ஆடி மாத ஆச்சரியம் ஆடிக் கழிவு என்றால் என்ன


ஆடி மாத ஆச்சரியம்: 'ஆடிக் கழிவு' என்றால் என்ன? நீங்கள் அறியாத உண்மை!

ஆன்மிக விசேஷங்களின் துவக்க மாதமாக ஆடி விளங்குகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய பண்டிகைகளுடன் சேர்த்து ‘ஆடிக் கழிவு’ எனப்படும் சலுகை விலை விற்பனையும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆடிக் கழிவு என்பதன் உண்மைப் பொருள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஆடி மாதத்தில் தனது வீட்டில் யாராவது சிறு குழந்தைகள் இறந்து போயிருந்தால் அதற்கான வழிபாட்டை தவறாமல் அவர்கள் செய்து வழிபடுவது உண்டு. ஏதாவது ஒரு ஆடி வெள்ளிக்கிழமையில் இறந்தவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து, புதுத் துணி வாங்கி வைத்து, காதோலை, கருகமணி போன்றவற்றையும் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். இறந்து போன சிறுமியாய் இருந்தால் ஆரம்பத்தில் கவுனையும், வருடமாக ஆக அவள் வளர்ந்து விட்டிருப்பாள் என்ற நம்பிக்கையில் புடைவையையும் வைத்துப் படைத்து ஏழை, எளியோர்க்கு அதை தானம் செய்வது பலரது வழக்கமாக உள்ளது.

இதனுடன் சேர்த்து மூத்தோர், முன்னோர்களுக்குப் பிடித்ததையும் செய்து வைத்து, புதுத் துணிகள் வாங்கி வைத்துப் படைத்து, இயன்ற அளவு சாப்பாடு போடுவது, தான தர்மங்கள் செய்வது அன்றைய நாளில் கிராமங்களில் அனைவர் வீட்டிலும் நடைபெறும் நடைமுறை வழக்கம். இதையும் ‘ஆடிக் கழிவு’ என்றே கூறுவர். இதனால் முன்னோர் ஆசீர்வதிப்பர் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

துக்கம் நடந்தவர்களின் வீட்டில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால், ‘இந்த வருடம் ஆடிக் கழிவை நன்றாகக் கும்பிட்டாயா? குறை ஒன்றும் வைக்கவில்லையே?’ என்றுதான் அவர்களைப் பார்ப்பவர்கள் கேள்வி எழுப்புவார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த ஆடிக் கழிவு கருதப்படுகிறது. இந்த வழிபாட்டால் நம் மூதாதையர்கள் நமது நலன்களில் அக்கறை கொண்டு நம்மை வழி நடத்தி வாழ்த்துவர். இதனால் சந்ததிகள் மேன்மையுடன், நோய், நொடியின்றி நீண்ட ஆயுளுடன், எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

மூதாதையரை நினைத்து திதி கொடுக்காமல் இருப்பவர்களும், மற்றவர்களும் கூட அன்றைய தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது வழக்கமாக இருந்து வருகிறது. சிலர் இந்த தினத்தில் கடலில் நீராடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அன்று விரதம் கழிக்கும்பொழுது மூதாதையர் காக்கை வடிவில் வருவதாக நினைத்து அன்று காகத்திற்கு உணவளிக்காமல் யாரும் இந்த விரதத்தைக் கழிப்பதில்லை. அதிலும் காகம் நன்றாக உணவருந்தி விட்டால் நம்முடைய பிரார்த்தனையை முன்னோர்கள் ஏற்றுக் கொண்டதாக சகுனம் பார்ப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இதேபோல், அனைவருமே ஆடி மாதத்தில் வரும் அனைத்து பண்டிகைகளையும், குறிப்பாக நீத்தார் கடன் செய்வதை முழு மனதுடன் செய்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதை பெரும்பேறாக எண்ணி வழிபடுகின்றனர்.

No comments:

Post a Comment

Comment usefully. Comments are checked for spam.

Contact Form

Name

Email *

Message *