கதை: நரியின் நிழல் இயல்பாக இருப்போம்


நரியின் நிழல்...

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி

"நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்!" என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.

மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்..! சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது... அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை.."ஆஹா நாம் வெகுவாக இளைத்து விட்டோம்.

நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?' என்று பயந்தது.
பிறகு, "சீச்சி... நாம் உயிரோடு தான்
இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு
கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்.." என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி தான்... சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர்.

காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்;
மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம்.

இயல்பாக இருப்போம். 
ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம்.
வாழ்வைக் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *