கதை: உள்ளம் நிறைவு அடையாமல் உள்ளவர்களே ஏழை


உண்மையான ஏழை யார் ?.... 

அரசன் ஒருவன் பெரிய படை திரட்டி பக்கத்து நாட்டை வெல்வதற்கு பனி படர்ந்த மலைகளின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் உடலில் உடை ஏதும் இல்லாமல் இருந்த துறவி ஒருவரைப் பார்த்தான். ஆளைக் கொல்லும் இந்த குளிரில் ஆடை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று விலை உயர்ந்த தன் போர்வையை கழற்றி அவரிடம் தந்தான்.

ஆனால் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து, இந்தக் குளிரைத் தாங்க இறைவன் எனக்கு போதுமான உடைகளைத் தந்து இருக்கிறான். என்னால் ஆடை இல்லாமல் இந்த குளிரைத் தாங்க முடியும். யாராவது ஏழைக்கு இந்தப் போர்வையை தாருங்கள் என்றார்.

அவர் உடலில் எந்த ஆடையும் இல்லை. சொந்தமாக எந்த பொருளும் இல்லை. இவரை விட ஏழையை எங்கே தேடித் கண்டுபிடிப்பது என்று நினைத்து, அவன் ஐயா! உங்களை விட ஏழையை நான் எங்கே கண்டுபிடிக்க முடியும்? என்று கேட்டான். 

அரசே  நீ எங்கே செல்கிறாய்? என்றார் அவர். 

பக்கத்து நாட்டை வென்று என் நாட்டுடன் சேர்த்துக் கொள்வதற்காக படையெடுத்துச் செல்கிறேன் என்றான். 

சிரித்த துறவி ஒரு நாட்டிற்கு அரசனாக இருந்தும் நீ நிறைவு அடையவில்லை. உன் உயிரையும் பல ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து பக்கத்து நாட்டை உன் நாட்டுடன் சேர்க்க முயற்சி செய்கிறாய். என்னை விடப் பெரிய ஏழை நீ தான். இந்தப் போர்வையை நீயே வைத்துக்கொள். உனக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது என்றார் அவர். 

தலைகவிழ்ந்த அரசன் அவரை வணங்கினான். "ஐயா என் கண்களைத் திறந்துவிட்டீர். 'உள்ளம் நிறைவு அடையாத நிலையில் உள்ளவர்களே ஏழை' என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். இனி எந்த நாட்டின் மீதும் படையெடுக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டுத் தன் படைகளுடன் நாடு திரும்பினான்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *