கதை: மூளைதான் மூலதனம்


செத்த எலியை மூலதனமாக வைத்து ஒருவன் தலைவர் ஆன கதை..

ஒர் ஊர்ல ஒரு சோம்பேறி சுப்பன்  இருந்தானாம்....எந்த வேலையும் செய்யாமல் தின்னுபுட்டு தின்னுபுட்டு கோயில் திண்டுலத் தூங்குவானாம்...

அம்மா அப்பா இல்லாத அவன எடுத்து வளர்த்த பாட்டிக்கோ கோபம்னா... கோபம்.



அவனக் கூப்பிட்டு "அடேய்...பாவிப்பயல எனக்கு வயசாயிப் போச்சு உசிரு இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கு...

நீ இப்படியே சோம்பேறியா இருந்தா அப்புறம் எப்படிடா தின்ப..போடா ஏதாவது சம்பாதிக்கப் பாரு" என்று சண்டை போட.... 

அவனோ..."அய்யோ..கிழவி அஞ்சு காசுக்கூடக் கையில இல்ல...நான் எப்படிச் சம்பாதிக்கிறது...?" என்று திருப்பிக் கேட்க.... 

அவன் பாட்டியோ..."அட..மூளயில்லாத முட்டாப் பயலே...மூள இருக்கிறவனுக்குச் செத்த எலியும் மூலதனம்தானடா....

போய்ப் பிழைச்சிக்கடா.."என்று அவனை அடித்து விரட்டினாள். 

அவனோ 'என்னடா...பொல்லாத வாழ்க்க...' ன்னு பாட்டு பாடிக்கிட்டே...

(என்னப்பா இங்க எதுக்கு ரஜினி பாட்டெல்லாம்...? என்று கேட்கக் கூடாது...ஒரே பாட்டுல பால்காரர் பெரிய தொழில் அதிபர் ஆகி எல்லோருக்கும் இன்ஸ்பிரேசன் அவர்தானுங்க... )

போன அவன் தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில் ஒரு செத்த எலியைக் கண்டான்...

அவனுக்குப் பாட்டி சொன்ன ஞாபகம் வந்தது...அந்த செத்த எலியை வாலைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு அப்படியே நடந்து போனான். 

களைப்படைந்த அவனோ அந்த செத்த எலியை ஒரு ஓரமாப்போட்டுவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தான்... 

அப்போது இரண்டு காக்கைகள் எங்கிருந்தோ ஓடிவந்து அந்தச் செத்த எலியை கொத்தித் தின்னது... 

அடடா...அந்த செத்த எலி...யாரோ வீட்டில் விஷ எலி மருந்து வைத்து செத்த எலி போல...

அந்த செத்த எலியை தின்ன காக்கைகள் இரண்டும் உடனே செத்தன...? 

அவனோ என்னடா இது வம்பாப் போச்சு...? என்று செத்த இரண்டு காக்கைகளையும் தூக்கிக் கொண்டு அந்தப் பாதையில் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.....

அங்கே ஒரு வயதானவர் ரோட்டில் அவரது தோட்டத்தில் விளைந்த வேர்கடலையை வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டான்... 

அந்த வயோதிகரோ..தம்பி உன் கையிலிருக்கும் இரண்டு காக்கைகளையும் என்னிடம் கொடு...

அவைகளை இந்தக் கடலை காயும் இடத்தில் வைத்தால் பயந்து கொண்டு எந்தக் காக்கைகளும் வராது உனக்கு வேணுமுனா கொஞ்சம் வேர்கடலை தருகிறேன் என்றார்... 

அவனும் அந்தச் செத்தக் காக்கைகளைக் கொடுத்துவிட்டுப் பச்சை வேர்கடலை வாங்கிக் கொண்டு மீண்டும் ஊர் நோக்கி வந்தான்... 

அப்போது அங்கே கிடந்த உடைஞ்ச பானை ஓட்டை எடுத்து அதில் மணல் கொஞ்சம் போட்டு தீ மூட்டி...அந்த வேர்கடலையை நன்றாக வருத்தான் 

அந்த வறுத்த வேர்கடலையுடன் அவன் நடந்து வரும் போது...அங்கே இரண்டு பேர் விறகு பிளந்து கொண்டிருந்தார்கள்..

அவர்களுக்கோ அடங்காப் பசி...அவனிடம் கேட்டு அந்த வேர்கடலையை வாங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக அவனுக்கு உடைத்த விறகு கட்டைகளைக் கொஞ்சம் கொடுத்தார்கள். 

அவனும் அந்த விறகு கட்டுடன் வீடு நோக்கி கடை வீதியில் வரும் போது அங்கே ஒரு ஓட்டல்காரர் அவனிடம் அந்த விறகுகளை விலைக்கு கேட்டு வாங்கிக்கொண்டு அவனுக்கு நிறைய காசு கொடுத்தார். 

இப்படிக் காசு பார்த்த நம்ம சோம்பேறி சுப்பன் பணத்தின் அருமை தெரிந்து கொண்டு அந்தக் காசுக்கு மறுபடியும் நிறைய விறகுகள் வாங்குவதும் விற்பதுமாகத் தொடர்ந்து...

பிறகு ஒர் அடைமழைக் காலத்தில் கொள்ளை லாபம் சம்பாத்தித்து...ஒரு மரக்கடை அதிபரானான் 

மரக்கடை அதிபரான அவரோ...நிறைய ஆட்களை வேலைக்கு வைத்து பக்கத்து மலையில் இருந்த மரங்களை எல்லாம் தன் மரக்கடையில் கட்டைகளாக அடுக்கி வைத்தான்.... 

அத்தோடு விட்டானா...? 

அவ்வப்போது நடக்கும் அரசியல் கட்சி மீட்டிங்குகளுக்கு மேடை போடுவது...

வழியெங்கும் கொடிகள் நாட்டுவது என்று ஆரம்பித்து இன்று பல கோடிகளுக்கு அதிபதியானான் 

இன்னும் இருக்குங்க...

போன தேர்தல்ல அவன கட்டிபுடிச்சு ஒரு கட்சி தலைவரு...'தம்பி தங்கக் கம்பி...நீயே எங்க எம்.பி' என்று சொல்லி தேர்தல் சீட்டு கொடுத்து அவரும் எம்.பி ஆகிவிட்டார்..

இன்று அந்தக் கட்சியின் குட்டித் தலைவர்களுள் ஒருவராகிவிட்டார். 

இப்போதும் அவர் பழைய பாசத்தை மறக்கவில்லை காலையில் எழுந்ததும் அவர் விழிப்பது ஒரு செத்த எலியைப் பார்த்த படியே....

அவர் எங்கே போனாலும் ஒரு செத்த எலியை பார்சல் செய்து யாருக்கும் தெரியாமல் மடியில் வைத்துக் கொள்வார் 

அவர் வந்தாலே செத்த எலி வாசம் அடிக்கும் ஆனாலும் அவரது அல்லக்கைகள் யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை...

பதிலாக "அண்ணேன்..இந்த செண்டு எங்கே..அண்ணேன் வாங்கினீங்க..?.

அடடடா...என்னா வாசன...!
வாசனையோ வாசனை..!  
நல்லா கும்முன்னு இருக்கு தலைவா..!!

என்று புகழ்வார்கள் எல்லாம் பணம் செய்யும் மாயமுங்கோ...!

மூளைதான் மூலதனம் 

கதை: மூளைதான் மூலதனம்


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *