நாணயஸ்தன் சிறுகதை


நாணயஸ்தன்  சிறுகதை

முன்னொரு காலத்தில் குருவாயூரப்பன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் ஊர் ஊராகச் சென்று பழைய ஈயம், பித்தளைப் பொருட்களை வாங்கி, நகரத்தில் உள்ள மொத்தக் கடைகளில் விற்று பணம் பெற்றுக் கொள்வான். அவன் செல்லும் இடங்கள் பெரும்பாலும் கிராமங்களாக இருந்ததால், பொருட்கள் கிடைப்பது கடினமாக இருந்தது. இருப்பினும், அவனது வாழ்க்கையும் வறுமையில் தான் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு முறை, பக்கத்து ஊரில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, பழைய பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்டான். அந்த வீடு ஒரு காலத்தில் செல்வத்துடன் வாழ்ந்தவர்களுடையது. ஆனால், இப்போது அவர்களது செல்வம் கரைந்து, இரு குழந்தைகளுடன் ஒரு தாய் வறுமையில் வாழ்ந்து வந்தாள். அந்தத் தாய், வீட்டில் உள்ள பழைய பொருட்களை விற்று, அதன் வருமானத்திலேயே வாழ்க்கையை நடத்தி வந்தாள்.

அந்தப் பெண், குருவாயூரப்பனிடம் பழைய பொருட்களை விற்று, அவன் நாணயமாகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்தி வந்தாள. குருவாயூரப்பனுக்கு இது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவனும் அவர்கள் கொடுக்கும் பழைய பொருட்களை விற்றுத் தான் வாழ வேண்டியிருந்தது.

ஒரு நாள், அந்த வீட்டிற்குச் சென்று, பழைய பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்டான். அந்தப் பெண் பரிதாபமாகப் பார்த்து, “என்னிடம் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு காலத்தில் எங்க தாத்தா சாப்பிட்ட பழைய சாப்பாட்டுத் தட்டு ஒன்று இருக்கு. ஆனால், அது வளைந்து நெளிந்து கிடக்கு. அதை எடுத்துக்கொண்டு, எங்களுக்கு ஏதாவது கொடுத்துட்டுப் போ. இரண்டு நாள் சாப்பாட்டுக்கு நிம்மதியாக இருக்கலாம்,” என்று வருத்தத்துடன் சொல்லி, அந்தத் தட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

குருவாயூரப்பன் அந்தத் தட்டை வாங்கிப் பார்த்தான். அது மிகவும் பழையதாகவும், அழுக்காகவும் இருந்தது. அதை நன்கு துடைத்துப் பார்த்தான். மதிப்பு எவ்வளவு இருக்கும் என யோசித்தவன், மீண்டும் மீண்டும் துடைத்துப் பார்த்தான். அவன் இப்படி துடைத்து யோசிப்பதைப் பார்த்த அந்தப் பெண், “தம்பி, இந்தத் தட்டு உனக்கு எதுக்கும் உதவாது என்றாலும், எங்களுக்கு உதவி செய்யறதுக்காகவாவது ஏதாவது கொடுத்துட்டுப் போ,” என்று பரிதாபமாகச் சொன்னாள்.

குருவாயூரப்பன், “அம்மா, இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. என் கையில் கொஞ்சம் பணம் இருக்கு, இந்தாங்க,” என்று அவள் கையில் கொடுத்தான். அந்தப் பணம் அவளுக்கு அதிகமாகத் தோன்ற, “தம்பி, இதுவே அதிகம்,” என்று மனநிறைவுடன் பெற்றுக் கொண்டாள்.

குருவாயூரப்பன் எதுவும் பேசாமல் நகரத்துக்கு விரைந்தான். அங்கு, அவனுக்கு நன்கு தெரிந்த ஒரு நகை ஆசாரியிடம் சென்று, அந்தத் தட்டைக் காண்பித்தான். ஆசாரி அதைப் பார்த்து, “அப்பா… இது சுத்த தங்கம்!” என்று வாயைப் பிளந்தார். இருவரும் ஒரு பெரிய நகைக் கடைக்குச் சென்று, தட்டைக் காண்பித்து, அந்தக் குடும்பத்தின் விவரங்களையும் குருவாயூரப்பன் விளக்கினான்.

நகைக் கடைக்காரர், அந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் அழைத்து வரச் சொன்னார். வாகன வசதியும் ஏற்பாடு செய்து கொடுத்தார். குருவாயூரப்பன் விரைந்து சென்று, அந்தப் பெண்ணையும் அவர்கள் குழந்தைகளையும் கூட்டி வந்தான்.

நகைக் கடைக்காரர் அந்தப் பெண்ணிடம், “அம்மா, இந்தத் தட்டு மாதிரி வேறு ஏதாவது உங்க கிட்டே இருக்கா?” என்று கேட்டார். “இல்லை, ஐயா. இது எங்கேயோ கிடந்தது. நான்தான் பொறுக்கி எடுத்து வைத்து இவரிடம் கொடுத்தேன்,” என்றாள் அந்தப் பெண்.

“அம்மா, இது சுத்த தங்கம். இதன் மதிப்பு ஐந்து லட்ச ரூபாய்க்கு இருக்கு. பணமாகக் கொடுத்துடவா?” என்று கேட்டார்.

அந்தப் பெண், குருவாயூரப்பனைப் பார்த்து, “தம்பி, நீதான் என்ன செய்யணும்னு சொல்லணும்,” என்றாள்.

குருவாயூரப்பன், “ஐயா, இந்தப் பணத்தை  பேங்கில் டெபாசிட் செய்து கொடுங்க. அதுல இருந்து மாசாமாசம் வட்டி வரும். அதை வைத்து இவங்க வாழ்க்கையை நடத்துவாங்க,” என்று சொன்னான்.

நகைக் கடைக்காரர், குருவாயூரப்பனை கட்டிப்பிடித்து, “உன்னை மாதிரி நாணயஸ்தன் எங்கேயும் கிடைக்க மாட்டான்,” என்று சொல்லி, மேனேஜரை அழைத்து, பக்கத்தில் உள்ள வங்கியில் எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னார்.

பின்னர், குருவாயூரப்பனையும் ஆசாரியையும் அழைத்து, “தம்பி, இந்தாங்க, என்னால் முடிந்த அன்பு பரிசு,” என்று கொஞ்சம் பணம் கொடுத்தார். குருவாயூரப்பன் மறுத்து, “இல்லை, ஐயா, இந்தப் பொருள் என்னுடையது இல்லையே,” என்றான். அதற்கு நகைக் கடைக்காரர், “தம்பி, நான் கொடுத்தது பொருளுக்காக இல்லை, உன் நாணயத்துக்கு. நீ நினைச்சிருந்தா இது உன்னுடையதுன்னு சொல்லி பணத்தை வாங்கியிருக்கலாம். ஆனா, நீ அந்தக் குடும்பத்தை கூட்டி வந்து, அவங்களுக்கு ஒரு வருமானத்துக்கு வழி காட்டியிருக்கியே, அதுக்குத்தான்,” என்றார்.

குருவாயூரப்பன் நன்றி கூறி, அந்தத் தொகையைப் பெற்று, அங்கிருந்து விடைபெற்றான்.

குருவாயூரப்பன் ஏழை வணிகனாக இருந்தாலும், நாணயஸ்தனாக இருந்ததால், அவனுக்கு புகழும், பெருமையும், செல்வமும் கிடைத்ததல்லவா!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *