வருகைப்பாடல் வரிகள்


அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே

ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே - 2


1. அன்புப் பணியாலே உலகை வெல்லுங்கள்

இன்பம் துன்பம் யாவையும் தாங்கிடுங்கள் - 2

எளியவர் வாழ்வில் துணை நின்று

இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2


2. மண்ணகத்தில் பொருளை சேர்க்க வேண்டாம்

மறைந்து ஒளிந்து போய்விடுமே - 2

விண்ணில் பொருளை தினம் சேர்த்து

இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2


அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

ஆவலாய் நாம் செல்லுவோம் - 2

அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட - 2

சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே


1. தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்

தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்

சுமைகளை சுகங்களாக மாற்றுவார்

வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் - 2

வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்

வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்


2. அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்

அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்

விடியலின் கீதமாக முழங்குவார்

விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் - 2 வாருங்கள்...


அழைக்கும் இறைவன் குரல்கேட்டு எழுந்து வாருங்கள்

அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் - 2

பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2

படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்


1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்

பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார்

அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே - (2)

பரமதேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்


2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்

வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் - 2

நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2

இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்.


அழைத்தார் இயேசு அழைத்தார்

என் பெயரை தனியாகக் குறித்தார்

பிடித்தேன் கரம் பிடித்தேன்

நடந்தேன் அவர் வழி நடந்தேன் - 2


1. என் பாதையை செம்மையாக்கினார்

என் பார்வைக்கு ஒளி காட்டினார் - 2

தம் சாயலில் என்னை வடிவெடுத்தார் - 2

தளராது நம்பிக்கை முடிசூட்டினார்


2. என் வார்த்தையை பொருளாக்கினார்

என் வாழ்க்கையை நிறைவாக்கினார் - 2

உறவாடி கருணைமொழி பகர்ந்தார் - 2

உலகிற்கு பணி செய்ய எனைப் பணித்தார்


அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் - 2

அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட

ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் - 2


1. தாயின் கருவிலே உருவாகும் முன்னரே

அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே

பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும்

அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்

மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்

பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்

அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர்


2. உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்

உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்

உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்

உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்

அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்

கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர் - அஞ்சாதீர்....


அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி

ஆனந்த இல்லம் செல்வோம் - அங்கு

ஆயிரம் விளக்குகள் பீடத்தில் ஏந்தி

அவருக்கு நன்றி சொல்வோம்


1. உம் பெரும் கருணை நலன்களை சுவைத்தோம் - 2

உம் திரு நிழலில் அமைதியை உணர்ந்தோம் - 2

தடைகளைக் கடக்க உமதருள் அடைந்தோம் - 2

நிலையான அன்பிது நிதமுமைத் தொடர்வோம்

நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்


2. உம் அருள்மொழியின் பலன்களை சுவைத்தோம் - 2

உம் திருக்கரத்தின் வலிமையை உணர்ந்தோம் - 2

அலையென மேவிடும் துயர்களைக் கடந்தோம் - 2

அளவில்லா அன்பிது துயர்களைக் கடந்தோம்

நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்


அருட்கரம் தேடி உன் ஆலயபீடம்

அலையலையாக வருகின்றோம்

அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய

ஆனந்தமாக வருகின்றோம் - 2


1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்

ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை - 2

மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்

கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்

பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க - 2

நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்


2. ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ

அன்பினைத் தேடி அலைகின்றதே - 2

தேற்றிட விரையும் எம் தலைவா - உம்

தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்

கொடும் பிணியோ வரும் பரிவோ

துயர் வருமோ துணையிருக்க - 2

நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும்


அற்புத அன்பனின் அடி தொழவே

அவரின் பாதம் அணி திரள்வோம்

இத்தனை இகம் வாழ் உயிர்களுமே

இயேசுவை வணங்கிடுமே - 2


1. ஆலய மணியின் ஓசையைக் கேட்போம்

ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் - 2

ஆவியின் அருளால் அறவழி நடப்போம்

அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் - 2

அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்

ஆனந்தமாய் வாழ்வோம் நாம் - 2


2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்

ஆண்டவர் சந்நிதி வணங்கியே நின்றோம்

அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்

அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் அன்பினில்...


அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே

எழுவோம் ஒரு மனதாய் கூடித் தொழுவோம் புகழ் பலியாய் - 2

இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்

மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம்


1. இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று

நிகழ்ந்த பலியை நினைப்போம்

இறைவன் மைந்தனே பலிப்பொருளாய் - தன்னை

இழந்த தியாகம் உரைப்போம் - 2

சுயநலம் மறைய சமத்துவம் வளர

அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம் - இறைகுலமே


2. இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் - இந்த

இனிய பலியில் இணைவோம்

உறவு விருந்தினை பரிமாறும் - திரு

விருந்து பகிர்வில் மகிழ்வோம் - 2

வலிமையில் வளர வாஞ்சையில் திகழ

வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம் அன்பின்...


அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2


1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்

அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2

பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2

பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்


2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி

பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2

பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2

பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்


அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்

இறைவன் அழைப்பை ஏற்று

அவரில் மகிழுங்கள் இறையரசின்


1 இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும்

அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும் - 2

பாவம் போக்கிட வேண்டும்

கோபம் போக்கிட வேண்டும் - என்றும்

அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும்


2 ஆவியின் வரங்கள் நாம் பெற வேண்டும்

அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும் - 2

மனிதம் மலர்ந்திட வேண்டும்

புனிதம் அடைந்திட வேண்டும் - அதனால்

இடைவிடாது நாம் செபிக்க வேண்டும்


அன்புலகம் படைத்திடுவோம் அன்பே இறைவன் என்போம்

அன்பில்லா மனிதனையோ இருளின் பிள்ளை என்போம்

தம் மகனை நம் பொருட்டு கடவுள் அனுப்பி வைத்தார்

அவர் நம்மை அன்பு செய்து மீட்பை மலர வைத்தார்


1. நம்முள் நிலவும் அன்பு இறைவனின் அன்பு என்று

நிறைவுடன் நம்பி வாழ்வோம் அழியா இன்பம் காண்போம்

ஆவியில் பங்கு கொண்டு அவருள் நிலைத்து நின்று

இறைவனின் இல்லம் ஆவோம் இன்பமே இறைவன் என்போம்

இயேசுவையே இறைமகனாய் ஏற்பவர் மனதிலே

இறையவனோ நிலைத்திடுவான் மனிதனும் அவரில் நிலைப்பான்


2. அன்பில் அச்சம் இல்லை அச்சம் அன்பில் அகலும்

அச்சம் கொள்ளும் மனமோ அன்பில் நிலைப்பதில்லை

இறைவனை அன்பு செய்வேன் என்று சொல்லும் மனிதன்

அயலான் அன்பை மறந்தால் அவனோ வாழ்வில் பொய்யன்

கடவுளுக்கும் மனிதனுக்கு இணையாய் நிலவும் அன்பு இறைமகனின் வாழ்வினிலே நிலைத்திடும் மீட்பின் அன்பு


அன்பைக் கொண்டாடுவோம் இறைஅன்பில் ஒன்றாகுவோம்

இந்த உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய

பண்போடு நாம் வாழுவோம் நிறைவாழ்வை நாம் காணுவோம்


1. பகைமை உணர்வுகளை நாம் களைந்து

பாசத்தைப் பொழிந்தே வாழுவோம்

வேற்றுமை நிலைகளை மதித்திங்கு லாலலா

ஒற்றுமையுடனே பழகுவோம் லாலலா

அன்பிற்கு இலக்கணமாகிடவே

அன்றாடம் உறவுகள் வளர்த்திடவே

ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்

இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்


2. பாகுபாடுகளை நாம் வெறுத்து

பகிர்விலே சமத்துவம் காணுவோம் - 2

பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு லாலலா

பிறரையும் நேசிக்கத் துவங்குவோம் லாலலா

உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே

உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே

ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்

இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்


அனைத்தையும் படைத்தவர் ஆண்டவரே

வாருங்கள் அவரை வணங்கிடுவோம்

உலகத்தை மீட்டவர் ஆண்டவரே

வாருங்கள் அவரை வணங்கிடுவோம்


1. உன்னத தேவன் நல்லவரே ஒப்புயர்வில்லா வல்லவரே

பண்ணரும் இரக்கம் உள்ளவரே

பாவிகளைக் காத்தாள்பவரே

வாருங்கள் அவர்முன் பணிந்திடுவோம்

வாருங்கள் அவரை வணங்கிடுவோம்


அலைகடலாய் எழுந்து வருகிறோம் தெய்வமே

உம் சந்நிதியில் கூடி வருகிறோம்

ஆனந்தமாய் இணைந்து வருகிறோம் இயேசுவே

உம் அருள் மழையில் நனைந்து மகிழவே - 2

எழுகிறோம் வருகிறோம் உம் பாதம் சரணாகிறோம் - 2


1. உண்மைக்காவும் உயர் நீதிக்காகவும்

குரல் கொடுக்கும் குழுமமாகவே

தலைவன் இயேசுவின் இலட்சியக் கனவை

செயல்படுத்தும் சீடராகவே - 2

உழைப்பவரின் வியர்வைத் துளி உழுபவரின் கண்ணீர்த் துளி

மனிதம் தேடும் விடியலாகட்டும் - 2

மனிதத்திலே இதயம் மலரட்டும் - 2 எழுகிறோம்....


2. ஏழை எளியர்க்கு செய்த போதெல்லாம்

எனக்கு செய்தீர் என்று சொன்னீரே

தன்னலம் மறந்து தடைகளைக் கடந்து

இணைய வேண்டும் இயக்கமாகவே - 2

துணிந்து நின்று குரல் கொடுப்போம்

தோழமையில் தோள் கொடுப்போம்

இறையாட்சி மண்ணில் மலரவே - 2

இறை விருப்பம் நிறைவேறவே - எழுகிறோம்....


அலைகடலென திரண்டு வாரீர் இறைமக்களே

அருள் மழையினைப் பொழிய தேவன் காத்திருக்கின்றார்

ஒரு கொடி கிளை நாமென இனி வாழும் நாளிலே

புது உறவும் புது யுகமும் ஆகும் வாழ்விலே - 2


1. வேதம் வாழ வேண்டும் மனிதம் மலர வேண்டும்

நாடு செழிக்க வேண்டும் சத்தியம் நிலைக்க வேண்டும் - 2

இயேசுவாக வேண்டும் வரங்கள் சேர வேண்டும் - 2

வாழ்வினில் புது வசந்தங்கள் வர நீதிதேவன் ஆட்சி மலர

உண்மை அன்பு நீதியே மண்ணில் வாழ்வுப் பாதைகள்

உலகம் தேடும் அமைதியை உணர்ந்து உயர்ந்து வெல்க


2. பொய்மை நீங்க வேண்டும் வாய்மை வளர வேண்டும்

தீமை ஒழிய வேண்மும் தர்மம் ஓங்க வேண்டும்

வாழ்வில் தூய்மை வேண்டும் நெஞ்சில் நேர்மை வேண்டும்

வாழ்வினில் புது அர்த்தங்கள் பிறக்க

பாசதீபம் எங்கும் ஒளிர உண்மை...


ஆண்டவர் அவையினில் பாடுங்களே

நல்ல ஆனந்த கீதங்களே - 2


1. இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே - நம்

அவயங்கள் அருளிசை பாடிடுமே

நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ....

அனைவரின் அன்பனை வாழ்த்திடவே


2. மனமென்னும் கோயிலில் தோரணங்கள் - நம்

மகிழ்ச்சியை பரப்பிடும் மணியொலிகள்

இதயத்தின் எழுச்சியை தூபப்புகை ஆ....

இதயத்தின் அன்பனை வணங்கிடவே


ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல் ஆனந்தமுடனே பாடுங்களே

இயேசுவின் நினைவில் மகிழுங்களே - 2 இந்த

இகமதில் நாளும் முழங்குங்களே - வாருங்களே - 2


1. உள்ளங்கள் மகிழும் உறவுகள் மலரும்

இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால்

அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால்

ஆண்டவர் வழியினில் நடந்திடலாம்

குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால்

இயேசுவை அவரினில் கண்டிடலாம்

இறைப்பணி தொடர இறையாட்சி மலர

இணைந்திடுவோம் நாம் இறைவனிலே


2. சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை

இறைவன் இயேசு வருகையிலே

நீதியும் உண்டு சமத்துவம் உண்டு

இறைவன் வாழும் சமூகத்திலே

அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால்

இனிய உலகம் படைத்திடலாம்

குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால்

புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம்


ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்

அவரின் பாதைகளை செம்மையாய் ஆக்குவோம் - 2

செல்லுவோம் - 2 அவர் வழியில் நாம் செல்லுவோம் - 2


1. பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரவச் செய்வோம்

மலைகள் குன்றுகள் எல்லாம் தாழ்த்தி வைப்போம் - 2

கோணலானவற்றை நேராக ஆக்குவோம் - 2

கரடு முரடானவற்றை சமமான வழி செய்வோம்


2. மனிதர் எல்லாரும் தமது மீட்பைக் காண

கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார் - 2

மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம் - 2

விண்ணரசு நெருங்கி விட்டது நம்மிடை வந்துவிட்டது


ஆண்டவரின் வழிதனையே ஆயத்தம் செய்யுங்கள்

பாழ்வெளியில் அவர் பாதைகளை செம்மைப்படுத்துங்கள் - 2

கோணலானவை நேராகவும் பள்ளத்தாக்குகள் சீராகவும்

ஆண்டவரின் மகிமையினை எல்லோரும் காண்பார்கள்


1. பூ உதிருமே புல் உலருமே

ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் வாழுமே - 2

வான்மழையென அவர் அருள் இனி புவி வருமே (வரும்)

ஏழையர் எளியவர் விடுதலை என எழுமே (எழும்) - 2

என் தேவனே உன் ஆலயம் கண்கள் காண்கின்ற பேறு பெறும்


2. நம் வாழ்விலே நன்மைகள் சேருமே

நலிவென நாம் கண்டவை வலிமையில் வளருமே - 2

அகமதில் அருளொளி அகலென வளர்ந்திடுமே (வளர்ந்திடும்)

இகமதில் இருள் பகை இனி இல்லை என வருமே (வரும்) - 2 என்....


ஆண்டவரே உமது இல்லம் ஆலயம் வருகின்றோம்

மாண்புடையோன் வல்லமையோன்

புகழ்மிகு பாடல்கள் பாடுகின்றோம்


1. வானணிகள் திகழ் பேரணியாம் - வந்து

வாழ்த்தொலி முழங்கிடும் ஆனந்தமாய்

வானளவாய் நிற்கும் கோபுரங்கள் - உந்தன்

மாட்சிமை காட்டிடும் சாட்சிகளாய்

வானவர் போல் கூட நாம் வான்புகழைப் பாட

வணங்கிடுவோம் இறைவனையே

வாழ்விலும் தாழ்விலும் நாம் மறவோம்


2. வார்த்தை என்னும் பயிர் விளைநிலமாம் - அருள்

வார்த்திடும் நீர்நிலை இதுவேயாம்

வாருங்கள் அறுவடை செய்குவோம் - நம்

வாழ்வுக்கு உணவாய் உண்டிடுவோம்

வார்த்தையில் வாழ்ந்திடுவோம் அருள்வாக்கில் நிலைத்திடுவோம்

வணங்கிடுவோம் இறைவனையே

வாழ்விலும் தாழ்விலும் நாம் மறவோம்


ஆரம்பமாகிறது திருப்பலி - 2


1. இணையில்லா பலியை ஆற்றிடவே

இறைவனின் வார்த்தையைக் கேட்டிடவே

இனிதே விருந்தில் கலந்திடவே

இணைவோம் ஒன்றாய் உயர்வோம்


2. திருவிருந்தாகிடும் இறைமகனும்

தந்திடும் உறவினை உயர்வுடனே

திறந்திடும் இதயத்தில் ஏற்றிடவே

திருப்பலிதனிலே விழைவோமே


ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே

ஆண்டவர் இல்லம் செல்வோம் - என்றும் - 2

அவனியில் மாந்தர் அன்பில் மிளிர

அருள் வேண்டி பலியிடுவோம் - 2


1. உருண்டோடும் வாழ்வில் கரைந்தோடும் நாளில்

ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் - 2

கானமும் காற்றும் வேறில்லையே ஆ.... - 2

நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே - 2 கா ரிகபா தபநீ கரிஸா


2. விடியலின் பனித்துளி மிதிபடவே - உன்

விடியலின் கனவை யாம் கண்டிடனும்

மனதினைக் காக்கும் மாண்புடன் வா ஆ.... - 2

மனங்களை பலியிட வருகின்றோம்


ஆனந்த கீதங்கள் முழங்கிட எழுவோம்

ஆண்டவர் ஆலயம் நுழைந்திடுவோம்

வாருங்கள் வாருங்கள் வாழ்த்திடுவோம்

வான்புகழ் இன்னிசை இசைத்திடுவோம்


1. விடியலின் வேள்விகள் படைத்திடவே

விடுதலை வாழ்வினைப் பகிர்ந்திடவே

வாழ்ந்திடு இறைகுலமே வணங்கிடு இறைவனையே

புகழ்ந்திடு பலியினிலே வளர்ந்திடு அன்பினிலே


2. இறைவனைத் தேடிடும் உறவுகளே

இறைவழி வாழ்ந்திட வாருங்களே

சமத்துவ உறவிலே சங்கமம் ஆகிடவே

உரிமைகள் அடைந்திடவே உறவினில் இணைந்திடவே


ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட

ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள் - 2

திருப்பலி பீடத்தில் தேவன் வருகிறார்

திருந்திய உள்ளங்களில் அமைதி தருகிறார் - 2


1. வறுமை யாவும் தீர இன்று வாழ்த்துப் பாடுவோம் பாடுவோம்

பெருமை யாவும் நிலைக்க அவரில் சங்கமாகுவோம் - 2

அவரில் சங்கமம் வாழ்வில் சந்தோஷம்

அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம்

சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே


2. உறவில் வளர உண்மை வழியில் வாழ்ந்து காட்டுவோம் வாழுவோம்

பகிர்வில் உயர அன்பில் மலர்ந்து பணிகள் ஆற்றுவோம் - 2

உன் பணி தொடர்வதால் சாட்சியாய் மாறுவோம்

உன் வழி செல்வதால் உலகை மாற்றுவோம்

சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே


ஆலயத்தில் நாம் நுழைகையிலே - புது

நினைவுகள் எழுகின்றன - அந்த

நினைவுகளின் புது வருகையிலே - நம்

நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ...


1 அன்பான மகனைப் பலி கொடுத்த

ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் - 2

பண்பான ஆட்டினைப் பலி ஈந்த

ஆபேலும் இங்கே தெரிகின்றார்


2எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்

இயேசுவும் அங்கு மொழிந்தாரே - 2

என் வீடு இது என் nஐப வீடு

வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்


ஆவியிலும் என்றும் உண்மையிலும்

வழிபட வாருங்கள் - இந்த

அவனியில் இறைவன் அரசினைக் காணும்

ஆனந்தம் பாருங்கள் - 2


1. உலகின் மாந்தர்களே உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள் - 2

இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்

இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள் - 2


2. உலகின் மாந்தர்களே உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள் - 2

வறியோருக்கு வழிகாட்டுங்கள்

வளம் பொங்கிட வகை கூறுங்கள் - 2


இணையில்லா இறைவனின் சொந்தங்கள் - நாம்

இறைவனின் சாயல்களாம்

உறவினில் நனைந்திடும் நெஞ்சங்கள் - புது

உலகத்தின் விடியல்களாம் - 2

தன்னை பலியாய் தந்த பரமன் இயேசு

பலியினில் இணைந்திடுவோம்

கண்ணைக் காக்கும் இமைபோல் காக்கும் தேவன்

திருவடி சரணடைவோம்


1. உதவிடும் கரம் இணைந்தால் இந்த உலகினில் வறுமையில்லை

உறவுகள் பகிர்ந்துவிட்டால் எந்த மனதிலும் சோர்வுமில்லை - 2

ஒன்று கூடுவோம் நன்மை நாடுவோம்

அன்பு இறைவனின் சாயலை நாம் மதிப்போம் - 2


2. அன்றும் இன்றும் என்றென்றும்

ஆண்டவர் அருள்மழை பொழிகின்றார்

ஒன்றாய் வந்தால் தடையில்லை

அன்பிற்கு சாட்சிகள் ஆகிடுவோம் - 2

உள்ளங்கள் கடவுளின் இல்லங்கள்

அதை உவந்தே அர்ப்பணிப்போம் - 2


இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே

கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்

மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்


1. மூவொரு கடவுளர் முடிவில்லா ப்ரசன்னம்

குடும்பமாய் இணைக்கின்றது

நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது - 2

பலியினில் கலந்து உறவினில் இணைய

நம்மையே அழைக்கின்றது - இன்று - 2 கூடிடுவோம்.......


2. இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க

பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது - 2

சோதனை வென்று சாதனை படைக்க

ஆற்றல் தருகின்றது நமக்கு ஆற்றல் தருகின்றது கூடிடுவோம்....


இணையில்லா இறைவனின் திருப்புகழை

அனைவரும் இணைந்தே பாடிடுவோம்


1. அருள் நிறை ஆயன் அக்களித்து

ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து

பரம்பொருள் அவன் பாதம் தனையே - நாம்

பரிவுடன் போற்றி வாழ்ந்திடுவோம்


2. வானுற உயர்ந்த மலைகளுமே

வண்ண எழில்நிறை மலர்களுமே

உனைத் தேடும் சின்ன உயிர்களுமே - நிதம்

உன்னத இறைவனை வாழ்த்திடுமே


இதயங்கள் மலரட்டுமே இங்கு இன்னிசை முழங்கட்டுமே நம்மில்

இறையருள் வளரட்டுமே இகமெல்லாம் பரவட்டுமே


1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம்

மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் - 2

வரையில்லா வரங்களை நமக்குகளித்தார் - தம் - 2

கரையில்லா கருணையால் நமை மீட்டார்


2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது

குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் - 2

நீதியும் உண்மையும் அதன் சுடராம் - அவை

தீதில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்


இதயதீபம் ஏற்றுவோம் இந்த நன்னாளிலே

இன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே

இந்த அன்பெனும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே

இந்தச் சுந்தரச் சோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே

இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள்

இனிது வரைந்த கவிதையே


1. வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை

கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை

கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையே

அத்தனையும் அவர்முன்னே எத்துணை மகிமையே - புகழ்

சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே


2. கற்றவையோ பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை

சத்தியமோ சந்ததியோ சாட்சியமும் தேவையில்லை கண்ணெதிரில்....


இறைகுலமே நீர் வருவீர்

இறை அருளை நீர் என்றும் பெறுவீர்

இறைமொழி கேட்பீர் இறைவழி நடப்பீர்

இறைவனே அருள் பொழிவார்


1. உயிருள்ள விசுவாச இதயமுடன்

உயிருள்ள இறைவனை நாடிடுவோம்

கேட்பதைக் கொடுக்கும் தெய்வமவர்

நிறை மகிழ்வைத் தரும் தெய்வமவர்

வருவீர் வருவீர் பெறுவீர் அருள் பெறுவீர்


2. தாழ்நிலை நின்ற தம் அடிமைதனை

கடைக்கண் நோக்கி அருள் கூர்ந்தாய்

பசித்தவர் நலன்களால் நிரப்பினவர்

உன்னையும் நிரப்பிட அழைக்கின்றார்

வருவீர் வருவீர் பெறுவீர் அருள் பெறுவீர்


இறைகுலமே திருக்குலமே தன்மான தமிழ்க்குலமே

இறைவன் நம்மை அழைக்கிறார் வாருங்கள்

ஏழையரே இனியவரே சுமைதாங்கி சோர்ந்தவரே

இறைவன் இன்று உரைப்பதைக் கேளுங்கள்

புதிய உலகம் படைத்திட புது சமூகமாய் மாறிட

புதிய வாழ்வில் ஒன்று கூடுவோம்


1. அன்பின் பாலமகவே இறைவன் அழைக்கிறார்

இனிய உறவை வளர்க்கவே இறைவன் அழைக்கிறார்

வாருங்கள் வாருங்கள் அன்பின் பாலமாகவே

கூடுங்கள் கூடுங்கள் இனிய உறவை வளர்க்கவே

புதிய விடியல் தேடியே விரைந்து செல்லுவோம்

உறவைப் பகிர்ந்து வாழவே ஒன்று கூடுவோம்


2. தோழமையில் இணையவே இறைவன் அழைக்கிறார்

தொண்டு வாழ்வை தொடரவே இறைவன் அழைக்கிறார்

வாருங்கள் தோழமையில் இணையவே

கூடுங்கள் தொண்டு வாழ்வைத் தொடரவே

புதிய விடியல் தேடியே விரைந்து செல்லுவோம்

உறவை பகிர்ந்து வாழவே ஒன்று கூடுவோம்


இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி

திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி

வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே - 2


1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2

புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே

விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்

இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் வாராய்....


2. மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே - 2

திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்

பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்

மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் வாராய்...


இறைமக்கள் யாவரும் கூடிடுவோம்

இறைவனைப் புகழ்ந்து பாடிடுவோம்

இறைபணி தனைச் செய்ய அவர் அழைத்தார்

அவர் புகழ் பாடிடுவோம்


1. அன்பாலே இறைவன் தன்னை கொடுத்தார்

அருளாலே நம்மை அரவணைத்தார் - 2

நாம் அவர் மந்தையின் ஆடுகளாய்

பலியாக நம்மை தெரிந்தெடுத்தார்

அவர் அழைத்தார் அன்பில் பணித்தார் இறையரசு பெருகிடவே


2. குருவோடு சேர்ந்து நாம் ஆலயத்தில்

குடும்பமாய் பலிதனை செலுத்திடுவோம்

இறைமகன் உடலை நாம் உண்டிடுவோம்

இறைமக்கள் என நாம் வாழ்ந்திடுவோம்

அவர் அன்பின் குரல் நாம் கேட்டிடுவோம் இறையசை பரப்பிடுவோம்


இறை உறவில் மலர்ந்திடுவோம் இணைந்து வாருங்கள்

இனிய தேவன் தந்த பலியில் மகிழ்ந்து கூடுங்கள் - 2

வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள்

பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள் - 2


1. உதயமாகும் இனிய உறவு வாருங்கள்

உலகில் சென்று பலன் தரவே கூடுங்கள் - 2

பகிரும் உள்ளம் நாம் பெறுவோம் வாருங்கள்

பரமன் அன்பில் வாழ்ந்திடுவோம் கூடுங்கள் வாருங்கள்...


2. சுமை மறந்து சுகம் பெறுவோம் வாருங்கள்

இமை திறந்து விடியல் காணக் கூடுங்கள் - 2

இருள் மறைந்து ஒளி நிறையும் வாருங்கள் - நாம்

அருள் வாழ்வில் மகிழ்ந்திடுவோம் கூடுங்கள் வாருங்கள்....


038. இறையாட்சி மலர வேண்டும் புதுவாழ்வு புலர வேண்டும்

வார்த்தை மனுவாக இங்கு நீதி நிலைக்க வேண்டும் - 2

நிலைமாறுமா கரம் சேருமா மனுவாகுமா துயர் மாறுமா

நிலை மாறுமா கரம் சேருமே மனுவாகுமே துயர் மாறுமே

விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்

விரைவில் நாம் காண்போம்


1. பாலும் தேனும் பொழிந்திடுமே கானான் கனவு பலித்திடுமே

பாறை தண்ணீர் சுரந்திடுமே மன்னா நமது கரை தருமே

பாறை நிலங்கள் யாவும் இங்கு பசுமை நிலங்கள் ஆகும் விண்ணும்...


2. சிங்கமும் கன்றும் தோழமையில் சிறுவர் நட்பு பாம்பருகில்

வேலும் வாளும் ஏர்முனையில் துணுக்குகள் எல்லாம் நும்பொழிவில்

வாழும் மனங்கள் யாவும் இனி பாசம் நிறைந்ததாகும் விண்ணும்....


வானின் வரவாய் வையக நலனாய்

வாழ்விக்கும் நதயே நீயே இறையே

இறையாட்சியின் மனிதர்களே மரிமைந்தனின் சீடர்களே

இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்

புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே - 2


1. நாம் வாழும் இந்த பூமி நலமாகிட வேண்டாமா

நலிவுற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா - 2

இயேசுவே காட்டிய வழியுண்டு இயங்கிட நமக்கொரு நெறியுண்டு - 2

எதிர்நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காணுங்கள் - 2


2. இன்று மானிட இதயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா

இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா - 2

மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம் மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே

இந்த உண்மையை வாழ்ந்திடுவோம் எந்தப் பகையினும் வென்றிடுவோம் - 2

கடவுளே நாங்கள் வருகின்றோம் கவினுறு உலகம் படைத்திடவே

கரம் கோர்த்தே சென்றிடுவோம் கருத்துடன் செயல்படவே - 2


இறை இயேசுவின் அரசினிலே இந்த நாள்தரும் இனிமையிலே

இணைவோம் பலி செலுத்திடவே அமர்வோம் திருவிருந்தினிலே


1. மலர்ச்சோலைகள் மணம் தருதே - குயில்

பாடிடும் இசை வருதே - 2

மலையருவியிலே தென்றல் காற்றினிலே

தேவ பேரன்பு ஒளிவீசுதே

இந்தப் பூமகள் தேவனின் கொடையல்லவோ

நன்றி புகழ்பாடி சிரம் தாழ்த்துவோம்


2. வயல் மலர்களை அழகு செய்தார்

வான் பறவைக்கும் உணவளித்தார் - 2

எதை உண்பதென்றும் எதை உடுப்பதென்றும்

ஏன் கவலை உள்ளத்திலே

இறைத் தந்தையின் பிள்ளைகள் நாமல்லவோ

இனி எந்நாளும் பேரின்பமே


இறை அன்பில் வாழ எழும் இறைகுலமே

நிறை அருள் பெறவே இணைந்திடுவோம்

இறைவனின் அரசு இகம் எங்கும் பரவ

இனிதாய் இணைவோம் திருப்பலி செய்வோம்

எழுவோம் இணைவோம் தருவோம் நமைத் தருவோம்


1. மனிதனின் உரிமையை மதித்திடவும்

மனிதனின் மாண்பினைப் போற்றிடவும்

எளியவர் ஏற்றங்கள் பெற்றிடவும்

இறைமகன் பலி செய்ய அழைக்கின்றார் - 2 நாம்


2. சுயநல அவலங்கள் ஒழித்திடவும்

சுதந்திர வாழ்வினை அடைந்திடவும்

சுமைகளைச் சுகமாய் மாற்றிடவும்

திருமகன் நமைத் தினம் அழைக்கின்றார் - 2 நாம்


இறைவன் நம்மை அழைக்கிறாரே விரைந்து வாருங்கள்

புதிய உலகம் படைத்திடவே மகிழ்ந்து கூடுங்கள்

இறைவன் அரசு வளர்ந்திடவே இறைவார்த்தை வழங்கிடவே - 2

இனிதே இணைந்தே சென்றிடுவோம்


1. தாயின் கருவினிலே நம்மைத் தெரிந்தெடுத்தார்

அவரின் கைகளிலே நம் பெயரைப் பொறித்து வைத்தார் - 2

அவரில் நம்மை அர்ப்பணம் செய்ய

மனித மாண்பு மண்ணில் உயர - 2 எழுவீர் வருவீர் இயேசு வழியிலே


2. அன்புப் பணியினிலே இறைவனைச் சொல்லியே

ஏழை மனிதரிலே இயேசுவைக் காணவே - 2

உண்மை நீதி நேர்மை நிலைக்க

பொய்மை ஐhதி வன்மை அழிக்க - 2 எழுவீர்....


இறைவன் தந்த நாளில் எல்லாம் இனிய நாளிது

இதயம் எங்கும் அருள்மழை வெள்ளம் பொங்கிப் பாயுது

பொங்கிப் பாயுது ஆ..... பொங்கிப் பாயுது


1. பூமியின் இருளை விலக்கிடவே

ஆதவன் இயேசு எழுந்தருள்வாய்

பூபாள ராகத்தை இசைத்திடவே

ஆனந்த மழையினைப் பொழிந்திடுவாய்

இதயம் உன்னிலே உதயம் காணுதே - 2

இதயம் வீழ்ந்திடும் பொழுதுகளில்

நினைவுகள் தானே உந்தன் நினைவுகள் தானே


2. நீதியின் வழியினில் வாழ்ந்திடவே

நெஞ்சினில் உறுதியைத் தந்திடுவாய்

வீதிகள் எங்கணும் விடுதலையின்

பயனங்கள் தொடர்ந்திட துணைபுரிவாய்

புதிய பூமியே புலர வேண்டும் - 2

புது யுகங்களைத் தோழமையில்

படைத்திடுவோமே தடைகளைத் தகர்த்திடுவோமே


இறைவனின் ஆவி நிழலிடவே

இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே

என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்

அவர் பணிதனைத் தொடர்ந்திடவே


1. வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்

அடிமைகள் விடுதலை அடைந்திடவும்

ஆண்டவர் அரசில் துயரில்லை - என

வான் அதிரப் பறைசாற்றிடவும் என்னை....


2. குருடரும் ஒளியுடன் நடந்திடவும்

குவலயம் நீதியில் நிலைத்திடவும்

அருள்நிறை காலம் அவனியிலே - இங்கு

வருவதை வாழ்வினில் காட்டிடவும் என்னை....


இறைவனின் பலியில் இணைந்திட வருவோம்

இறைவன் அழைக்கின்றார் இனிதே அழைக்கின்றார் - 2

துன்பமில்லை துயரமில்லை இறைவனின் உறவினிலே

வாழ்வுண்டு வழியுண்டு இறைவனின் துணையினிலே


1. அடிமைத்தளையிலிருந்து அன்று முன்னோரை மீட்ட தேவன்

பாவத்தளையிலிருந்து நம்மை மீட்கவே அழைக்கின்றார் துன்பமில்லை துயரமில்லை....


2. அடிமை என்றழைக்கவில்லை நம்மை நண்பர்கள் என்றாரே

உரிமை வாழ்வு வழங்க

நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார் துன்பமில்லை.....


இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பலகோடி

குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி


1. மறைபொருள் ஆனவனே - உன்னை

மனங்களில் சிறை வைத்தோம்

குறையுள்ள கோவிலிலே - உன்னை

கொண்டு நாம் குடிவைத்தோம்


2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய

அறிவென்றும் நாம் தெரிவோம்

இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல

இரக்கம் நீ என மொழிவோம்


இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்

என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள் - 2


1. பாடும் குயிலுக்கு பாடச் சொல்லி தந்தவர் யார்

ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லி தந்தவர் யார்

அவரே என் இறைவன் அவர் தாள் நான் பணிவேன்

அவர் தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்


2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்

வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவர் யார்

என்னென்ன விந்தைகள் எங்கெங்கு காண்கிறோம்

அனைத்திற்கும் அடிப்படையில் அவர் தான் காரணம்


இறைவனைப் புகழ்வோம் வாருங்களே

இணையில்லா அன்பில் இணைந்திடுவோம்

இந்நாளில் நம்மை அழைக்கின்றார்

எல்லோரும் ஒன்றாய் கூடிடுவோம்


1. இருகரம் நீட்டி அழைக்கின்றார்

இதயத்தைத் திறந்து அழைக்கின்றார் - 2

உதயத்தை தேடி அலைவோரின் - 2

உள்ளத்தைத் தேடி அலைகின்றார்

புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம்

புனிதன் இயேசு கொடுக்கின்றார் - 2


2. அன்புடன் வாழ அழைக்கின்றார்

அருளினைப் பொழிய அழைக்கின்றார் - 2

இன்னலில் வாடி அழுவோரின் - 2

இதயத்தைத் தேற்ற அழைக்கின்றார் புதிய....


இறைவனைப் புகழ்வோம் வாருங்கள்

மறைமக்கள் யாவரும் கூடுங்கள்

அவர் பெயர் சொல்லிப் பாடுங்கள்

இறைவா இதோ வருகின்றோம் - 2


1. இறைவன் நம்மைத் தெரிந்தெடுத்தார்

கறையில் குலமாய் மாற்றிவிட்டார் - 2

இருளை முழுவதும் நீக்கிவிட்டார்

அரிய தம் ஒளியால் நிறைத்துவிட்டார்


2. அன்று நாம் இறைவன் மாந்தரில்லை

இன்றவர் புதல்வர் யாரில்லை - 2

அன்று நாம் இரக்கம் அறியவில்லை

இன்றவர் இரக்கம் யாருக்கில்லை


050. இயேசு அழைக்கிறார் - 2

ஆவலாய்த் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கிறார்


1. இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே

இதய அமைதி இனிதே அமைய

இயேசு அழைக்கின்றார் - 2


2. கவலைப்படுவோரே கலங்கித் தவிப்போரே

கவலை நீக்கிக் கலக்கம் போக்க

கடவுள் அழைக்கிறார் - 2


இயேசு என்னும் பெயரைப் சொல்லி மீட்படைவோமே

இயேசுவாக மாறி வாழ பலி கொடுப்போமே

விசுவாசத்துடன் ஒன்றாகிடுவோம் - நாம்

நிறைபலியாம் திருப்பலியை நிறைவேற்றுவோம் - 2


1. தன் உடலை இயேசு கொடுத்து பலியானார்

தன் இரத்தம் சிந்தி நம்மை மீட்டு விட்டாரே

நினைத்துப் பாருங்கள் நினைத்துப் பாருங்கள்

வான் தெய்வம் பலியாடாய் மாறிவிட்டது

இணைந்து வாருங்கள் அவரோடு நமைச் சேர்த்து

பலியாக்கவே பலியாக்கவே


2. பாவத்திற்காய் மனம் வருந்தி தூய்மையாகுவோம்

வாழ்வளிக்கும் அருள்வாக்கைக் கேட்டு மகிழ்வோம்

எடுத்து வாருங்கள் எடுத்து வாருங்கள்

வாழ்வினிலே அனுபவித்த இன்ப துன்பத்தை

கொடுத்து கேளுங்கள் அவர் போல பிறர்க்காக

நாம் வாழவே நாம் வாழவே


இயேசுவின் சந்நிதியில் மகிழ்வோம் வாருங்கள்

என் தேவனில் என் இயேசுவில் இணைந்து மகிழுங்கள்


1. சந்தங்கள் பல வண்ணங்கள் உந்தன்

வண்ணங்கள் நிதம் பாடுதே

எண்ணங்கள் சங்கீதங்கள் என்றும்

என் இன்ப சுபராகங்கள்

நீ செய்த நன்மைகள் என் வாழ்வின் விடியல்கள்

என்றென்றும் நான் பாடுவேன் - 2


2. காலங்கள் பல நாளுமே உந்தன்

கனிவான அருள் தாருமே

தாகங்கள் இனி மாறுமே என்றும்

நெஞ்சார்ந்த குறை தீருமே

என் ஆயுள் காலங்கள் உன் அன்பில் நான் வாழ

என் இல்லம் தங்கிடுவாய் - 2


இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம்

அமைத்திட எழுந்திடுவோம் - நம்

இதயத்தில் எழுந்திடும் எண்ணங்கள் யாவையும்

இசையுடன் முழங்கிடுவோம் - 2

இறைகுலமே எழுக இறையரசே வருக - 2


1. ஏழைகள் வாழும் தெருக்களில் இறங்கி

இயேசுவே நடந்து சென்றார் - நம்

இறைவனின் அரசு இவர்களுக்குரியது

என்பதை எடுத்துச் சொன்னார் - 2 அந்த

இறைமகன் இயேசுவின் பாதங்கள் வழியில்

பயணத்தைத் தொடர்ந்திடுவோம் - வாழ்க்கை - 2


2. விடுதலை அடைவர் சிறைகளில் வாழ்வோர்

என்று இயேசு சொன்னார் - அவர்

ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமை அற்றோருக்கும்

வழங்குவேன் வாழ்வு என்றார் - 2 நாம்

விழிகளை திறந்து உலகினைப் பார்ப்போம்

ஆவியில் வழிநடப்போம் - தூய - 2


இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்

திவ்விய அவர் சமூகம் நம்

அருகினில் இருக்கின்றது - 2


1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் - 2

மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாது எந்நாளிலும் - 2


2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே - 2

துதிக்கின்ற போது எரிகின்ற நெருப்பு மகிமையைக் காணச்செய்யும் - 2


இயேசுவின் வழியில் ஓரணியாக இயங்கிட அனைவரும் கூடிடுவோம்

கறைகளைக் கழுவி நிறைவினை அளிக்கும்

கல்வாரி பலியினில் கலந்திடுவோம்

வருவோம் வருவோம் ஆலயமே

தருவோம் தருவோம் நம் மனமே - 2


1. மதங்களில் புதைந்து மனிதத்தை மறந்தோம் மாறி வருகின்றோம்

உள்ளங்கள் தெளிந்து உறவினைப் புரிந்து

உன்னில்லம் வருகின்றோம் - 2

கண் போல எம்மைக் காக்கின்ற தேவா

அன்போடு நாளும் அணைக்கின்ற நாதா

அலையென திரண்டு ஓடோடி வந்தோம் வருவோம்....


2. கனவினில் மிதந்து கடமைகள் மறந்தோம் மாறி வருகின்றோம்

சுயநலம் கடந்து சமத்துவ உலகில் சுடர்விட வருகின்றோம் - 2

மண் வாழும் மாந்தர் உன் போல வாழ

எம் ஆவல் ஆற்றல் எல்லாமும் சேர்ந்து

உன் வாசல் வந்தோம் எம் வாழ்வைத் தந்தோம்


இயேசுவில் இணைந்து பலியாக வாருங்களே

அவர் காட்டும் பாதையில் பயணம் சென்றிட

பணிவுடன் கூடுங்களே - 2

மகிழ்வூட்டும் வழிப்பயணம் - இது

நம் வாழ்வின் திருப்பயணம் - 2 அல்லேலூயா - 4


1. அன்பிலே நிலைத்திருங்கள் இறை அருளும் நிலைத்து நிற்கும்

பண்போடு வாழ்ந்திருந்தால் அவர் பரிவும் நமக்கிருக்கும் - 2

இயேசு சொன்ன வழி இதுதான் - தினம்

வாழ்வது நாம் காணும் சுகம்தான் - 2


2. எளியோர்க்கு நற்செய்தியாக நம் பலி வாழ்வை அமைத்திடுவோம்

சிறைப்பட்டோர் நிறைவாழ்வு காணநாம்

தடைதாண்டி நடைபோடுவோம் - 2

இயேசு சொன்ன வழி இதுதான் - தினம்

வாழ்வது நாம் காணும் சுகம்தான் - 2


இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட

எழுந்திங்கு வாரீர் இறைமக்களே

அன்பினில் நனைந்திட அருளினில் வளர்ந்திட

நிறைவுடன் வாரீர் மானிடரே

எழுக எழுக இறைமக்களே வருக வருக மானிடரே - 2


1. புதியதோர் ஆவியும் புதியதோர் இதயமும்

பெறுவது வாழ்வின் கொடையன்றோ

அதை அடைய முயல்வதும் அமைதி காண்பதும்

அகிலம் காணும் வழியன்றோ - 2 எழுக....


2. உறவினில் வளர்ந்திட உண்மையில் நனைந்திட

தன்னையே தந்தவர் இறைவன் அன்றோ

அவர் அரசினைக் காண ஒன்றாய் இணைவது

புதுயுகம் காணும் முறையன்றோ - 2 எழுக....


இயேசுவில் இணைந்திட வாருங்களே

குருவுடன் சேர்ந்திங்கு கூடுங்களே - 2


1. இறைமகன் இயேசுவின் பலியிதுவே - 2

இகபரம் இணைந்திடும் வழியிதுவே - 2

மறைவழி மனிதனை மாற்றிடவே - 2

மனதில் அமைதி நாளும் பெறவே


2. கறைபட்ட வாழ்வினைக் களைந்திடவே - 2

குறைபட்ட நெஞ்சங்கள் திருந்திடவே - 2

எளியவர் வாழ்வில் நலம் பெறவே - 2

ஏழை மகிழ்வை என்றும் பெறவே


இரக்கத்தின் இறைவனின் இறைகுலமே

இணைவோம் பலிசெய்து மகிழ்வோம்

இகத்தினில் இறைவனின் புகழ்ச்சிகளை

இன்றும் என்றும் சாற்றிடுவோம் - 2


1. மண்ணின் மாந்தரில் நம்மை - சொந்த

மக்களாய் தேர்ந்து கொண்டார் - 2

கண்ணின் இமைபோல் என்றும் - நம்மை

கருணையில் காத்து வந்தார் - 2

பாடிப் புகழ்ந்திடுவோம் பலியில் பலன் பெறுவோம் - 2


2. பிரிந்து மறந்திட்ட போதும் - செய்த

உடன்படிக்கையை அவர் நினைத்ததார்

வருந்தி சோர்ந்திட்ட நேரம் - உடன்

இருந்து விருந்தும் அளித்ததார் - 2 பாடி...


இளங்காலை இவ்வேளையிலே இறைவன் திரு இல்லத்திலே

இணையில்லா பலி அளித்திடவே இறைமா குலமே வருவாய்


1. இறைவனும் மாந்தர்களும் ஒன்றி கலந்திடும் இடமிதுவே

இன்பமும் துன்பமுமே - 2 ஒன்றாய் கலந்திடும் இடம் இதுவே


2. இறைவனே பலியாகும் ஈடிணையில்லாப் பலியினையே

பரம பிதாவினுக்கே பலி செலுத்திடும் இடமிதுவே


இன்பம் பொங்கும் நாளினிலேஇனிய நல்வேளையிலே

இதயங்களின் சங்கமமே இறையரசின் மங்களமே


1. உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம்

மனங்கள் அன்பில் இணையும் - அருள்

மழையில் மலர்ந்து நனையும்

குறைகள் யாவும் இங்கு கரைந்திடுமே - மன

நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே - 2


2. அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில்

அடிமைக் கோலம் ஒழியும்

அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும்

பயணம் இனிது இங்கு தொடர்ந்திடவே - அன்பின்

பாதை பாரெங்கும் படர்ந்திடுமே


இளமை இனிமை புதுமை ராகம் பாடி வருவோம்

வானம் இன்று மண்ணில் வர கூடித் தொழுவோம்

உலகம் யாவும் ஒன்று உயிர்கள் யாவும் ஒன்று

இயேசுவில் அனைவரும் சங்கமிப்போம்


1. அன்பு என்னும் ஆடைகளை நாம் அணிவோம்

அண்ணல் இயேசு சுவடுகள் நாம் தொடர்வோம்

தூய ஆவி கொடைகளை நாம் பெறுவோம்

சேவை செய்யும் உள்ளம் கொண்டு நாம் வருவோம்


2. சாதி இல்லை பேதமில்லை இறைபலியில்

நீதி வாழும் நேர்மை ஆளும் இறையரசில்

வீதி எங்கும் தேவன் நாமம் கூறிடுவோம்

ஆதிசபை வாழ்க்கை நெறி வாழ்ந்திடுவோம்


உதயம் தேடும் இதயங்கள் உறவில் வளரும் பாதையில்

இறையுன் இல்லம் கூடி வருகின்றோம்

புதிய வாழ்வின் கொள்கையாம் மனித மாண்பு பேணிடும்

ஆற்றல் வேண்டி இணைந்து பணிகின்றோம்

வருக வருக மனிதமே இணைக வாழ்வுப் பலியினில்

தலைவன் இயேசு தலைமையில் தகர்ப்போம் தீமை தடைகளை - 2


1. நாம் ஏழைகள் இங்கு நமக்கெங்கே சமத்துவம்

நாம் அடிமைகள் உலகில் நமக்கெங்கே உரிமைகள்

அடிமை வாழ்வு வாழவா இறைவன் மனிதம் படைத்தார்

அந்த கோலம் அழிக்கத்தான் தந்தை மகனை அனுப்பினார்

அவர் வாழ்வில் நாம் இணைந்து புதுயுகத்தின் பணி தொடர்வோம் - 2


2. ஏன் பிளவுகள் எங்கும் சுயநலத்தின் அமைப்புகள்

வீண் வாதங்கள் மனிதம் மிதிபடும் நேரங்கள்

உறவில் பிரிந்து வாழவா உயிரை இழக்கத் துணிந்தார்

அன்பு வேதம் மலரத்தான் தனது வாழ்வைப் பகிர்ந்தார் அவர்....


உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர

மனங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க

வாரும் இறைகுலமே - 2


1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு

நிலவாய் நிலமதில் நடந்தவனே

இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்

இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே

பாவம் நம்மிலே மறையாதோ தேவன்

பாதம் நம்மிலே பதியாதோ

சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்


2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்

கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்

ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்

விழிகளில் கருணை மழை பொழிந்தாய்

புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்

அன்பின் பலியினில் கலந்திடவே

ஓர் குலமாய் ஒன்று கூடி வந்தோம்


உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்

உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் - 2

உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட

உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம்

ஆலயம் ஆலயம் ஆலயம் ஆலயம்


1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்

பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் ஆலயம்

மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்

மானுடர் வாழ்வுக்காய் தனைத் தரும் நெஞ்சங்கள்

நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்

உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்

எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2


2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் ஆலயம்

காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் ஆலயம்

விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்

கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்

நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்

நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்

எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2


உயிருள்ள இறைவனின் உறவினில் இணைந்திட

வருவீர் திருக்குலமே - 2

நம்மைத் தாங்கும் தேவனவர்

நம் நினைவாய் வாழ்கின்றவர் - 2


1. நிலை தடுமாறுவோர் கால்கள் திடன் அடையும்

நீதி வழிதனில் நடத்திடுவார் - 2

தம்மை நம்புவோரின் சோர்வை நீக்கிடுவார்

சுகம் தந்து உயர்த்திடுவார் - 2

புதுச் சிறகினில் கழுகெனப் பறந்து மகிழ்ந்திட

ஆற்றல் அளித்திடுவார் - 2 நம்மை...


2. அன்புக் கயிறுகளால் கட்டிக் காத்திடுவார்

அவர் கரங்களில் சரணடைவோம் - 2

பக்கம் சாய்ந்திடுவார் பசி நீக்கிடுவார்

இனி கவலைகள் நமக்கு இல்லை - 2

நம்மை அறிந்து அன்பு செய்ய ஏங்கும் நெஞ்சம் உண்டு

விரைந்திடு இறைகுலமே - 2 நம்மை....


உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம்

பகிர்வின் பூக்கள் பலியாய் மலரும் நேரம் - நம்

இயேசுவின் பின் அணியாய் வருவோம் - அவர்

வார்த்தை தனை இனி வாழ்வாய் அணிவோம்

வருக அன்பின் இறையரசே வருக வருக

எழுக மனித இறையுறவில் எழுக எழுக


1. நமை வீழ்த்திடும் சுமை யாவையும் பலியாக்கிடு முன்

மத பேதங்கள் இன பிரிவுகள் நம்மில் மாற்றிடுவோம் - 2

மனிதம் மகிழ்ந்திடும் எளியோரின் உறவில்

இறைமை மலர்ந்திடும் அன்பால் எழும் உலகில் - 2


2. இறைவார்த்தையை நிதம் வாழ்வினில் அரங்கேற்றிடுவோம்

பெறும் மகிழ்வினைப் பிறர் வாழ்விலும் பகிர்வாக்கிடுவோம் - 2

உழைக்கும் உயிர்களில் தெய்வீகம் உறையும்

உறவின் சக்தியில் உரிமைக்கதிர் உதிக்கும் - 2


உன் ஆலய சந்நிதி மூலையிலே

தேவா எனக்கோர் இடம் வேண்டும்

இயேசு உந்தன் திருமுக அழகினை

பாடித் தொழ வேண்டும் - தேவா - 2


1. மணிமுத்து மாளிகை மாடத்திலே

மன்னராய் வாழ்ந்திடப் பெருமையில்லை

உன் திரு கோவிலில் காவலனாய் நானிருக்க மேன்மையுண்டு


2. தட்டினால் திறக்கும் உன் மனக்கதவு

தேடிட நாளெல்லாம் திடம் அருள்வாய்

சிறு பொழுதேனும் உனைப் புகழ உனதருளை எனக்கருளும்


உன் இதய வாசல் தேடி வருகிறேன்

என் இதயம் உறைய என்னில் வாருமே

நீ இல்லையேல் நானில்லையே - 2

நான் வாழ என்னுள்ளம் வா


1. காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்

காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்

உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா

உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா


2. குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்

நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம் உன்...


3. உருவங்கள் மாறலாம் உருமாறிப் போகலாம்

உருகும் மனம் கருகலாம் உறவும் என்னை வெறுக்கலாம் உன்...


உன் திருப்புகழ் பாடியே உன் பீடம் வருகின்றோம்

உன் இதயக் கோவில் தன்னில் குடியிருக்கவே

எம் கரங்களை உயர்த்தியே உன் பாதம் பணிகின்றோம்

எம் இறைவா என்றும் நீ எம்மைக் காப்பதால்


1. கருணை தெய்வம் உன்னில் என்னைக் காண விழைகின்றேன்

கர்த்தர் இயேசு என்றும் உம்மைக் கூவி அழைக்கின்றேன் - 2

கள்வனைப் போல் உம்மை நான் இகழ்ந்தாலும் - ஜெகக் - 2

கண்ணிமைப் போல் என்றும் எம்மைக் காக்கின்றார்


2. அன்புக்காக ஏங்கி அலையும் தன்னையே

அன்பினால் ஆட்கொண்டு ஆளும் தலைவனே - 2

அருளும் உன் அன்பினை மறந்தாலும் தினம் - 2

அருட்கரம் நீட்டி என்னை அரவணைக்கின்றார்


உமது அரசு வருக எங்கள் இதயமே மகிழ்க

மக்கள் வாழ்வெல்லாம் மலர

மனித மாண்பு உயர்ந்திட இறைவன் ஆட்சி துலங்கிட


1. மாந்தர் தம்மை வாட்டும் வறுமை ஒழியவேண்டுமே

மகிழ்வு தென்றல் இன்னும் எங்கும் வீச வேண்டுமே

ஏற்றத்தாழ்வு என்னும் நோயும் நீங்க வேண்டுமே

ஏங்கி தேடும் ஒருமைப்பாடு விடிய வேண்டுமே

வேதங்கள் எல்லாம் வாழ்வாக மாறிட

பேதங்கள் எல்லாம் நில்லாமல் ஓடிட

உலகமெல்லாம் ஒரே குடும்பம்

ஏழை வாழ்வு மலரட்டும் ஏங்கும் நெஞ்சம் மகிழட்டும் - 2

இயேசுவின் கனவெல்லாம் நினைவாகட்டும்


2. கடவுள் தாமே எல்லோருக்கும் தாயும் தந்தையாம்

கவி உலகில் மாந்தரெல்லாம் உடன் பிறந்தவராம்

படைப்பெல்லாம் எல்லோருக்கும் பொதுவுடைமை தான்

பகிர்ந்து வாழ்தல் நமது வாழ்வின் திருக்கடமை தான்

நண்பர்கள் ஆயினும் கன்னியர் ஆயினும்

துன்பங்கள் தேடினும் இன்பங்கள் கூடினும்

அன்பில் வாழும் இறை சமூகமாகணும்

எங்கும் துன்பம் விலகட்டும் தங்கும் இன்பம் பரவட்டும் - 2

இயேசுவின் கனவெல்லாம் நனவாகட்டும்


ஒரு குலமாய் ஓரினமாய் வாழ இறைவன் அழைக்கின்றார்

உலகில் ஜாதி பேதமின்றி ஒன்றி வாழ அழைக்கின்றார் - 2

ஒரு மரம் தோப்பாவதில்லை உலகறிந்த உண்மையே

ஒன்றுபட்டு உழைப்பதாலே உண்டு என்றும் நன்மையே - 2


1. சமுதாய வாழ்வில் நமது ஈடுபாட்டை உணருவோம்

சமய மொழி பண்பாடு தன்னில் சமத்துவத்தை நாட்டுவோம் - 2

நமது அறிவு ஆற்றலோடு நாடும் தொழில் நுட்பமும்

நமது வாழ்வை வளப்படுத்தும் அருட்கொடையாய்க் காட்டுவோம் - 2


2. போர் வெறியைத் தூண்டுகின்ற ஆயுதங்கள் ஒழிந்திட

பூரணமாய் அமைதி வாழ்வில் பொழிந்தே உலகம் ஒளிர்ந்திட - 2

பார் முழுதும் இறையரசின் மாண்பு யாவும் மலர்ந்திட

பரமன் அன்பில் மாந்தர் எவரும் பரிவுடனே வாழ்ந்திட - 2


ஒளியில் நடந்து வா சகோதரா ஒளியில் நடந்துவா சகோதரி

ஒளியாம் கிறிஸ்துவில் நடந்து வா

வழியாம் கிறிஸ்துவில் நடந்து வா இயேசு நம் ஒளி - 3


1. அவரில் வாழ்ந்தால் இருளில்லை

அவரில் வாழ்ந்தால் பாவமில்லை

மீட்கும் தேவன் அவரன்றோ

இளைப்பாற்றும் இறைவன் அவரன்றோ


2. அவரில் வாழ்ந்தால் நோயில்லை

அவரில் வாழ்ந்தால் சுமையில்லை

குணமாக்கும் தேவன் அவரன்றோ

இளைப்பாற்றும் இறைவன் அவரன்றோ


3. அவரில் வாழ்ந்தால் வறுமையில்லை

அவரில் வாழ்ந்தால் துன்பமில்லை

நிரப்பும் தேவன் அவரன்றோ

இன்பத்தின் இறைவன் அவரன்றோ


கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி

செல்வோம் புதிய பாதை இயேசு அழைக்கின்றார் - 2


1. நீதி மறையும் போது அமைதி இல்லையே - 2

நீங்காப் பகையினாலே வாழ்வில் தொல்லையே

இணைவோம் பகை மறப்போம் இறைவன் உறவிலே - 2


2. கவலை இனியும் இல்லை காப்பார் இறைவனே

அவரின் அன்பின் அரசில் அனைத்தும் இனிமையே

இணைவோம் அன்பைப் பகிர்வோம் இறைவன் உறவிலே - 2


காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு

சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளின் விழு

ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை

ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை


1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு

திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு - 2

பெரும்வர கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2

திருமறைத் தகனப்பலி பீடத்தில் குழுமிவிடு


2. வருங் குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று

திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து - 2

சிரமே தாள் பணிந்து சிந்தையை இறைக்களித்து - 2

பரமுதல் தருகின்ற அருட்பலி பங்கேற்பாய்


கீழ்வானம் சிவக்கும் இயேசுவின் வரவால்

தூள்தூளாய் போகும் தீமையின் வடிவம்

வீழாத உம் தலைமை எம் வாழ்நாளில் விளக்கானால்

வாழாத இவ்வுலகம் செங்கதிராய் நிமிர்ந்து நிற்கும்

இயேசு எம் தலைவா நீர் வருக

புது வாழ்வு தரவே வந்திடுக - 2


1. எரிந்திடும் மெழுகாய் தியாகமே செய்தால்

செல்லாத காசாக மதிக்கப் பட்டோம்

புரியாத அன்பை பலியாலே விளக்கி

புரிய வைத்தீரே பணியின் மகிமை - 2 இயேசு...


2. பொருளினைச் சேர்க்கும் ஆசைகள் குவிந்து

பொன்னான உறவினை முறிக்கிறது

தலைசாய்க்க இடமே இல்லாமல் வாழ்ந்து

தந்தை அரசின் இல்லம் அமைத்தீர் - 2 இயேசு...


குருவாய் மலர்ந்த கிறிஸ்தவ உலகே

குருவுடன் பலியில் இணைந்திட வருக - 2


1. எல்லையில் மகிமை இறைவனுக்களிக்க

தொல்லைகள் விலக்கி இன்பத்தில் நிலைக்க

இதயத்தில் பெருகும் நன்றியைத் தெளிக்க - 2

இறைவனுக்குகந்த பலி செய்ய எழுக


2. இறைவனின் உரையில் இனிமையின் பொலிவும்

இறைதரும் கனவில் இறப்பில்லா வாழ்வும்

நமைப் பலிப்பொருளாய் தருவதில் நிறைவும் - 2

நாளுமே சுவைக்க பலிசெய்ய எழுக


சுபதினம் இன்று சுபதினம் மண்ணுலகில் இன்று சுபதினமே

இன்பம் பொங்கும் இந்நாளில் இனிதான பொன்னாளில்

ஆ.... நாம் பாடுவோம் - 2 அல்லே அல்லே அல்லேலூயா - 4


1. மண்ணில் பணி செய்ய நல்மனதை ஈந்து

உண்மை பணி ஆற்றுகின்ற மனதினைப் பெறுவோம் - 2

கண்பட்ட இடமெல்லாம் கிற்pஸ்து நாமம்

மண்ணுலகில் பரப்புகின்ற அருள்வரம் பெறுவோம் - 2


2. புண்பட்ட மனத்தோர்க்கு ஊக்கம் ஊட்டும்

புனித நல் பணி செய்யும் மனதினைப் பெறுவோம் - 2

எந்நாளும் இயேசுபிரான் வழங்கும் நல்வாழ்வை

எல்லோர்க்கும் பகிர்ந்தளிக்கும் நிறைவரம் பெறுவோம் - 2


தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ

வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா - 2


1. எனைச் சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது

துணையாகி எனை ஆள்பவா - 2

மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு - 2

குணமாக்க வருவாயப்பா என்னை உனதாக்கி அருள்வாயப்பா


2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்

வழிகாட்டும் ஒளியானவா - 2

நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே - 2

நாதா உன் புகழ் பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்


தலைவா உனைவணங்க என் தலைமேல் கரம் குவித்தேன்

வரமே உனைக் கேட்க நான் சிரமே தாள் பணிந்தேன்


1. அகல்போல் எரியும் அன்பு அது பகல் போல் மணம் பெறவும் - 2

நிலையாய் உனை நினைத்தால் நான் மலையாய் உயர்வடைவேன் - 2


2. நீர் போல் தூய்மையையும் என் நினைவினில் ஓடச் செய்யும் - 2

சேற்றினில் நான் விழுந்தால் என்னை சீக்கிரம் தூக்கிவிடும் - 2


3. ஞானத்தில் சிறந்தது என்ன உயர் தானத்தில் சிறந்தது என்ன - 2

தாழ்மையில் மனமில்லையோ என் ஏழ்மையை என் சொல்வேன் - 2


திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே

ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம்

ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே - 2


1. ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் - 2

ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் - 2

அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்

அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்

அவர் மந்தையின் ஆடுகள் நாம்


2. இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் - 2

பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் - 2

அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்

அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவர் அன்பே நமை நடத்தும்


திருச்சபையாய் உன் பீடம் வந்தோம் உன் பாதம் நாடிவந்தோம்

இறைகுலமாய் கரையில்லா அன்பில் ஒன்றாக கூடிவந்தோம்

பிரிவினை அகற்றிட பிறரன்பில் வாழ்ந்திட

உன்னருள் துணையினை தேடிவந்தோம்


1. சுமைதாங்கி நீரே எம் நம்பிக்கை நீரே எம் இறைவா

இமைப்பொழுதும் எம்மை விலகாமல் காப்பாய் எம் தலைவா

உந்தன் கரத்தில் சிறுமலராய் - 2 எம்மையும் தாங்கிடுவாய்

வருகிறோம் இணைந்து வருகிறோம்

வரங்களால் நிரம்ப விழைகிறோம்


2. உம்மோடு வாழும் நல்வரமொன்று வேண்டும் எம் இறைவா

இதயங்கள் இணைய புதுவாழ்வு மலரும் எம் தலைவா

உந்தன் அணைப்பில் உள்ளம் மகிழும் - 2

எம் துணை நீரல்லவா - வருகிறோம்....


திருப்பலி பீடம் குருவுடன் செல்வோம்

அருளலை பாயும் ஆற்றிலே வீழ்வோம்

செல்வோம் வீழ்வோம் - 3


1. திருச்சபை அளிக்கும் மலைப்பலி வாய்ப்பை

விருப்புடன் ஏற்று பொறுப்புடன் நடத்த - 2

கருத்துடன் கூடி கரங்களைக் குவித்து

கலையில் ஒளியில் கடவுளைப் பாட - 3


2. மரமதில் கரமதனை விரித்து

மண்ணுயிர் வாழ தன்னுயிர் ஈந்து

பரணடி நின்றால் பாவ இருள் நீங்கும் - 2

பகலவன் முன்னே பனித்துளி போல - 3


3. மனுக்குலம் மீட்க மனுவுரு எடுத்து

மனு உடலான இறைமகன் இயேசு

உணவினை உண்டு உயிரினில் கலந்து

உலகொடு ஒன்றாய் நாம் உறவாட -3


தீபத்தின் ஒளியில் இணைவோம்

திருப்பலி செலுத்திட விரைவோம் - 2

புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட


1நல்வாழ்வின் தீபங்களாய் - இங்கு

நாளெல்லாம் ஒளிர வாருங்களே

நம் வாழ்வின் தேவைகளை - நிதம்

நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்

அவரின் இல்லம் தினம் வந்தால் - நம்

உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே - 2

அன்பு செய்யும் உள்ளங்களே - இறைவனின்

அருள் பெறும் இல்லங்களே - 2


2. இயேசுவோடு நாம் நடந்தால் என்றும்

நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே

நன்மை செய்து நீ மகிழ்ந்தால் - இங்கு

உண்மை ஒளி உனக்குக் கிடைத்திடுமே

வார்த்தை இங்கு மனுவானார் - நம்

வாழ்வினில் என்றும் குடிகொண்டார் - 2 அன்பு....


நல்லுறவில் இறை சமூகமாவோம் நம் இயேசுவின்

அன்பினிலே இறையாட்சி வளர்ப்போம்


1. அன்புதான் உறவுக்கு அடித்தளம்

உறவுதான் உயிருக்கு அடைக்கலம்

அன்பினிலே உறவு வரும் உறவினிலே நிறைவு வரும் - 2

நிறைவினிலே இறையாட்சி மலரும் - நம் - 2


2. அன்புதான் நீதியின் துவக்கம் நீதிதான் மானிட ஏக்கம் - 2

அன்பினிலே நீதி வரும் நீதியிலே வாழ்வு வரும் - 2

வாழ்வினிலே இறையாட்சி மலரும் - புது - 2


3. ஒற்றுமையே உலகின் தாகம் அன்புதான் அதற்கு பானம் - 2

அன்பிருந்தால் ஒற்றுமை வரும் ஒற்றுமையில் உயர்வு வரும்

உயர்வினிலே இறையாட்சி மலரும் - மனித - 2


நன்மைகள் செய்த இறைவனுக்கு

நன்றியின் பலியை செலுத்திட வாரீர் - 2

நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்


1. உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்

உடைந்ததென்றால் அது பெரும்பலியாம் - 2

கொடைகள் பெறுவது தகும் வழியாம் - 2

குறையினைப் போக்கும் கோவழியாம்


2. வானத்தை நோக்கும் நறும்புகை போல்

வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம் - 2

அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம் - 2

ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்


நிலையான நீ வரம் தந்ததால் குலமாகக் கூடி வந்தோம்

எம் நெஞ்சத்தில் எழும் நன்றியில்

உம் பாதம் சரணாகின்றோம் - 2


1. ஒளியின்றி மலர் எங்கும் மலர்ந்திடுமோ

மலராது மணம் வீசுமோ - 2

நீயின்றி மனங்களும் இணைந்திடுமோ

இணையாது உறவாகுமோ - 2

ஒளியாகி நீ எமைத் தொட்டதால்

மலராய் உன் பதம் சேர்கின்றோம்

உறவாகி நீ எமைச் சேர்த்ததால் உனில் இன்று சபையாகின்றோம்

ஆ... உன் பாதம் சரணாகின்றோம்


2. மழையின்றி பயிர் நன்கு வளர்ந்திடுமோ வளராது பலன் ஈயுமோ - 2

நீயின்றி குறைகளும் விலகிடுமோ விலகாது நிறையாகுமோ - 2

மழையாகி நீ வளம் தந்ததால் பயிராகிப் பலன் தாங்குவோம்

நிறையாகி நீ குறை தீர்த்ததால் மறைவாழ்வின் வழி போகின்றோம்

ஆ... உம் பாதம் சரணாகின்றோம


நிறையருள் வாழ்வுப் பயணத்திலே பேரணியாய் நாம் செல்வோம்

இறைவனின் தியாக பலியினிலே கலந்திடவே நாம் இணைவோம் - 2


1. அவனியிலே இறைவனுக்காய்

அர்ப்பணம் செய்தவர் பேறுபெற்றோர் - எனும்

அருட்சான்று பகர்ந்திடவே அன்பர்களே ஒன்று கூடிடுவோம் - 2

அன்பு உள்ளங்கள் நாம் இணைவோம்

இன்ப வெள்ளளத்தில் நனைந்திடுவோம் - 2


2. அன்பரசை அகிலமெங்கும் பரவிடச் செய்தவர் பேறுபெற்றோர் - அந்த

அருள்வாழ்வு பரவிடவே தீபங்களாய் நின்று எரிந்திடுவோம் - 2

உண்மை தெய்வத்தை நாம் தொழுவோம்

விண்ணின் செல்வத்தில் திளைத்திடுவோம் - 2


பரிசுத்த குலம் நீங்கள் பலியிட வாருங்கள்

இறைவனுக்குரியவர்கள் என்றும் இறைபுகழ் கூறுங்கள்

அரச குருத்துவமே தூய ஆவியின் ஆலயமே

இறைவன் அழைத்த இனமே இதை அறிந்து வாழுங்களே


1. ஒளியின் மைந்தர் நீங்கள் இந்த உலகினில் ஒளிர்ந்திருங்கள்

முடிவில்லா வாழ்வதையே நீங்கள் முதன்முதல் தேடிடுங்கள்

மறையுடல் உறுப்புகளாய் எங்கும் ஒன்றித்து வாழ்ந்திருங்கள்

இறைவாக்குரைப்பவராய் இன்று இகமதில் திகழ்ந்திருங்கள்


2. தந்தை இறைவனின் சிறு மந்தையும் நீங்கள்

ஆயனின் மேய்ச்சலிலே புது வாழ்வையும் கண்டிடுங்கள்

அகஒளி ஏற்றிடவே தெய்வ அருள் ஒளி பெற்றிடுங்கள்

பெற்ற இப்பெருவாழ்வை இங்குப் பிறருடன் பகிர்ந்திடுங்கள்


பலிபீடம் வரும் குருவோ புதுப்பாடம் தரும் மொழியோ

நல்நாதம் தரும் இசையோ நாம் வாழ்வு பெரும் பலியோ - 2


1. சிறு குழந்தையை வரவிடுங்கள்

பல இன்னல்கள் நான் தீர்ப்பேன் - 2

உந்தன் ஆசைகள் நான் அறுப்பேன்

புது உலகம் நான் சமைப்பேன்


2. செந்நீர் சிந்திய இடமிதுவே சீரருள் பெற்ற இடமிதுவே - 2

அதை நினைத்தே நாம் கூடிடுவோம் புதுப்பலியை படைத்திடுவோம்


புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் நாளிது

புதிய இதயமும் புதிய ஆவியும் அணியும் நேரமிது

அலையென எழுவோம் அணியெனத் திரள்வோம்

ஆண்டவர் இயேசுவைப் புகழ்வோம்


1. இறைவனின் சொந்த பிள்ளைகள் நாம்

இறையரசின் குருத்துவக் குலமும் நாம்

உரிமை வாழ்விலே நமை அழைத்தார் - இந்த

உலகம் வாழவே நமைப் பணித்தார்

உறவின் பாலங்கள் நாம் அமைப்போம் - இங்கு

உருகும் விழிகளை நாம் துடைப்போம்


2. நம்மையே இயேசு பலியெனத் தந்து

விடுதலை வாழ்வைத் தந்துள்ளார்

கருணை இறைவனில் நாம் நிலைப்போம்

மனக்கதவு நிலைகளை நாம் திறப்போம்

கரங்கள் இறைவனின் பணிக்கானால் - இங்கு

கடவுள் அரசுதான் பிறக்காதோ


புது நாளில் புது நினைவில் நாம் கூடுவோம்

புது வானம் புது பூமி நாம் காணுவோம் - 2


1. இறைவனின் ஆலயங்கள் நாம் இணைந்தே பலி செய்வோம் - 2

இனிமை பொங்கும் நேரம் இங்கும் எங்கும் தேவன் - அவர்

கரத்தில் தவழ்ந்து நாளும் களிப்பில் நாமும் வாழ்வோம்


2. இறைவனின் ஆட்சியிலே நாம் இயேசுவின் சாட்சிகளாய் - 2

அன்பெனும் மொழியில் பேசி அருளொளி எங்கும் வீசி - அவர்

அன்பராய் என்றும் நாமும் ஆனந்த நிறைவில் வாழ்வோம்


பாரதமே தாயகமே வருவாய்

பரண் இயேசு நிறைவாழ்வைப் பெறுவாய்


1. ஒளி தரும் நிலவு சிலருக்கா - அல்ல

ஒளி நாடும் விழிகள் சிலருக்கா - அல்ல

ஒளியாம் இயேசு யாருக்காக - இந்த

உலகினில் வாழும் அனைவரும் காண


2. வழி காட்டும் பலகை சிலருக்கா - அல்ல

வழி செல்லும் உரிமை சிலருக்கா - அல்ல

வழியாம் இயேசு யாருக்காக - இறை

வான்வீடு தேடும் அனைவரும் போக


3. வான்மழை எல்லாம் சிலருக்கா - அல்ல

வாழ்கின்ற மகிமை சிலருக்கா - அல்ல

வாழ்வாம் இயேசு யாருக்காக - இந்த

வையகம் பிறந்தவர் அனைவரும் வாழ


புதிய பூமியே புதுப்பாட்டு பாடி வா

புனித நாளிலே இறைமாட்சி காண வா

வானிலே கோலமாய் வானதூதர் பாடவே

பூவிலே நாமுமே தேவன் பீடம் கூடுவோம் - 2


1. விண்ணோரெல்லாம் கொண்டாடவே இந்நாளையே பொன்னாளென

மண்ணோருமே கொண்டாடுவோம் நம் பாடலும் விண்ணேறவே

மறைவாழ்வு தேடும் நாமெல்லோரும் ஜீவ ஊற்று

இயேசு பாதம் நாடி வாழ்வை தியாகமாக்குவோம் - 2


2. சங்காகிய பண்பாடுவோம் சங்கீதத்தால் ஒன்றாகுவோம்

எந்நாளுமே அன்பானவன் பொன்மேகத்தில் பங்காகுவோம்

இறைவாக்கு கூறும் வாழ்வுதேடி மானிடத்தின் ஜீவநாடி

நாதன் இயேசு பாதை செல்லுவோம்


புதையல் ஒன்று தேடிக்கொண்டு வருகின்றேன் - அது

புதைந்துள்ளது பீடம் என்று அறிந்து கொண்டேன் - 2


1. சிலுவையிலே இயேசு பிரான் சேர்த்த செல்வம் - திருப்

பலியினிலே புதைந்திருக்கக் கண்டு கொண்டேன் - 2

விலையில்லாத செல்வம் அது என்றுணர்ந்தேன் - எந்த

விலை கொடுத்தும் அதனைப் பெற உறுதி கொண்டேன்


2. மனிதனாகப் பிறந்து இந்த மண்ணில் காணும் - என்

மனக்கவலை மாற்றும் இந்த புதையல் தானோ - 2

புனிதனாக நானும் என்னை வாழ வைக்க - இனி

போதுமான அருளைத் தரும் புதையல் அல்லவோ


புனித நன்னாளிதுவே புனிதம் கமழ பூமுகம் மலர

புலர்ந்தது இந்த நாளிதுவே - 2


1. இறைவனின் அன்பினிலே இரண்டறக் கலந்திருக்க - 2

நிறையருள் வாழ்வினிலே நிதமும் மகிழ்ந்திருக்க - 2


2. வாழ்வது நானல்ல என்னில் வாழ்வது நீ இயேசுவே - 2

வார்த்தையின் வழிதனிலே வாழ்க்கையை நடத்திடவே - 2


புத்தம் புது உலகம் ஒன்றைக் காண நம்மைப் படைத்தார்

நித்தம் புது உறவில் அதனைக் காண நம்மை அழைத்தார்

முத்தான உள்ளங்கள் சேர்ந்து உறவை ஆக்கவே

பூத்து சிரிக்கும் மலராய் நாளும் வாழ்வை மாற்றவே - 2

நெஞ்சில் நீயே இயேசு தேவா ஆள வருகவே

துஞ்சும் உலகை வாழவைக்கும் உறவை வளர்க்கவே - 2


1. அழவேண்டாம் எனும் சொல்லால் ஆறுதல் காண

எம் நெஞ்சில் நீயே உம் அன்பில் வளருவோம்

விழவேண்டாம் எனும் சொல்லால் பாவம் நீக்கிட

பிற மனிதரோடும் நல் உறவில் வளருவோம்

குடில் விஞ்சும் குழந்தையாக உறவு கொண்டிட

நிழல் போல எமைத் தொடரும் தீமை வெல்லுவோம் நெஞ்சில்...


2. பொருள் இல்லா ஏழையுடன் பகிர்ந்து வாழ்ந்திட

எம் நெஞ்சில் நீயே உம் அன்பில் வளருவோம்

பொருள் இல்லா வாழ்வினுக்கு நோக்கம் அளித்திட

பிற மனிதரோடு நல் உறவில் வளருவோம்

இருள் கொண்ட மனங்களிலே ஒளியை வீசிட

அருள் கொண்டு நீதியுடன் அமைதி காணுவோம் நெஞ்சில்...


புலர்ந்ததே புது வானம் புதியதாய் ஒரு பூமி

புனித தேவனின் ஆலயம் புது வாழ்வின் அழைப்பாகவே - 2

அப்பா அன்பான தெய்வமே உம்மை ஆராதித்தோம் துதித்தோம் - 4


1. கனவாய் நின்ற காட்சிகள் இங்கு நனவாய் மாறியதே

கனலாய் தேவ ஆவியின் அருள் ப்ரசன்னம் பரவிடுதே - 2

புனலாய் ஆலய வலப்புறம் இருந்து புதுவாழ்வு பொங்குதே - அதன்

கரையில் வாழ்வோர் காலங்களெல்லாம் கனிதந்து வாழ்வரே அப்பா...


2. கிழக்கே காணும் வாசலில் நம் நம்பிக்கை உதிக்கின்றதே

அழைக்கும் தந்தை பாசத்தில் நம் ஆன்மா தழைக்கின்றதே - 2

இசைப்போம் இன்னிசை யாழினை மீட்டி இறையவனின் மாட்சியை நாம்

இசைவோம் அவர்தம் இயக்கத்தின் வழியே இடர் நீங்கி ஓங்கவே


மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட

உறவினராய் வருவோம் மன்னவன் இயேசுவின் பொன்வழி நடந்திட

அன்பினில் வாழ்ந்திடுவோம் - இறை - 2


1. இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்

பூமியில் ஒன்றுமில்லை - 2

இறைவழி வாழ்ந்திடும் முறையிது தெரிந்தால்

பகைமையின் தொல்லையில்லை - 2

பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்

புதுவழி படைத்திடுவோம் - 2 நாம் இறைவழி வாழ்ந்திடுவோம்


2. மனிதரின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்

இறைவனின் குடும்பமில்லை - 2

எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்

இறைவனும் உயிர்ப்பதில்லை - 2

அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம்

புதுவழி படைத்திடுவோம் - 2 - நாம் இறைவழி வாழ்ந்திடுவோம்


மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன்

ஆண்டவன் சந்நிதி ஓடோடி வந்தேன் - 2


1. ஆண்டவன் இல்லத்தில் வாழ்ந்திட வந்தேன்

ஆண்டவன் புகழினைப் பாடிட வந்தேன் - 2

ஆண்டவன் அருளினை அடைந்திட வந்தேன் - 2

ஆண்டவன் வாழ்வினைச் சுவைத்திட வந்தேன்


2. இறைவனின் நாமத்தைப் போற்றிட வந்தேன்

இறைவனின் வார்த்தையைக் கேட்டிட வந்தேன் - 2

இறைவனின் விருந்தினை அருந்திட வந்தேன் - 2

இறைவனின் ஆசீரை ஏற்றிட வந்தேன்


வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2


1. பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்

பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2

புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - 2 - உன்

பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்


2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி

நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2

பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - 2 - என்

பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்


3. எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் - என்

இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் - 2

ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் - 2 - நல்

ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்


4. நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் - நல்

நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் - 2

அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் - 2 - உன்

அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்


வருக நம் ஆண்டவர் திருமுன்னே

வந்தவர் புகழ்பாடுவோம் மகிழ்வுடனே - 2

நம் மீட்பின் கதியவரே - நற்

பண்ணிசைத்தே நன்றி சொல்வோம் - 2


1. ஆண்டவர் நம் பெரும் இறைவனவர் - எத்

தேவர்க்கும் மேல் பெரும் அரசரவர் - 2

உலகனைத்தும் அவர் கரமே உயர் மலைகளுமே அவர் பொருளோ


2. ஆழியும் அவனியும் அவர் படைப்பே - நாம்

தொழு தொழுதவர் அடி பணிந்திடுவோம் - 2

ஆயன் அவர் இறையும் அவர் அவர் மந்தையின் ஆடுகள் நாம்


3. தந்தைக்கும் தனயர்க்கும் புகழிசைப்போம் - நல்

தூய ஆவிக்கும் நம் புகழே - 2

என்றென்றும் இருந்தது போல் புகழ் நின்றெங்கும் ஒலித்திடவே


வருக வருகவே வசந்த மலர்களே

மலர்ந்திடவே விரைந்து வாருங்கள்

எழுக எழுகவே இறைவன் காணவே

இனிமை ததும்ப இன்னிசையில் இணைந்து வாருங்கள்


1. சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை மறந்து வாழ்வோம்

சுகம் நிறைந்து மலர்ந்த வாழ்வில் மகிழ்ந்து வாழ்வோம்

ஆனந்தம் காணவே அவரிலே கூடுவோம்

இருகரங்கள் ததும்ப இன்னிசையில் இணைந்து வாருங்கள்


2. உலகம் யாவும் இனியவரின் ஆட்சி ஆக்குவோம்

உண்மை விதைத்து உலகை அவரின் மாட்சி ஆக்குவோம்

அமைதியின் தூதராய் அவரிலே வாழுவோம்

ஆதவனாய் ஒளிவீசி அழைக்கும் இறைவன் குரலைத் தேடி


வருவாய் இன்று கிறிஸ்தவ குலமே

கிறிஸ்து விடுத்த அழைப்பினை ஏற்று - வருவாய் - 2


1. வேதத்தின் நிறைவாம் வார்த்தையளிக்கும்

விருந்தினையுண்ண விரைவாய் குலமே

உண்பர் எல்லாம் ஓர் குலமாகி

உன்னத பலியை உவந்தே செலுத்த - வருவாய்


2. திருநீராட்டால் வந்தது உரிமை

திருப்பலிதனையே செலுத்தும் அருமை

கிறிஸ்துவை அறியா உலகுக்குப் புதுமை

கிறிஸ்தவக் குலமே உந்தன் பெருமை


வாருங்கள் அன்பு மாந்தரே

பலி செலுத்த வாருங்கள் பண்ணிசைத்துப் பாடுங்கள் - 2


1. இயேசு என்னும் ஆதவன் கதிர்விரிக்கக் காணுங்கள்

இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள் - 2

ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே - 2

அருள் வழங்க இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்


2. அன்பு என்றால் என்னவென்று அவனைக் கேட்டுப் பாருங்கள்

அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறுவான் - 2

தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றான் - 2

தம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்றுத் திரும்புவோம்


வாருங்கள் இறைமக்களே

இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட வாருங்கள் இறைமக்களே


1. குருவுடன் கூடி குடும்பமாய் மாறி - 2

இறைவனை உண்டு புனிதராய் மாறிட


2. இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று - 2

இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே


3. பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து - 2

நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட


வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக

அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்


1. சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே

எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் - 2

வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே

வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம்

தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்


2. அருள் ஒளி மனதினில் கலந்திடவே

கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் - 2

மனிதனில் மனிதம் மலர்ந்திடவே

எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம்

உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே

இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்


வாருங்கள் வாருங்கள் இறைமக்கள் ஒருங்கிணைவோம்

இறைவனின் பலியினில் இதயத்தை இணைத்திடுவோம்

இதைவிட அதிசயம் ஏதுமில்லை - இந்த

திருப்பலிக்கிணையிங்கு எதுவுமில்லை

இணைவோம் பகிர்வோம் நிறைவடைவோம்


1. வார்த்தையின் வடிவினில் பேசிடும் கடவுள்

வாழ்ந்திட வழி சொல்லும் பலியிதுவே

உழைப்பின் கனிகளை காணிக்கையாக

உவப்புடன் ஏற்றிடும் பலியிதுவே

தன்னுடல் தந்து நம்மையே காக்கும்

தியாகத்தின் பகிர்வின் பலியிதுவே இணைவோம்....


2. உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேற்றுமை அகற்றி

சமத்துவம் சமைத்திடும் பலியிதுவே

மனதின் சோதனை வேதனை அனைத்தும்

வென்றிட வலுதரும் பலியிதுவே

தோல்விகளாலே துவண்டிடும் வேளை

துணிச்சலை தருகின்ற பலியிதுவே இணைவோம்....


விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்களே

புது உலகமைத்திட புதுவழி படைத்திட அன்புடன் வாருங்களே - 2

வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்

அனைவரும் வாருங்களே - 2


1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார்

உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் - 2

ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2

சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து

அன்பினில் நாம் இணைவோம் வாருங்கள்....


2. ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும்

வறுமைப் பிடியிலே அலறும் குரல்களே இறைவன் மொழியாகும் - 2

பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் - 2

இறைவனின் அரசின் இனிமையைக் காண

இன்றே முயன்றிடுவோம் விடுதலை....


வைகறை வான்வெளி மீதினிலே

ஒளிரும் செஞ்சுடர் ஆதவனே - 2

வானத்துத் தென்றல் வீசுகையில்

மலர்ந்திடும் மல்லிகை மலர்ச்சரமே - 2


1. சந்திரன் என்ற வான்மலரே - உனைக்

காணும் பொழுது மனம் குளிரும்

ஆறுதல் தந்திடும் திருமகனாம் - நம்

அருள்நிலை இயேசுவின் புகழ்பாடு - நம்

குழந்தை இயேசுவின் புகழ்பாடு


2. தாரகை சூழும் விண்முகிலே - உனைப்

பாடும் வேளையில் மனம் மகிழும் - 2

ஆனந்தம் பொங்கிடும் அருவிகளே - நம்

அன்பராம் இயேசுவின் புகழ்பாடு - நம்....


No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *