19 Ways to Let Parish Priest Know You Appreciate Him


பங்குத்தந்தையாக இருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு சின்ன உதாரணம் சொல்லலாம். கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு அல்லது உயிர்ப்பு பெருவிழா அன்று இரவு திருப்பலி நடக்கும். அழகாக அலங்காரம் செய்யப்பட்ட மேடை, இனிமையான பாடகர் குழு, ஃபோகஸ் வெளிச்சம், நீண்ட வழிபாடு என எல்லாமே நன்றாக நடக்கும். ஒரே நேரத்தில் ஏறக்குறைய ஐயாயிரம், பத்தாயிரம் கண்கள் மூன்று மணி நேரங்களாக அவரையே பார்த்துக்கொண்டிருக்கும். அவரின் எல்லா அசைவுகளும் ரசிக்கப்படும். அவர் தன்னையே பெரிய கதாநாயகனாக உணர்வார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற ஒரு அளவிடமுடியாத தன்னம்பிக்கை பிறக்கும். திருப்பலி முடிந்து, லைட்களை அனைத்துவிட்டு, கேட்டைப் பூட்டக் கூட ஆள் இல்லாமல் தானே சென்று பூட்டிவிட்டு, தன் அறையை நோக்கி அவர் திரும்புவார். வெடித்த பட்டாசுகளின் காகிதக் குப்பை, குடித்துவிட்டு எறியப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், யார் கொண்டையிலிருந்தோ ஹேர்பின்னோடு விழுந்து கிடக்கும் மல்லிகைப் பூ என காலில் பட்டுக்கொண்டே வர, அறையின் சாவித்துவாரத்தில் சாவியை நுழைக்கும்போது ஒரு இனம் புரியாத தனிமை அவரின் முதுகில் மேல் ஏறிக்கொள்ளும். காஃபி போட்டுக் குடிக்கலாம் என்று சமையலறைக்குள் நுழைவார். சாம்பல் நிற பூனை ஒன்று இவரின் வரவின் சரவம் கேட்டு ஜன்னல் வழியே குதித்து ஓடும். பால் சுட வைக்கக் கூட வலவில்லாதவராய் வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு கட்டிலில் வந்து அணிந்திருக்கும் அங்கியையும் கழற்ற வலுவில்லாமல் சோர்ந்து விழுவார்.
மனம் கேட்கும் அந்த நொடி.
எது உண்மை?
ஐயாயிரம் பேருக்கு முன் நின்று கொண்டிருந்த பெருமிதமா?
அல்லது காஃபி போட்டுக் கூட குடிக்க முடியாமல் தனிமை தாலாட்டும் வலுவின்மையா?
நிற்க.
'உங்கள் பங்குத்தந்தையை நீங்கள் அன்பு செய்கிறீர்கள் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறீர்களா? இந்த 19 வழிகளில் நீங்கள் சொல்லலாம்' என்ற ஆங்கில பதிவு (19 Ways to Let Your Parish Priest Know You Appreciate Him) ஒன்றை இணையதளத்தில் வாசித்தேன். அதன் தமிழாக்கம்தான் (கொஞ்சம் நம்ம ஊர் மசாலா சேர்த்து, கூட்டிக் குறைத்து 12 வழிகளாக) இன்றைய நம் வலைப்பதிவு. ஆங்கிலத்தில் இதை எழுதியவர் ஜோனத்தான் டெய்க்ஸைரா.
1. உங்கள் அருட்பணியாளருக்காக செபியுங்கள்
ஒரு செபமாலை, ஒரு திருமணி ஆராதனை, ஒரு நவநாள் செபம் இவற்றில் எதையாவது, அல்லது உங்கள் குடும்ப செபத்தில் ஒரு நிமிடம் அவரை நீங்கள் நினைவுகூரலாம். 'அவர்தான் நமக்கு செபிக்க வேண்டும், நாம் எப்படி அவருக்கு செபிக்க முடியும்?' என்று கேட்காதீர்கள். மருத்துவர்களும் உடல்நலமில்லாமல் போவதில்லையா? அவர்களை யார் குணப்படுத்துவார்?
2. அவர் வேலைப்பளுவோடு இருக்கும் நாளில் அவருக்கு உணவு கொண்டு போங்கள்.
நம் ஊர்களில் ஏறக்குறைய அருட்பணியாளர்கள் அனைவரும் உதவியாளர் ஒருவரை சமையல் வேலைக்கு வைத்திருக்கின்றனர். அப்படி உதவியாளர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் ஒருநாள் ஓய்வு கொடுக்கலாமே! நீங்கள் அவரோடு பகிர்ந்து கொள்ளும் ஒருவேளை உணவு அவருக்கு காலத்தினாற்செய்த நன்றியாக இருக்கும்.
3. அவர்களின் கொண்டாட்ட நாட்களை நீங்களும் கொண்டாடுங்கள்.
உங்கள் பங்குத்தந்தையின் பிறந்தநாள், அருட்பொழிவு நாள், பெயர்த்திருவிழா நாள் அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவர் எதிர்பாராத அந்த நாளில் அவரை வாழ்த்துங்கள். அவரின் உடனிருப்பு உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற ஒற்றை வாக்கியம் போதும். பரிசுப்பொருட்கள் வேண்டாம். பாசமான வார்த்தைகள் போதும்.
4. குறைவாக குறைபட்டுக்கொள்ளுங்கள்.
பீடம் சுத்தமாக இல்லை, பாடகர் குழு மைக் இரைச்சல் போடுது, வெளியே குப்பையாக இருக்கிறது, பாத்ரூமில் தண்ணீர் வரலை, ஃப்யூஸ் போன பல்ப் இன்னும் மாற்றப்படவில்லை, என்னைக்கோ கேட்டதற்கு இன்னும் பதில் இல்லை என்று குறைகளை மட்டுமே பார்ப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.
5. உதவிக்கரம் நீட்டுங்கள்.
'அவர் கேட்கட்டும்!' என காத்திராதீர்கள். உங்கள் நேரம், உங்கள் ஆற்றல், உங்கள் அறிவு, உங்கள் பொருள் - எது உங்களால் முடிகிறதோ அதைக்கொண்டு கரம் கொடுங்கள்.
6. திருப்பலிக்கும், ஒப்புரவு அருட்சாதனத்திற்கும் செல்லுங்கள்.
இந்த இரண்டு அருளடையாளங்கள் வழியாகத்தான் அருட்பணியாளர் தன் தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றார். அவர் நிறைவேற்றும் திருப்பலிக்கு நீங்கள் செல்வதைவிட சிறப்பான மகிழ்ச்சி அவருக்கு இருக்க முடியாது.
7. மனமுவந்து பாராட்டுங்கள்.
நம் ஊரில் வாழ்த்து அட்டை கொடுக்கும் பழக்கம் இன்னும் வரவில்லை. இருந்தாலும், ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வழியாகவும் அவரை நீங்கள் பாராட்டலாம். 'நீங்க பைபிளை விளக்கிய விதம் நல்லா இருந்தது!' 'நீங்க நல்லா பாடுனீங்க!' 'நீங்க போட்டிருந்த டிஷர்ட் நல்லா இருந்தது!' 'நீங்க நல்லா ஸ்மைல் பண்றீங்க!' என்று எல்லாவற்றையும் மனம்விட்டுப் பாராட்டுங்கள்.
8. நன்றி சொல்லுங்கள்.
திருப்பலி முடிந்து அவர் வெளியே வரும்போது நீங்களும் அங்கே நிற்க நேர்ந்தால், 'ஃபாதர் திருப்பலிக்கு நன்றி!' என்று சொல்லுங்கள். 'இதைவிட அவருக்கு வேற என்ன வேலை இருக்கிறது!' என நீங்களே சொல்லிக்கொண்டு ஒதுங்கிவிடாதீர்கள்.
9. புறணியைக் குறையுங்கள்.
பலவீடுகளின் உணவறை பேசுபொருள் பங்குத்தந்தையர்தான். அவரின் குடும்ப பின்புலம், பழைய வாழ்க்கை, பலவீனம் இவற்றைப் பற்றி நீங்கள் கேள்விப்படும்போது அதைக் கண்டுகொள்ளாமல் விடுங்கள். பிறப்பிலேயே மாசுமறுவற்றவர்கள் அல்லர் அவர்கள். உங்களைப் போல ஒரு குடும்பத்தில் பெற்றோருக்குப் பிள்ளையாக, சகோதரர்களுக்குச் சகோதரராக, உடலில் சதை மற்றும் எலும்புகளோடு பிறந்தவரே அவர். அவரும் நோய்வாய்ப்படுவார். அவருக்கும் விடுமுறை தேவை. அவரின் இல்லங்களிலும் நடக்கும் நல்லது, கெட்டதற்கு அவர் போகத்தான் வேண்டும்.
10. சாய்ந்து கொள்ள உங்கள் முதுகு இருக்கிறது என்று சொல்லுங்கள்.
பங்குத்தந்தையை வாட்டும் ஒரு பெரிய எதிர்மறை உணர்வு பாதுகாப்பின்மை. சில நேரங்களில் மறைமாவட்ட ஆயரும் அவரைக் கண்டுகொள்ள மாட்டார். சகோதர குருக்களும் துணைவர மாட்டார்கள். அந்த நேரத்தில் என்னுடன் என் பங்கு மக்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவருக்கு எவ்வளவு பாதுகாப்பைத் தரும். நீங்கள் ஒருவேளை அவரது அம்மாவாக இருந்தால் ஆபத்தில் விட்டுவிடுவீர்களா? உங்கள் பங்குத்தளத்தில் அவர் உங்கள் மகன்தானே!
11. உறவுகொண்டிருங்கள்! ஆனால் ஊருக்கெல்லாம் சொல்லாதீர்கள்!
உங்கள் பங்குத்தந்தையோடு உறவு கொண்டிருங்கள். ஆனால் அவரது பணியைச் செய்ய விடுங்கள். அவரின் தனிமையை மதியுங்கள். 'நானும் அவரும் ரொம்ப க்ளோஸ்' என்று சொல்லிக் கொண்டிருப்பது, சக இறைமக்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துவதோடு, கசப்புணர்வையும், பகைமையையும். பொறாமையையும் வளர்த்துவிடும்.
12. உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.
உங்களின் வீட்டு கொண்டாட்டங்கள், இழப்புகள் அனைத்திலும் அவரை ஒரு பகுதியாக்குங்கள். 'எல்லார் வீட்டுக்கும் எப்படிப் போவது!' என்று அவர்கள் மலைத்தாலும், எல்லா வீட்டுக்கும் போய்த்தான் பார்க்கலாமே!

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *