மாற்றத்தை உருவாக்க தங்களிடம் இருந்து தொடங்க வேண்டும்


அது தவறு, இது தவறு, அவன் தப்பு பண்றான், இவன் தப்பு பண்றான் என நாள் முழுவதும்  குறை கூறி விட்டு நாமும் அதையே செய்து வருகின்றோம்...

யார் செய்வது தவறு, யார் மாற வேண்டும் என்பதே கேள்வி...

எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறி விட முடியாது.. ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றால் முதலில் அதற்கான தகுதி நமக்கு வேண்டும்.

எந்த  செயலிலும் நாம் முன் மாதிரியாக இருந்தால் தான் நம் வார்த்தைக்கு மரியாதை இருக்கும்...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு பிரார்த்தனை செய்து கொண்டே, நிரம்பி வழியும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தான் மூன்று குழந்தைகளைப் பெற்ற தகப்பன்...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைக்கு பரிதாபப்பட்டுக் கொண்டே 16 பள்ளிக் குழந்தைகளைத் தன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செல்கிறார் ஆட்டோ ஓட்டுநர்.

போர்வெல்லை மூடாதவர்களைத் திட்டிக் கொண்டே செல்போனில் பேசியபடி பைக்கை ஓட்டிச் சென்றார் வாகன ஓட்டுனர்...

லஞ்சம் வாங்கிக் கொண்டு தரமற்ற பள்ளி பேருந்துக்கு சான்றிதழ் கொடுத்து விட்டு, ஓட்டை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்க கிளம்பி விட்டார் ஒரு அதிகாரி.

சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக் கொண்டே பாதையின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரின் கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினான் ஒரு சாமானியன். 

மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக் கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பவனை வீடியோ எடுத்து வைரலாக்கினார் ஒரு நல்லவன்...

மக்கள் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் வரை இப்படித் தான் இருக்கும் என்று திட்டி விட்டு, 50,000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பணியிட மாற்றம் வாங்குகிறான் ஒருவன்.

நாட்டின் பொருளாதாரம் சரிந்து போனதால் மனம் உடைந்து, தினமும் 500 ரூபாய் டாஸ்மாக்-க்கு தண்டச் செலவு செய்கிறான் ஒரு குடிமகன்.

நீர் வாங்கவும், பீர் வாங்கவும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே, தொழிற்சாலைகளால் தான் காற்று மாசு ஏற்படுகிறது என்கிறான் ஒருவன். 

அடுத்தவர் முதுகைப் பார்த்து சிரிக்கும் யாரும் தன் முதுகை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை..

முன்னெச்சரிக்கை (என்ற வார்த்தை) இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. சில சம்பவங்களைப் பார்க்கும் போது..

இதுவும் கடந்து போகும். இதைவிட பெரிய நிகழ்வு நடந்தால் நாம் அதை விமர்சனம் செய்யத் தயாராகி விடுவோம்..

தனிமனித ஒழுக்கம் போற்றப்படும் வரை நமக்கும் பொழுது போக்குக்கும் பஞ்சம் என்றும் இருக்காது.. மாற்றத்தை உருவாக்க விரும்புபவர்கள் தங்களிடம் இருந்து தொடங்க வேண்டும்..

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *