புனித அன்னை தெரேசா வாழ்க்கை வரலாறு


அன்னை தெரேசா அவர்களின் வாழ்க்கை வரலாறு

எண்ணற்ற மக்களின் கவனத்தை ஈர்த்த தாழ்ச்சி நிறைந்த இந்த அருள்சகோதரி, “அன்னை தெரேசா” என அழைக்கப்படுகிறார். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மா பற்றி திருத்தந்தையே உம்மிடம் இன்று அறிவிக்கிறோம். முழு உலகுமே இந்தப் புனிதையிடம் செபிக்கின்றது, இவரின் பிறரன்புப் பணிகளைப் பின்பற்றுகிறது. நல்ல சமாரியர் கிறிஸ்துவைப் பின்பற்றி, அன்னை தெரேசாவும், தனது வாழ்நாள் முழுவதும், சமூகத்தின் விளிம்புகளில் வாழ்வோரின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, தேவையில் இருந்த எல்லாருக்கும் உதவினார். கடவுளின் எல்லையற்ற அன்பிற்குச் சாட்சியாகத் திகழ்ந்தார். இவ்வாறு சொல்லி, அன்னை தெரேசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக வாசித்தார் கர்தினால் அமாத்தோ. 
கோன்ச்ஹா ஆக்னெஸ் போஜக்ஸ்யு(Agnes Gonxha Bojaxhiu) என்ற கல்கத்தா தெரேசா, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அல்பேனியாவில், குடும்பத்தில் ஐந்தாவதும், கடைசி குழந்தையுமாகப் பிறந்தவர். ஐந்தரை வயதில், புதுநன்மை வாங்கியது முதல், ஆன்மாக்கள்மீதான அன்பால் நிறைந்தார். 1928ம் ஆண்டு, அயர்லாந்தில் லொரேத்தோ அருள்சகோதரிகள் சபையில் சேர்ந்தார். 1929ம் ஆண்டு இந்தியா சென்றார். 1931ல் முதல் வார்த்தைப்பாடும், 1937ல் இறுதி அர்ப்பணத்தையும் எடுத்தார். இருபது ஆண்டுகள் இந்தியாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 1946ம் ஆண்டு, செப்டம்பர் 10ம் தேதி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏழைகளிலும் ஏழைகளுக்குப் பணியாற்றும் அழைப்பை இயேசுவிடமிருந்து பெற்றார். கல்கத்தா சேரிகளில் பணியாற்றுவதற்கு, திருஅவையிடமிருந்து 1948ல் அனுமதி பெற்றார். 1950ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, இவரின் பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை, ஒரு மறைமாவட்ட சபையாக உருவெடுத்தது. 1965ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி, இச்சபை, பாப்பிறை அங்கீகாரம் பெற்ற ஒரு சபையாக மாறியது. அன்பின் மறைப்பணியை விரிவுபடுத்தும் நோக்கத்தில், 1963ல், ஆண்களுக்கென அருள்சகோதரர்கள் சபையைத் தொடங்கினார். 1976ல், அருள்சகோதரிகள் தியானயோக சபையையும், 1979ல் அருள்சகோதரர்கள் தியானயோக சபையையும், 1984ல் பிறரன்பு மறைப்பணியாளர்கள் அருள்பணியாளர் சபையையும், அருள்பணியாளர்க்கு திருநற்கருணை இயக்கத்தையும், தன்னார்வலப் பணியாளர்கள் அமைப்பையும் ஆரம்பித்தார் அன்னை தெரேசா.. அவர் இறந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று, இச்சபை 120 நாடுகளில், 594 இல்லங்களில் 3,842 சகோதரிகளைக் கொண்டிருந்தது. அன்னை தெரேசா, தனது ஆன்மீக வாழ்வில் இருளான நேரங்களை அனுபவித்ததையும் விடுத்து, அன்னை மரியாவைப் போன்று, இயேசுவின் அன்பை உலகெங்கும் பரப்ப, எல்லா இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். அதனால், இன்று, எல்லாருக்கும், கடவுளின் கனிவு மற்றும், இரக்கமுள்ள அன்பின் மறுஉருவமாகத் திகழ்கிறார். இப்பூமியில் இருளில் வாழ்வோர்க்கு, இன்றும், தொடர்ந்து விண்ணிலிருந்து ஒளியை ஏற்றிக் கொண்டிருக்கிறார் அன்னை தெரேசா. இவ்வாறு கர்தினால் அமாத்தோ அவர்கள், அன்னை தெரேசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தார்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *