உறவுகளை மறந்து வாழ்வது நம் மகிழ்ச்சியை குறைக்கும்


உறவுகளை மறந்து வாழ்வது நம் மகிழ்ச்சியை குறைக்கும்

முற்காலத்தில் உறவினர்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு அவ்வப்போது சென்று ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து மகிழ்வார்கள். இதனால் இருதரப்பு உறவுகளும் வலுவாய்த் திகழ்ந்தன. நமக்கு பக்கபலமாக நமது உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நாம் மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கும்.

தற்காலத்தில் இந்தமுறை மாறிவிட்டது என்றே சொல்லலாம். திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைக் கூட நேரில் சென்று அழைக்காமல் வாட்ஸ்அப்பில் அழைப்பிதழை அனுப்பி விடுகிறார்கள். கேட்டால் அவ்வளவு தூரம் எங்களால் வர முடியாது என்கிறார்கள். பலர் நேரமில்லை என்கிறார்கள். உரிமையோடு சற்று கோபமாகக் கேட்டால் தயவு தாட்சண்யமின்றி உறவைத் துண்டித்துக் கொள்ளுகிறார்கள்.

தங்கள் வீட்டுத் திருமண அழைப்பிதழை முறைப்படி உறவினரின் வீடுகளுக்கு நேரில் சென்று அழைக்க சிரமமாக இருக்கிறது மற்றும் நேரமில்லை என்றால் திருமணத்திற்கு நேரில் சென்று ஆசிர்வதிக்க உறவினருக்கு மட்டும் எப்படி நேரம் இருக்கும். இதை சற்று யோசித்துப் பார்க்கவேண்டும். வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நேரில் சென்று அழைப்பதுதான் முறை. இத்தகைய முக்கியமான நிகழ்வுகளுக்கு அழைக்க உறவினரின் வீடுகளுக்குச் செல்ல முடியவில்லை என்றால் வேறு எப்போதுதான் செல்ல மனம் வரும்.

முற்காலத்தில் கோடை விடுமுறைகளில் சிறுவர்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு மாதகாலம் தங்கி தங்கள் உறவுக்காரச் சிறுவர்களோடு விளையாடி மகிழ்வார்கள். இதனால் அவர்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட்டு பிற்காலத்தில் அவர்கள் தங்கள் உறவினர்களோடு மகிழ்வாய் வாழ்ந்த சூழல் நிலவியது.

தற்காலத்தில் சிறுவர்களை கோடை விடுமுறைகளில் பலவிதமான சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் சிறுவர்களும் ஒரு இயந்திரம்போல ஆகிவிடுகிறார்கள். உறவும் நட்பும் என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் வளர்கிறார்கள்.

நெருங்கிய உறவினர்களின் இல்லத் திருமணங்களுக்குக் கூட பலர் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுவதில்லை. இதனால் சிறுவர்களுக்கு தங்கள் உறவினர்களின் உறவு முறைகள் கூடத் தெரியாத சூழல் நிலவுகிறது.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உறவினர்களும் முக்கியம். நண்பர்களும் முக்கியம். நமது பலவிதமான உணர்வுகளில் அன்பு, பாசம் என்பது மிகவும் முக்கியமான ஒரு உணர்வாகும். உறவினர்கள் நண்பர்கள் மட்டுமின்றி நாய் பூனை முதலான பிற உயிரினங்களிடமும் நாம் அன்பு பாராட்டி வாழப் பழகவேண்டும். அன்பு வலிமையானது என்பதை நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

மாதத்திற்கு ஒருநாள் உங்கள் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்ளைச் சந்தித்து அளவளாவுவதைக் கடைபிடியுங்கள். நீங்கள் ஒரு முறை சென்றால் அவர்களும் ஒருமுறை நிச்சயம் உங்கள் இல்லத்திற்கு வருவார்கள்.

முதலில் செல்பவர் நீங்களாக இருங்கள். உறவினர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்கள் நண்பர்களுக்கும் கொடுங்கள். நட்பு வட்டம் என்பது எப்போதும் சிறியதாக இருக்க வேண்டும். உங்கள் மீது உண்மையான அன்பு பாராட்டும் உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் நட்பு பாராட்டுங்கள்.

ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதே உன்னதமான வாழ்க்கை. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி பழகுங்கள். உங்கள் உதவி தேவை என்று உங்களை அணுகினால் அவர்கள் எதிர்பார்க்கும் உதவியை உங்களால் செய்ய முடிந்தால் நிச்சயம் உடனே உதவி செய்யுங்கள். நல்ல உறவுகளும் நல்ல நண்பர்களும் உங்கள் வாழ்விற்கு வலிமை சேர்ப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *