கதை: நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்


ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் திடீரென வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், “திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்” என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் “இல்லை, நல்லதும் நடக்கும்” என்றும் வாதாடிக் கொண்டிருந்னர்.

அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் குரு, என்ன பிரச்சினை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார்.

“ஒரு போர் வீரன், தன்னுடைய உயர் அதிகாரியின் மனைவியை காதலித்தான். அது உயர் அதிகாரிக்கு தெரியவர... மரண தண்டனைக்கு பயந்தவனாய் அந்த அதிகாரியின் உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான்.

பின்னர், இருவரும் சந்தோ‌ஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். சிறிது காலம் நிலைத்த சந்தோ‌ஷம் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. ஒரு நாள் போர் வீரனை உதறிவிட்டு அந்த பெண் ஓடிவிட்டாள்.

மனமுடைந்த வீரன், அருகில் இருந்த ஊரில் பிச்சையெடுக்க ஆரம்பித்தான். தனது வாழ்நாளில் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக, சில நல்ல காரியங்களை செய்ய முடிவெடுத்தான்.

அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதும், அதனால் பல பேர் மரணமடைவதும் இவனுக்கு தெரியவந்தது. அதனால் அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான்.

முப்பது ஆண்டுகள் உருண்டு ஓடியது. சுரங்கப்பாதையும் அகலமானது. வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டான். அதாவது உயர் அதிகாரியின் மனைவியை கவர்ந்து வந்தான் அல்லவா...? அவனது மகனின் கண்களில் அகப்பட்டான்.

தந்தைக்கு துரோகம் செய்தவனை பழிதீர்க்கும் கோபம் அவனது கண்களில் கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே சரணடைந்தான், போர் வீரன். உன்னுடைய கோபம் நியாயமானதுதான். ஆனால் இந்த சுரங்கத்தை வெட்டி முடித்ததும் என்னை கொன்றுவிடு’’ என்று உருக்கமாக கோரிக்கை வைத்தான்.

அதன்படி... எஞ்சியிருக்கும் சுரங்க வேலைகளை வேகமாக செய்ய ஆரம்பித்தான். எத்தனை காலம் தான் பழிவாங்கும் கோபம் இருக்கும். அதனால் கோபம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

போர் வீரனுடன் சேர்ந்து அவனும் சுரங்க வேலைகளை துரிதப்படுத்தினான். கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர். போர் வீரன் கத்தியுடன் சரணடைந்தான்.

தன்னை கொன்றுவிடும்படி கேட்டுக்கொண்டான். அப்போது அதிகாரியின் மகன் கோபத்தினால் சிவந்த கண்கள், கண்ணீரால் சிவக்க ஆரம்பித்தது. “என் அன்னையை ஏமாற்றிய போர் வீரனுக்கும், மற்ற உயிர்களை காப்பாற்ற நினைக்கும் உனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

இடைப்பட்ட நாட்களில் நிறையவே மாறிவிட்டாய். இப்போது நான் உன்னை கொன்றால் பழியும் பாவமும் என் தோள்களில் விழுந்துவிடும். அதை என்னால் சுமக்க முடியாது. ஆகவே மற்றவர்களுக்கு நல்ல காரியங்களை செய்து உன்னுடைய பாவங்களை போக்கிக்கொள்’’ என்று கூறிவிட்டு கிளம்பினான்.

இறுதியில் ஜென் குரு சீடர்களிடம் “திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதே நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்” என்பதை இந்த கதை தெளிவாக விளக்குகிறது அல்லவா..? என்றார்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *