சிலுவை அடையாளம்:
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்
தூய ஆவி செபம்:
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும்.
விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருட்சுடரை எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருளுவீர்.
நன்கொடை வள்ளலே வந்தருளுவீர். இதய ஒளியே, வந்தருளுவீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மை தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே,
உம்மை நம்புவோரின் இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவுமில்லை.
மாசு கொண்டதை கழுவிடுவீர்.
வரட்சி உற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்.
குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப்போனதை ஆண்டருளுவீர்.
இறைவா, உம்மை நம்பும் அனைவருக்கும் உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணிய பலன்களையும் வழங்கிடுவீர்.
இறுதியில் மீட்பை அளித்து அழிவில்லா இன்பமும் அருள்வீரே. - ஆமென்.
![]() |
புனித ஜெபமாலை புதிய வடிவம் |
துவக்க செபம்:
அளவற்ற அன்பும், நன்மையும் கொண்ட இறைவா! சாதாரண எளிய மனிதராயும், நன்றியறியாத பாவிகளாயும் இருக்கிற அடியோர், மாட்சியும் புகழும் கொண்ட உமது திருமுன் ஜெபம் செய்ய தகுதியற்றவர்களாய் இருந்தாலும், உமது அளவற்ற இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு, உமக்குப் புகழ்ச்சியாகவும், அன்னை மரியாவுக்கு வாழ்த்தாகவும் ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும் செய்ய ஆவலாய் இருக்கிறோம். இந்தச் செபத்தை பக்தியோடு செய்ய அருள்தாரும்.
விசுவாச அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்பு
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்லதந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.
அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.
இவர் தூய ஆவியாரால் கருவாகி / தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.
தூய ஆவியாரைநம்புகிறேன்.
தூய கத்தோலிக்கத் திருச்சபையையும்/ புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.
பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
நிலை வாழ்வை நம்புகிறேன். ஆமென்.
கிறிஸ்து கற்பித்த செபம் (புதிய வடிவம்):
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித ஆரோக்கிய அன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.
புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித ஆரோக்கிய அன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
# அருள் நிறைந்த மரியே வாழ்க!
3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித ஆரோக்கிய அன்னையே, எங்களிடம் அன்பு வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
# அருள் நிறைந்த மரியே வாழ்க!
திரித்துவப் புகழ் (புதிய வடிவம்)
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும்:
(ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்.)
செபமாலை மறை பொருள்கள்:
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனி & திருவருகைக்காலம் மற்றும் கிறிஸ்துப் பிறப்புக் கால ஞாயிறு)
1. (லூக்கா 1: 26-38) கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.
2. (லூக்கா 1: 39-56) கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
3. (லூக்கா 2: 6-20) இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
4. (லூக்கா 2: 22-32) இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
5. (லூக்கா 2: 41-52) காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
துயர் மறை உண்மைகள்: (செவ்வாய், வெள்ளி & தவக்கால முதல் ஞாயிறு முதல் குருத்து ஞாயிறு வரை)
1. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக! லூக் 22:39-46
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து வாழும் வரம் கேட்போமாக! லூக் 23:16-22
3. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக! மாற் 15:16-20
4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக! லூக் 23: 26-32
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக! மத் 27: 33-54
மகிமை நிறை மறை உண்மைகள்: (புதன் & பொதுக்காலம் மற்றும் பாஸ்கா கால ஞாயிறு)
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக! மத் 28: 1-10
2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக! மாற் 16: 19-20
3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக! திரு. பணி 2:1-41
4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக ! திரு.வெளி12:1
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக ! திரு.வெளி 12:1
ஒளி நிறை மறை உண்மைகள்: (வியாழக்கிழமை)
1. இயேசு யோர்தான ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக ! லூக் 3:15-22
2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக ! யோவா 2:1-12
3. இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக! மத் 5:1-16
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக ! மாற் 9:2-10
5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும், நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக ! யோவா 6:33-59
அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே, ரபேலே! அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே, அனைத்து புனிதர்களே, புனிதைகளே! நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் தோதிரங்களோடே ஒன்றாகக் கூட்டி புனித தேவமாதாவின் திருப்பாதத்தில் பாதகாணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக்கொள்கிறோம். ஆமென்.
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே – 1
அருள் நிறைந்த மரியே வாழ்க! – 3
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
புனித ஆரோக்கிய அன்னை பிராத்தனை
முத: ஆண்டவரே இரக்கமாயிரும் எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும் எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
முத: ஆண்டவரே இரக்கமாயிரும் எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.
முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: தூய ஆவியாகிய இறைவா எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: மூவொரு கடவுளாகிய இறைவா எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: பிறப்புநிலைப் பாவமில்லாமல் உற்பவித்தத் தூய ஆரோக்கிய அன்னையே
முத: உலகம் படைக்கப்படுமுன் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: இன்ப வனத்தில் முதல் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: பாவ இருளை அகற்றுகின்ற ஞான ஒளியானத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: விடிவெள்ளி என இறைவாக்கினரால் போற்றப்படும் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: மனுக்குலத்துக்கு அருள்மழை பொழியும் மேகமானத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: எல்லா நன்மைத்தனத்துக்கும் பாத்திரமானத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: முதுபெரும் தந்தையர்களால் தூயவள் என அழைக்கப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே
முத: அகங்காரப் பேயின் தலையை மிதித்தத் தூய ஆரோக்கிய அன்னையே
முத: இஸ்ராயேலரின் பதினாறு அரச குலங்களுள் சிறப்புற்றக் குலத்தில் உதித்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: பேறுபெற்ற அன்னம்மாள் சுவக்கீனின் திருமகளாகப் பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: அவர்களின் வேண்டுதல்களாலும் நற்செயல்களாலும் இறைவனின் அன்புக் குழந்தையாகப் பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: தூதர், புனிதர் அனைவருக்கும் மேலாக நிறைந்த அருள் ஒளியோடு பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: படைப்புப் பொருட்கள் அனைத்திற்கும் மேலாக இறைவனுக்கு மகிமையளிக்கப் பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: விண்ணகமும் மண்ணகமும் போற்றிடும் அழகுடன் பிறந்தத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: இறைவனின் கொடைகளை எல்லாம் பெற்றுத் தரும் இறை குலக்கொழுந்தானத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: எல்லாக் காலத்திற்கும் இறைவனின் திருமுன் இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: தூய்மையின் வழியில் எல்லாப் புனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: பிறப்பின் போது விண்ணக ஒளியால் சுடர்விட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: மனிதக் குலத்தின் மகிழ்ச்சியாக விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: பிறந்தவுடன் விண்ணகத் தந்தைக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: உமது அழகுக்கு ஏற்ப மரியா என்னும் புதிய பெயர் சூட்டப்பெற்றத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: என்றும் கன்னியாக விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே
முத: ஆலயத்தில் அனைவருக்கும் ஆசிரியையாக விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: நோயுற்றோரின் துன்பத்தை அகற்றி நலமருளும் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாதத் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: புனிதர்களின் விண்ணக முடியென விளங்கும் தூய ஆரோக்கிய அன்னையே…
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே
எல்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
செபிப்போமாக! விண்ணகத் தந்தையே இறைவா, தூய கன்னித் தாயாகிய அன்னை மரியாவை எல்லா அருட்கொடைகளாலும் அலங்கரித்து, உமது திருமகனைப் பெற்று, அமுதூட்டி வளர்க்கும் தாயாக முன்னரே தெரிந்து கொண்டீரே. இந்த உத்தமத் தாய் எங்களுக்காக மன்றாடிக் கேட்கும் விண்ணப்பங்களை நாங்கள் அடைந்து, வறுமை, பிணி போன்ற துன்பங்களிலிருந்து பாதுகாக்கப் படுவோமாக. இந்தத் தாயின் வழியாக ஆரோக்கியமும், எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் பெற்றவர்களாய் தூய்மையின் வழி நடந்து, விண்ணக வாழ்வைப் பெற்றுக் கொள்ள அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
கிருபை தயாபத்து மந்திரம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை / எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு / உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய / பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!
முத: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி /
எல்: இறைவனின் தூய அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
செபிப்போமாக!
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் / தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே / தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க / ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் / அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே / இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் / நித்திய மரணத்திலேயும் நின்று / இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் / ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும்.
கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.
அவதரித்த வார்த்தையின் தாயே, எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே ஆமென்
2-வது செபம்
ஓ மரியே, மீட்பின் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக, நீர் எப்போதும் எம் பாதையில் சுடர்விடுகின்றீர், நோயாளிகளின் நலவாழ்வை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். சிலுவையடியில் இயேசுவின் பாடுகளோடு உம்மை இணைத்துக்கொண்டீர், உமது விசுவாசத்தைக் காத்தீர், உரோம் மக்களின் மீட்பரே தாயே, எமது தேவை என்னவென்று உமக்குத் தெரியும், இறையன்பு அன்னையே, எமக்கு உதவியருளும், சோதனை துன்ப வேளைகளில் எம் மன்றாட்டை புறக்கணியாதேயும், எம்மை எல்லாவித ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும், மகிமையுள்ள கன்னியே, பேறுபெற்றவரே. ஆமென்.
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்
All South Tamil Actress Rashi Khanna with Photos Heroine Hd Hot Pictures Gallery
No comments:
Post a Comment
Comment usefully. Comments are checked for spam.