கதை: எதிர்காலத்தை இறைவன் பார்த்துக் கொள்வான்


ஒரு கிராமத்தில் இருந்த துறவியை மக்கள் தெய்வமாக மதித்தனர். தங்களுக்கு என்ன பிரச்னை என்றாலும், அவரிடம் தான் யோசனைக்கு ஓடி வருவார்கள். 

அந்த ஊருக்கு தன் குடும்பத்தை வெறுத்த ஒரு நபர் வந்தார். அவர் துறவிக்கு நண்பரானார். இருவரும் பிள்ளையார் கோயில் வாசலில் படுத்து, மக்கள் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு பொழுதை கழித்தார்கள். 

புதிதாக வந்தவருக்கு துறவியின் செயல்பாடுகள் போரடித்தன. தினமும் காலையில் எழுந்து ஆற்றில் குளிக்கிறார். பிள்ளையார் கோயிலை வலம் வருகிறார். மக்களை  சந்திக்கிறார். அவர்களின் பிரச்னைகளை கேட்கிறார். இப்படியே பொழுதைக் கழித்தால் வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கும்? என்று எண்ணினார் .

அவரிடம் இருந்தால் இப்படியே எதிர்காலம் வீணாய் சென்று விடுமே! வாழ்க்கை பயனுள்ளதாக இருக்காதே என நினைத்தார்.
 தன் எண்ணத்தை துறவியிடமும் சொன்னார். 

சாமியார் அவரிடம்," கிளி ஜோசியக்காரனை பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்.  நாம் ஒன்று கேட்க இவர் சம்பந்தமில்லாமல் ஏதோ பதில் சொல்கிறாரே என கருதிய நண்பர், ஒன்றும் புரியாமல், " பார்த்து இருக்கிறேன் " என்றார். 

"அவனது கிளி என்ன செய்யும்?" என அடுத்த கேள்வியை கேட்டார். "
எல்லோருடைய எதிர்காலத்தையும் சொல்லும்" என்றார் நண்பர். 

"அந்த வேலையை தான் நானும் செய்கிறேன். எல்லோருக்கும் ஜோசியம் சொல்லும் அந்த கிளிக்கு அதன் எதிர்காலம் என்னாகும் என்று தெரியுமா?" என கேட்டார்.

"தெரியாது " என்றார் நண்பர். 

"அதுபோலத்தான் என் நிலையும். எதிர்காலம் இப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை வேண்டுமானால் செய்யலாம். ஆனால் அது அப்படித்தான் அமையும் என உறுதியாக சொல்ல முடியாது.

 நாம் வாழும் காலமே நல்ல காலம். அந்த காலத்தில் பிறர் நல்வாழ்வுக்காக நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். அப்படி செய்தால் நமது எதிர்காலத்தை இறைவன் பார்த்துக் கொள்வான்" என்றார். 

நண்பருக்கு வாழ்வின் அர்த்தம் புரிந்தது.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *