)

12. நண்பனுக்காக தன்னுயிரை

நல்குவதினுமேலான அன்பு

கொண்டவர் யாருமே இல்லையன்றோ?

கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்

தமையன்பு செய்தார் நமக்காக

தமைமுழுதும் அவர் கையளித்தார் (சிலுவையிலே)

13. மண்ணில் கோதுமை மணி விழுந்து

மடிந்தால் தானே பலன் அளிக்கும்

விண்ணில் வாழ்வு நமக்கருள

விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்

வியாகுல அன்னை மடிவளரும்

மீட்பரே எம்மைக் காத்தருள்வீர் (சிலுவையிலே)

14. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்

ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்

விலகும் மரண இருள் திரையும்

விளங்கும் கிறிஸ்துவின் அருள் ஒளியால்

கிறிஸ்துவே எனக்கு உயிராகும்

மரணம் எனக்கு ஆதாயம் (சிலுவையிலே)


பாடுகள் நீர் பட்டபோது

பாய்ந்து ஓடிய இரத்தம்

கோடிப் பாவம் தீர்த்து மோட்சம்

கொள்ளுவிக்க வல்லதே

1. கெட்டுப் போனோம் பாவியானோம்

கிருபை செய்யும் நாதனே

மட்டிலாக் கருணை என் மேல்

வைத்திரங்கும் யேசுவே

2. துஷ்ட யூதர் தூணினோடு

தூய கைகள் கட்டியே

கஷ்டமாய் அடித்த போது

காய்ந்த செந்நீர் எத்துணை - கெட்டுப்

3. சென்னிமேற் கொடிய யூதர்

சேர்த்து வைத்த முள்முடி

தன்னால் வடிந்த ரத்தத்தினால்

சர்வ பாவம் நீங்குமே - கெட்டுப்

4. ஐந்து காயத்தால் வடிந்த

அரிய இரத்தத்தினால்

மிஞ்சும் எங்கள் பாவம் தீர்க்க

வேண்டுகிறோம் இயேசுவே - கெட்டுப்


சிலுவையில் தொங்கும் செம்மறியே - என்னைச்

சிலையென நிறுத்தும் அன்புருவே

கசையடி குதறிய உமைக் காண - மனம்

கசிந்திடக் கண்ணீர் பெருகிடுதே - 2

1. சாட்டையால் உமதெழில் மலருடலை - ஒரு

சாலென எண்ணி உழுதனரோ

வேட்டையில் விழுந்த மானெனவே உம்மை

வீணர்கள் எண்ணிக் கீறினரோ - 2

2. கூரிய முள்முடியால் தலையில் - இன்று

ஏறின துன்பம் எவ்வளவோ

யாருமே இல்லையோ நண்பரென உமக்(கு)

ஆறுதல் தந்து தேற்றிடவே - 2

3. அணைத்திட விரித்த கரங்களிலே - கொடும்

ஆணியே அமைவாய் நுழைந்ததுவோ

தேடிய திருவடி துளைபடவே - அது

திரண்டெழு குருதியில் குளித்ததுவோ - 2


என்னை நேசிக்கின்றாயா - 2

கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்

நேசியாமல் இருப்பாயா

1. வானம் பூமி படைத்திருந்தும்

வாடினேன் உன்னை இழந்ததினால் - 2

தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்

ஓடி வந்தேன் மானிடனாய்

2. பாவம் பாரா பரிசுத்தர் நான்

பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2

உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்

பாதம் தன்னில் இளைப்பாற வா

3. பாவத்தின் அகோரத்தை பார்

பாதகத்தின் முடிவினைப் பார்

பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே

பலியானேன் பாவி உனக்காய்

உம்மை நேசிக்கின்றேன் நான் - 2

கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்

நேசியாமல் இருப்பேனோ


தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

1. அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்

அனுதபித்து என் பிழையை அகற்றுமையா

பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்

தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்

2. என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்

தீவினையை மறவாதென் மனது என்றும் - உம்

புனிதத்தை போக்கி நான் பாவியானேன் - நீர்

தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன்

3. பாவத்தில் ஜென்மித்தேன் நீயறிவாய்

தோஷத்தில் பெற்றெடுத்தாய் என் தாயே - உம்

தீர்ப்பு தனில் குற்றமோ குறையோ இல்லை - உம்

முடிவுகளின் நீதியையும் எதிர்ப்பாரில்லை

4. உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் - என்

ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவையூட்டும்

என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்

பனிவெண்மைக் குயர்வாக புனிதமாவேன்

5. வல்லவராய் பிதாவை நாம் வாழ்த்திடுவோம்

சுதனேசு கிறிஸ்துவுக்கும் தோத்திரமே - நம்

உள்ளத்தில் குடி கொள்ளும் ஆவிக்கும்

என்றென்றும் புகழ் ஒலிக்க ஆமென்.


கல்வாரி சிகரமதில் கல்நெஞ்சக் கயவர்களால் - 2

கருணையின் உருவம் கனிவான தெய்வம்

சிலுவையில் தொங்கும் (என் இயேசுவைப் பார்) - 2

1. தீர்ப்பிடா என்று சொன்ன - என்

இயேசுவின் நிலைமையைப் பார்

குருதியில் நனைந்திருக்கும் இயேசுவின் முகத்தினைப் பார்

பிலாத்துவின் முன்னே அநீதியின் தீர்ப்பிலே

அமைதியில் நிற்பதைப் பார் - 2

2. பிறருக்கு உதவி செய்த - என்

இயேசுவின் கரங்களைப் பார்

ஆணிகள் துளைத்திடவே ஆண்டவர் துடிப்பதைப் பார்

அயலானை மன்னித்து தந்தையின் கரங்களில்

ஆவியைத் துறப்பதைப் பார்


திருச்சிலுவை மரமிதோ

குரு :திருச்சிலுவை மரமிதோ

இதிலேதான் தொங்கியது

உலகத்தின் இரட்சணியம்

எல் : வருவீர் ஆராதிப்போம்


கிறிஸ்துவின் ஒளியிதோ

குரு : கிறிஸ்துவின் ஒளிஇதோ

எல் : இறைவனுக்கு நன்றி


உமது ஆவியை விடுத்தருளும்

ஆண்டவரே பூமியின் முகத்தைப் புதுப்பித்தருளும்

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக

ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர்

மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கின்றீர்

2. பூமியை நீர் அடித்தளத்தின் மீது அமைத்தீர்

அது எந்நாளும் அசையவே அசையாது

கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கின்றீர்

வெள்ளப்பெருக்கு மலைகளை மூடியிருக்கும்படி செய்தீர்

3. நீரூற்றுகள் ஆறுகளாய்ப் பெருக்கெடுக்க கட்டளை இடுகிறீர்

அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கிறீர்

அவற்றினருகே வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன

மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன

4. தம் உள்ளத்திலிருந்து மலைகள் மீது நீர் பாயச் செய்கிறீர்

உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது

கால்நடைகள் உண்ணப் புல் முளைக்கச் செய்கிறீர்

மனிதருக்குப் பயன்படப் பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர்

5. ஆண்டவரே, உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை

அனைத்தையும் நீர் ஞானத்தோடு செய்து முடித்தீர்

உம் படைப்புகளால் நிறைந்துள்ளது வையகம்

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக அல்லேலூயா


ஆண்டவர் மாண்புடன் புகழ் பெற்றார்

எனவே அவரைப் பாடிடுவோம் - 2

1. குதிரை வீரனைக் குதிரையுடன்

அவரே கடலில் வீழ்த்தி விட்டார் - 2

எனக்கு மீட்பராய் அவரே என்

துணையும் காவலும் ஆயினரே

2. இறைவன் எனக்கு இவர் தானே

இவரைப் போற்றிப் புகழ்ந்திடுவேன் - 2

என் முன்னோரின் இறைவனிவர்

இவரை ஏற்றிப் புகழ்ந்திடுவேன்

போர்களில் ஜெயிப்பவர் ஆண்டவரே

ஆண்டவர் என்பது அவர் பெயராம்


கலைமான் நீரோடை நாடிச் செல்வதுபோல்

களிப்பாய் உம்மை என் நெஞ்சம் நாடிடுதே

1. உள்ளம் தாகம் கொண்ட இறைவன் மீதே

உயிர் உள்ள எந்தன் இறைவா மீதே

எங்கு செல்வேனோ என்று காண்பேனோ - 2

எந்தன் இறைவன் திருமுகத்தை

2. மக்கட் கூட்டத்தை நான் அழைத்துக்கொண்டு

வல்ல இறை இல்லமும் சென்றேனே

அக்களிப்பும் புகழிசையும் முழங்க - 2

அந்த விழாக் கூட்டத்தில் நடந்தேனே


தேவாலய வலப்புறமிருந்து

தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா

அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே

ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் - அல்லேலூயா - 3

1. ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்

அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது

பிதாவும் சுதனும் தூய ஆவியும்

துதியும் புகழும் ஒன்றாய் பெறுக

ஆதியில் இருந்தது போல இன்றும் என்றும்

நித்தியமாகவும் - ஆமென்


ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்

புனித மரியாயே, இறைவனின் தாயே

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனித மிக்கேலே எங்களுக்காக....

இறைவனின் புனித தூதர்களே எங்களுக்காக....

புனித சூசையப்பரே எங்களுக்காக....

புனித ஸ்நானக அருளப்பரே

புனித இராயப்பரே, சின்னப்பரே

புனித பெலவேந்திரரே

புனித அருளப்பரே

புனித மரிய மதலேனம்மாளே

புனித முடியப்பரே

புனித லவுரேஞ்சியாரே

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே

புனித அஞ்ஞேசம்மாளே

புனித பெர்பேத்துவா, பெலிசித்தம்மாளே

புனித கிரகோரியாரே

புனித அத்தனாசியாரே

புனித பசிலியாரே

புனித மார்த்தீனாரே

புனித ஆசீர்வாதப்பரே

புனித பிரான்சிஸ்குவே, சாமிநாதரே

புனித பிரான்சிஸ்கு சவேரியாரே

புனித வியான்னி மரிய அருளப்பரே

புனித தெரேசம்மாளே

புனித சீயன்னா கேத்தரினம்மாளே

இறைவனின் எல்லாப் புனிதரே புனிதையரே

கருணைகூர்ந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே

தீமை அனைத்திலுமிருந்து எங்களை...

பாவம் அனைத்திலுமிருந்து எங்களை...

நித்திய மரணத்திலிருந்து எங்களை...

உமது மனிதவதாரத்தினாலே எங்களை...

பரிசுத்த ஆவியின் வருகையினாலே எங்களை...

உமது பரிசுத்த திருச்சபையை, ஆண்டு காத்தருள வேண்டுமென்று

உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருச்சபைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும்,

திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று

உம்மை மன்றாடுகிறோம்... எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அனைத்துலக மக்களுக்கும், சமாதானமும் மெய்யான ஒற்றுமையும்

தந்தருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...

உமது புனித ஊழியத்தில், எங்களை உறுதிபடுத்திக்

காத்தருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...

உயிர்வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே,

உம்மை மன்றாடுகிறோம்... எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குருத்துவ அருள்பொழிவில்

உமது பரிசுத்த திருச்சபையை ஆண்டு காத்தருள வேண்டுமென்று

உம்மை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருச்சபைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும்

திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று

உம்மை மன்றாடுகிறோம்....

அனைத்துலக மக்களுக்கும் சமாதானமும் மெய்யான ஒற்றுமையம்

தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்...

உமது புனித ஊழியத்தில் எங்களை உறுதிப்படுத்திக்

காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்...

தேர்ந்துகொள்ளப் பெற்ற இவர்களை,

ஆசீர்வதிக்க வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...

தேர்ந்துகொள்ளப் பெற்ற இவர்களை

ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...

தேர்ந்துகொள்ளப் பெற்ற இவர்களை ஆசீர்வதித்துப்

புனிதப்படுத்தி, அர்ச்சிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்...

உயிர்வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே,

உம்மை மன்றாடுகிறோம்...

கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும் - 2

கிறிஸ்துவே, தயவாய் செவிசாய்த்தருளும் - 2


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *